குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஏற்ற அடுக்குமாடி அமைப்புகள்
நகர்ப்புற குடியிருப்புகளின் வளர்ச்சி என்பது உயரமான கட்டுமான அமைப்புகள் என்று மாறிவிட்டது. சென்னை போன்ற பெருநகர் பகுதிகளில் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்குகள் கொண்ட கட்டிடங்களை விடவும் பல அடுக்கு மாடிகள்தான் இப்போது கட்டப்படுகின்றன.
நகர்ப்புற குடியிருப்புகளின் வளர்ச்சி என்பது உயரமான கட்டுமான அமைப்புகள் என்று மாறிவிட்டது. சென்னை போன்ற பெருநகர் பகுதிகளில் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்குகள் கொண்ட கட்டிடங்களை விடவும் பல அடுக்கு மாடிகள்தான் இப்போது கட்டப்படுகின்றன. நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில், குழந்தைகளுக்காக செய்ய வேண்டியவை பற்றி கூடுதல் கவனம் தேவை என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குட்டி பசங்களின் பாதுகாப்பு
அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள குட்டி பசங்கள் கதவு இடுக்கில் கைகளை சிக்க வைத்துக்கொள்ளுவது, படிக்கட்டுகளில் தவறி விழுவது, படிக்கட்டு கைப்பிடி அமைப்புகளின் இடைவெளியில் தலை மாட்டிக் கொள்வது, மேஜை, சோபா, கிச்சன் மேடைகள் போன்றவற்றிலிருந்து விழுவது, தரையில் வழுக்கி விழுவது, சன்ஷேடுகள் மேலிருந்து கீழே குதித்து விளையாடுவது மற்றும் மின்சார கருவிகளால் பாதிப்பு ஆகிய சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள். குழந்தைகள் பாதுகாப்பு என்பது பல நிலைகளை கொண்டது என்ற அடிப்படையில் அவற்றில் உள்ள முக்கியமான தகவல்களை காணலாம்.
* குழந்தைகளை எல்லா நேரங்களிலும் தனியாக ஒரு அறையில் இருக்கும்படி விடக்கூடாது. அவர்களுக்கு தனி அறை இருந்தால் படிப்பு மேஜை, கட்டில் ஆகியவற்றை ஜன்னலை ஒட்டியவாறு போடக்கூடாது.
* ஜன்னல்களுக்கு உறுதியான கிரில் அமைப்புகள் பொருத்தப்பட்டு, வெளிப்புறமாக திறக்கும்படி அமைந்திருப்பதே பாதுகாப்பானது. வீட்டின் முன் பக்கம் அல்லது பால்கனி ஆகிய பகுதிகளில் அதிகமான திறப்புகள் அமையக்கூடாது. மேலும், படிக்கட்டு கைப்பிடி அல்லது பால்கனி கைப்பிடி ஆகியவற்றில் 4 அங்குல அளவிற்கும் அதிகமான திறப்பு அல்லது இடைவெளி இருப்பது கூடாது.
* அடுக்குமாடி வீட்டின் நுழைவாசலுக்கு எதிர்ப்புறத்தில் படிக்கட்டு அல்லது லிப்டுகள் அமைந்திருக்கலாம். வீட்டின் கதவு திறந்திருக்கும் நேரங்களில் குழந்தைகள் அந்த பகுதிகளுக்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. அதனால், நுழை வாசலில் தக்க தடுப்புகள் அவசியம்.
* காரிடார், வராண்டா, கார்டன், நீச்சல் குளம், பார்க்கிங் ஏரியா மற்றும் வாகனங்கள் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே ஸ்பீடு பிரேக்கர் அமைப்பு இருக்க வேண்டும். மேலும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாகனங்களுக்கான பாதைகளில் குழந்தைகள் தன்னிச்சையாக செல்வதை அனுமதிக்கக்கூடாது.
* பழைய பொருட்கள், உடைந்த மர சாமான்கள், பூந்தொட்டிகள் ஆகியவற்றை பால்கனிகளில் வைக்கப்படுவது பல இடங்களில் வழக்கம். குழந்தைகள் அவற்றின்மீது ஏறி கீழே எட்டி பார்க்கும் வாய்ப்பு இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், நாற்காலிகள், மேஜை ஆகியவை அங்கே இருந்தால் அவற்றின் மீதும் குழந்தைகள் ஏறி நிற்கும் வாய்ப்புகள் உள்ளன.
* வீடு அல்லது குடியிருப்புகளின் மேல்மாடி பற்றி கூடுதல் கவனம் வேண்டும். குட்டி பசங்கள் அவர்களாகவே படிக்கட்டுகளில் ஏறுவதையோ அல்லது மேல்மாடிக்கு போவதையோ அனுமதிக்கக்கூடாது. மாடிகளின் விளிம்பில் அமைக்கப்பட்டுள்ள கைப்பிடி சுவர்கள் போதிய உயரம் அல்லது தக்க தடுப்புகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
* புதியதாக வீடு வாங்குபவர்கள் வீட்டில் குழந்தைகள் இல்லாவிட்டாலும், உறவினர்களின் குழந்தைகள் வரலாம் என்ற நிலையில் வீட்டின் உள் கட்டமைப்புகளில் குழந்தைகளுக்கான அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டிருப்பது நல்லது.
* பால்கனியின் தளம் மற்றும் தடுப்பு சுவர் ஆகியவை இணையும் கார்னர் பகுதிகளில் அழகியல் காரணங்களுக்காக இடைவெளி விடப்படுவது வழக்கம். அதற்குள் குழந்தைகளின் கைகள் அல்லது கால்கள் மாட்டிக்கொண்ட சம்பவங்களும் இருக்கின்றன.
குடியிருப்புகள் குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய அனைவரும் உபயோகிக்கும்படி வடிவமைக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கான பாதுகாப்பு விஷயங்களை கடைப் பிடிக்க கூடிய கட்டிடங்களை உருவாக்குவதில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் முதலிடத்தில் இருக்கின்றன. உதாரணமாக, பால்கனிகளில் நைலான் அல்லது ஸ்டீல் கம்பி வலைகள் மற்றும் கண்ணாடி தடுப்புகள் பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் கண்ணாடி, கம்பி வலைகள் அதன் போல்ட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் தர சான்று பெற்றவையாக இருப்பதை உறுதி செய்து கொள்ளப்படும். குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் குழந்தைகள், முதியவர்கள், மாற்று திறனாளிகள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் ஏற்ற வகையில் அமைந்த கட்டிடங்களுக்கு மட்டுமே பணி நிறைவு சான்றிதழ்கள் அரசால் வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story