சொந்த வீடு-மனை அமைப்புக்கு அவசியமான வாஸ்து குறிப்புகள்


சொந்த வீடு-மனை அமைப்புக்கு அவசியமான வாஸ்து குறிப்புகள்
x
தினத்தந்தி 23 Feb 2019 7:45 AM GMT (Updated: 23 Feb 2019 7:45 AM GMT)

வீடுகள் உள்ளிட்ட இதர கட்டுமான அமைப்புகள் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டவை என்று வாஸ்து கூறுகிறது.

வீடுகள் உள்ளிட்ட இதர கட்டுமான அமைப்புகள் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டவை என்று வாஸ்து கூறுகிறது. அதனால், வாஸ்து நாளில் கட்டுமான பணிகளை தொடங்கினால், தாமதங்கள் இல்லாமல் நல்ல முறையில் அவற்றை செய்து முடிக்கலாம் என்பது பொதுவான நம்பிக்கையாகும்.

வாழ்நாள் சேமிப்புகள் மற்றும் வங்கி கடன் உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டு சொந்த வீடு என்ற இலக்கை நோக்கி செல்பவர்களுக்கு வாஸ்து சார்பான சந்தேகங்கள் ஏற்படக்கூடும். அதன் அடிப்படையில் வீடு-மனை சார்பான வாஸ்து மற்றும் ஜோதிட ரீதியான சில அடிப்படை தகவல்களை இங்கே காணலாம்.

வருடத்திற்கு எட்டு நாட்கள்

வருடத்தின் நான்கு உபய ராசி மாதங்களான ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில் வாஸ்து புருஷன் செயல்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. மற்ற சரம் மற்றும் ஸ்திரம் ராசி மாத நாட்களான சித்திரை-10, வைகாசி-21, ஆடி-11, ஆவணி-6, ஐப்பசி-11, கார்த்திகை-8, தை-12, மாசி-22 ஆகிய எட்டு நாட்களில் வ ாஸ்து புருஷன் செயல்படும் நிலையில் இருப்பதால் அந்த நாட்களில் பூமி பூஜை செய்து, கட்டுமான பணிகளை தொடங்கி செய்வது வழக்கத்தில் உள்ளது.

பூஜைக்கான நேரம்

மேற்கண்ட நாட்கள் எந்த வருடத்திலும் மாறுவதில்லை. அந்த எட்டு நாட்களில் வாஸ்து புருஷன் கண் விழித்துள்ள ஒன்றரை மணி நேரத்தை தந்தாபனம், ஸ்நானம், பூஜை, போஜனம், தாம்பூலம், சயனம் என்று 15 நிமிடங்கள் வீதம் ஆறு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் முக்கால் மணி நேரம் கழிந்து வரக்கூடிய போஜனம், த ாம்பூலம் ஆகிய குறிப்பிட்ட அரை மணி நேரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பூமி பூஜை செய்து, கட்டி முடிக்கப் பட்ட வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கையாகும்.

மேற்கண்ட தமிழ் நாட்களுக்கான ஆங்கில தேதிகள் மாறுபட்டும் அமையலாம். இந்த விஷயத்தில் தமிழ் தேதிகள் மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்பது முறை.

ஜோதிட ரீதியான அம்சங்கள்

நிலம், மனை மற்றும் பூமிகள் ஆகிய நிலைகளை செவ்வாய் என்ற கிரகம் குறிப்பிடுகிறது. கட்டிட வடிவம், உள் கட்டமைப்பு மற்றும் வீட்டின் சூழல் ஆகியவற்றை சுக்கிரன் என்ற கிரகம் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் உள்ள செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒருவரது வீடு மற்றும் மனை அமைப்பை தீர்மானம் செய்கின்றன என்பது கணக்கு. அதாவது, மனையை வாங்கி சொந்தமாக வீடு கட்டுவதற்கும், கட்டுமான திட்டத்தில் குடியிருப்பை வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் மேற்கண்ட இரு கிரகங்களின் பலத்தை சார்ந்தது.

சொந்த வீடு அமைப்பு

ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து நான்காம் வீடு, அதன் அதிபதியின் பலம் மற்றும் அவர் அமர்ந்த இடம் ஆகியவற்றை பொறுத்து அந்த கிரகத்தின் திசா-புக்திகளில் சொந்தமாக வீடு கட்டும் சூழல்கள் அமையலாம்.

லக்னத்திலிருந்து நான்காம் வீட்டிற்கு செவ்வாயின் தொடர்புகள் நல்லவிதமாக அமைந்த நிலையில் ஒருவருக்கு சொந்தமாக மனை அல்லது இடம் வாங்கும் சூழல் அமையும். லக்னத்திற்கு நான்காம் இடத்திற்கு சுக்கிரனின் நல்ல தொடர்புகள் அமைந்துள்ள நிலையில் வாடகை வீடாக இருந்தாலும் நல்ல உள் கட்டமைப்பு கொண்ட வீடாக அமையும்.

மேலும், நான்காம் வீட்டில் ராகு என்ற கிரகம் நல்ல விதமாக இருந்து, அந்த இடத்திற்குரிய கிரகத்தின் சக்திக்கேற்ப சொந்த மனை மற்றும் மாடி வீடு கட்டும் சூழல் ஏற்படும். சொந்த வீடு-மனை ஆகியவை அமைவதற்கான அடிப்படையான தகவல்களே இங்கு தரப்பட்டுள்ளன. மேற்கண்ட கிரக அமைப்புகளை தவிரவும் ஜோதிட ரீதியாக நிறைய கிரக அமைப்புகளின் தன்மைக்கேற்ப வீடு-மனை ஆகியவற்றை பெறும் சூழல் எற்படலாம் என்பது கவனிக்கத்தக்கது.

Next Story