மனம் கவரும் தரைத்தளத்தை உருவாக்கும் முப்பரிமாண டைல்ஸ்


மனம் கவரும் தரைத்தளத்தை உருவாக்கும் முப்பரிமாண டைல்ஸ்
x
தினத்தந்தி 23 Feb 2019 3:23 PM IST (Updated: 23 Feb 2019 3:23 PM IST)
t-max-icont-min-icon

அறிவியல் வளர்ச்சியால் உண்மையின் நிழலை நிஜம்போல் உருவாக்கி வீடுகளில் உலவ விட்டுள்ள கட்டுமான பொருள் தொழில்நுட்பமாக முப்பரிமாண டைல்ஸ் வகைகள் உள்ளன.

றிவியல் வளர்ச்சியால் உண்மையின் நிழலை நிஜம்போல் உருவாக்கி வீடுகளில் உலவ விட்டுள்ள கட்டுமான பொருள் தொழில்நுட்பமாக முப்பரிமாண டைல்ஸ் வகைகள் உள்ளன. இந்த முப்பரிமாண டைல்ஸ்களில் விரும்பும் காட்சியை உருவாக்கி வீட்டுக்குள் பதித்துக்கொள்ளலாம். நான்கு சுவர்களுக்குள் அமைக்கப்பட்ட பாதுகாப்பான இடமாக உள்ள வீட்டின் தரை என்பது ஐந்தாவது சுவராக கருதப்படுகிறது. அதனால், சுவர்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் தரை அலங்காரத்திற்கும் தரப்படும்.

கலை அம்சம் கொண்டவை

தரை மற்றும் சுவர்களின் அலங்காரம் வீட்டை அழகாக ஆக்குவதுடன், கலையம்சம் கொண்ட இடமாகவும் மாற்றுகிறது. பொதுவாக, நம்மில் பலர் விரும்புவது மார்பிள் மற்றும் கிரானைட் போன்றவைதான். ஆனால், தற்போது டைல்ஸ் வகைகளில் பல விதங்கள் சந்தையில் கிடைக்கின்றன. டைல்ஸ் என்பது வெவ்வேறு அளவுகளில் இருப்பதால் இட வசதிக்கேற்ப, விருப்பப்படி விதவிதமான டைல்ஸ் வகைகளை அறைகளுக்கு தகுந்தாற்போல் பதித்து கொள்ளலாம். அவற்றில் முப்பரிமாண டைல்ஸ் வகைகள் நமது பகுதிகளிள் தயாரிக்கப்பட்டாலும், குறைவாகவே பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

பட்ஜெட்டுக்குள் கிடைக்கும்

இப்பொழுது பிரபலமாக இருப்பது கண்ணைப் பறிக்கும் 3-டி என்ற முப்பரிமாண டைல்ஸ் வகைதான். தரைகள் மற்றும் சுவர்களில் பொருத்தக்கூடிய இவை இன்றைய மார்க்கெட்டில் நிறைய டிசைன்களில் கிடைக்கின்றன. அவை, மாடல், பாதுகாப்பு மற்றும் உறுதி ஆகியவை கொண்டதாகவும், பட்ஜெட்டுக்குள் அடங்குவதாகவும் இருக்கின்றன.

விதவிதமான டிசைன்கள்

கணினி வடிவமைப்புகள், பூக்கள், நீர் வீழ்ச்சி, ஆறு, பள்ளத்தாக்கு போன்ற பலவித வகைகள் இந்திய சந்தையில் கிடைக்கின்றன. குளியலறையில் மீன்கள், டால்பின்கள் துள்ளும் கடல் காட்சி கொண்ட டைல்ஸ்கள் பொருத்தினால், குளியலறை கடலுக்கு மத்தியில் உள்ளதுபோல் தோற்றம் தரும். சுவரின் ஓரங்களில் பல வண்ணங்கள் கலந்திருப்பது போன்றும், தரையில் தண்ணீர் ஓடுவது போன்றும் அழகிய நீல நிறத்தில் அமைந்து, தரை சற்று உயரமாக இருப்பது போன்ற டிசைன் டைல்ஸ்கள் தூரத்தில் நின்று பார்த்தால் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை தரும்.

குழந்தைகள் மனதை கவரும்

மேலும், குழந்தைகள் அறையில் வண்ணத்து பூச்சிகள், பூக்கள் கொண்ட ஒரு சிறிய தோட்டத்தின் காட்சிகள் கொண்ட அலங்கார டைல்ஸ் மூலம் அவர்களை குஷியாக்கலாம். அந்த டைல்ஸ்கள் அவர்களுக்கு கனவு உலகத்தில் வாழும் உணர்வை தருவதாக இருக்கும். ரங்கோலி என்று சொல்லக் கூடிய டைல்ஸ் வகைகள் அறை முழுவதும் கோலம் போட்டது போன்ற தோற்றத்தை அளிக்கின்றன.

இயற்கை காட்சிகள்

சமையல் அறைக்கு நல்ல பச்சை நிறம் கொண்ட மரங்கள், செடிகள் கொண்ட காடு அல்லது பழங்கள் கொண்ட மரம் போன்ற காட்சி அமைப்புள்ள முப்பரிமாண டைல்ஸ்கள் பொருத்தமாக இருக்கும். சமையலறை மற்றும் குளியல் அறைகளுக்கு ஏற்ப கலை நயத்துடன் கூடிய, கண்ணாடி போல் ஜொலிக்கும் கற்பனை திறன் கொண்ட டைல்ஸ் வகைகளும் சந்தையில் கிடைக்கின்றன.

இடத்திற்கு ஏற்ற அமைப்பு

பெரிய அளவில் மரத்தால் செய்யப்பட்டது போலவும், செராமிக் போன்ற அலங்காரமாகவும், சாட்டின் பினிஷ் போன்றும், தேன்கூடு போன்ற காட்சிகளுடனும் இவ்வகை டைல்ஸ் வகைகள் உள்ளன. அவை அறைகளின் சூழ்நிலையை மனதை கவரும் விதத்தில் மாற்றியமைப்பதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். ஒவ்வொரு இடத்திற்கும் பொருந்தும்படி தேவையான அளவு மற்றும் டிசைன்கள் கொண்டதாக தேர்வு செய்து பயன்படுத்தலாம். பளபளப்பாக இருந்தாலும் இவ்வகை டைல்ஸ்கள் வழுக்கும் தன்மை இல்லாதவை. அதாவது தக்க முறையில் அவை ‘கிரிப்’ கொண்டதாக அமைய அதன் மேற்பரப்பு வழுக்கும் தன்மையற்றதாக மாற்றப்பட்டிருக்கும்.

Next Story