நவீன வசதிகள் கொண்ட ‘ஸ்மார்ட் ஹோம்’ அமைப்பு


நவீன வசதிகள் கொண்ட ‘ஸ்மார்ட் ஹோம்’ அமைப்பு
x
தினத்தந்தி 23 Feb 2019 3:29 PM IST (Updated: 23 Feb 2019 3:29 PM IST)
t-max-icont-min-icon

பெருநகரங்களில் உள்ள வீடுகள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்படும் நவீன உள் கட்டமைப்புகளில் ‘ஸ்மார்ட் ஹோம்’ வசதியும் ஒன்று.

பெருநகரங்களில் உள்ள வீடுகள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்படும் நவீன உள் கட்டமைப்புகளில் ‘ஸ்மார்ட் ஹோம்’ வசதியும் ஒன்று. விரையத்தை தடுப்பது சேமிப்பதற்கு சமம் என்ற வகையில் ஸ்மார்ட் ஹோம் அமைப்புகள் மூலம் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை வேண்டிய வகையில் ‘ஆன்’ அல்லது ‘ஆப்’ செய்து கொள்ளலாம். அதனால் மின்சாரம் விரயமாவது தடுக்கப்பட்டு, மின் கட்டணம் எகிறாமல் இருக்கும்.

முன்கூட்டியே செயல்பட வைக்கலாம்

வெளியிலிருந்து வீட்டுக்குள் சென்ற உடன் ஏசி-யை ஆன் செய்தால் அறையில் போதுமான குளிர்ச்சி பரவ சிறிது நேரம் ஆகலாம். அதனால் வெளியிலிருந்து வீட்டுக்கு புறப்படும் நிலையில் ஏசி-யை இயங்கும்படி செய்து கொண்டால், அறைக்குள் நுழையும்போது சரியான குளிர்ச்சி பரவி இருக்கும். வெளியில் கிளம்ப நினைக்கும் நேரத்திற்கு அரைமணி முன்னதாகவே அதன் இயக்கத்தை நிறுத்திவிடவும் கட்டளை பிறப்பிக்க இயலும்.

மேலும், மின் விளக்குகளை இருந்த இடத்திலிருந்தே ‘ரிமோட் ஸ்விட்ச்’ செயல்பாடு மூலம் இயக்கவோ அல்லது நிறுத்தவோ செய்யலாம் அல்லது அரை மணி நேரம் கழித்து ஆன் அல்லது ஆப் செய்யவும் வசதிகள் இருக்கின்றன. அவற்றை வீட்டுக்கு வெளிப்புறத்திலிருந்தும் செயல்படுத்தி, வேண்டிய அறைகளில் மின் விளக்குகளை ஒளிரச்செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளியலறை பயன்பாடுகள்

பாத்ரூமில் உள்ள குளியலறை தொட்டியில் வெந்நீரை நிரப்பவும், வெந்நீர் எந்த அளவுக்கு சூடாக இருக்க வேண்டும் என்பதையும் ஆணையாக கொடுத்து செயல்படுத்தலாம். அதற்கு மேல் சூடாக ஆகாதவாறு கட்டுப்பாட்டு கருவிகள் கவனித்து, வெந்நீர் தயாராகிவிட்ட தகவலை எழுத்து வடிவமாகவோ அல்லது குரல் வழியாகவோ தர வைக்கலாம். குளியலறை ஹீட்டர்களில் தானியங்கி கட்டுப்பாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டு இருப்பது வழக்கத்தில் இருக்கிறது. அவற்றையும் எப்போது இயங்க வேண்டும் என்பதை ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

எல்லைகளை விரிவாக்கலாம்

‘ரிமோட் கண்ட்ரோல்’ என்ற தொலைக்கட்டுப்பாடு மூலமாக கருவிகளை இயக்குவதும், நிறுத்துவதும் சாத்தியம். அதனால், விரைவாக அவை இயங்குவதுடன் பராமரிப்புகளும் குறைவாக அமைந்து நீண்ட காலம் பழுதாகாமல் செயல்பட வாய்ப்புகள் உள்ளன. வீட்டுக்குள் இருந்தபடி வெவ்வேறு சாதனங்களை இயக்கவும், இயக்கத்தை நிறுத்தவும் உதவும் ரிமோட் கண்ட்ரோலின் எல்லையை அடுத்த தெரு, அடுத்த ஊர், அடுத்த மாவட்டம் என்று விரிவடைய செய்யலாம். வீட்டிலிருந்து தொலை தூரத்தில் உள்ள நிலையிலும் அறைகளில் உள்ள சாதனங்களை கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர் நெட்வொர்க் மூலம் எல்லைகளை விரும்பும் வகையில் அதிகரித்துக் கொள்ளலாம்.

மின்னழுத்த மாறுபாடுகள்

இன்றைய சூழலில் நகர்ப்புற குடியிருப்புகளில் மின்சாரம் எல்லா நேரங்களிலும் ஒரே சீரான அளவில் சப்ளை ஆவதில்லை. பல்வேறு காரணங்களால் மின் அழுத்த மாறுபாடுகள் ஏற்பட்டு வீட்டிலுள்ள விலை உயர்ந்த சாதனங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. குறைந்த மின்சார செலவில் இயங்கும் உபகரணங்களை தேர்வு செய்து இயக்கி செலவுகளை கட்டுப்படுத்தலாம். வை-பை, ப்ளூ-டூத், கிளவுடு என்ற முறைகளில் அவற்றை எளிதாக செயல்படுத்தி, மின் அழுத்த வேறுபாடுகளை கண்டறிந்து சிக்கல்களை தவிர்க்கலாம். தேவைப்படாத சமயங்களில் வீட்டின் மின்சார மற்றும் மின்னணு சாதனங்களின் இயக்கத்தை நிறுத்த ஐ-பேடு, ஐ-போன், ஸ்மார்ட் போன் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மின்சார அளவீடு

மேலும், வீட்டில் எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற தகவல்களை ஸ்மார்ட்போன் திரையில் மீட்டர்களை போலவோ, வரைபடங்களாகவோ பார்க்க இயலும். நாள் முழுவதும் எவ்வளவு செலவாகிறது, எப்போது குறைவாக ஆகிறது என்பதை கவனித்து அறிந்து தேவைக்கேற்ப செட்டிங் அமைப்புகளையும் மாற்றிக்கொள்ளலாம்.

Next Story