உலக நாடுகளின் எளிமையான குடியிருப்புகள்


உலக நாடுகளின் எளிமையான குடியிருப்புகள்
x
தினத்தந்தி 23 Feb 2019 10:42 AM GMT (Updated: 23 Feb 2019 10:42 AM GMT)

வீடு என்பது அடிப்படையான வாழ்வியல் தேவை என்ற நிலையில் பல்வேறு உலக நாடுகளில் உள்ள பழங்குடியினர் மற்றும் வெவ்வேறு சமுக அமைப்பை சார்ந்த மக்கள் எளிய குடியிருப்புகளை அமைத்து வசித்து வருகிறார்கள்.

வீடு என்பது அடிப்படையான வாழ்வியல் தேவை என்ற நிலையில் பல்வேறு உலக நாடுகளில் உள்ள பழங்குடியினர் மற்றும் வெவ்வேறு சமுக அமைப்பை சார்ந்த மக்கள் எளிய குடியிருப்புகளை அமைத்து வசித்து வருகிறார்கள். அவை பல கட்டுமான நுட்பங்களை உலகத்துக்கு தெரிவிக்கும் வகையில் உள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பழங்குடி மக்களின் அத்தகைய குடியிருப்புகள் பற்றிய சுவாரசியமான செய்திகளை இங்கே காணலாம்.

மங்கோலியாவின் ‘யூர்ட்’

மங்கோலியாவில் காணப்படும் ஒரு வகையான வீட்டின் பெயர் யூர்ட் (Yurt) ஆகும். இவ்வகை வீடுகள் மரச்சட்டங்கள், தடிமனான பாய்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றன. இந்த வீட்டுன் அனைத்து பாகங்களையும் தனித்தனியாக அகற்றி, குதிரையில் ஏற்றி எடுத்து செல்லும் அளவுக்கு எளிமையான அமைப்புகளாகும்.

கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை துணி முக்கியமான கட்டுமான பொருளாக உள்ளதால் அதை எளிதாக வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். மத்திய ஆசியா மற்றும் மங்கோலியாவில் உள்ள ஸ்டெப்பி புல்வெளிகளில் வாழும் நாடோடி மக்களின் பாரம்பரிய குடியிருப்பாக இவ்வகை வீடுகள் இருந்து வருகின்றன. நீளமான மரத்துண்டுகளை செங்குத்தாக நிறுத்தி, வட்ட வடிவ சட்டத்தின் மேல்பரப்பில் செம்மறி ஆட்டு உரோமத்தால் உருவான கம்பளி துணியால் போர்த்தப்பட்டு இவ்வகை வீடுகள் உருவாகின்றன. செம்மறி ஆட்டு உரோமம், வீட்டுக்கான சட்டங்கள் அமைப்பு, இரண்டு ஜன்னல்கள், கதவு நிலை, கூரைக்கான வளைகள் ஆகியவையே ஒரு வீட்டின் மொத்த கட்டுமான பொருள்களாகும்.

சில வகை ‘யூர்ட்’-களில் கம்பளி போர்வையை தாங்கி நிற்க கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு தூண்களும் அமைக்கப்படுவதும் உண்டு. அவற்றின்மீது பல துண்டுகளாக இருக்கும் கம்பளி துணி அல்லது கிடைப்பதை பொறுத்து கான்வாஸ் துணி ஆகியவற்றால் போர்த்தப்பட்டு, நார் கயிறுகள் மூலம் சட்டத்துடன் சேர்த்து வலுவாக கட்டப்படும். மேலே போர்த்தப்பட்டுள்ள துணியின் எடை மற்றும் கூம்பு வடிவம் ஆகியவற்றால் வீடு நிலத்தில் உறுதியாக இருக்கும். போதிய எடை இல்லாத வீடுகளில் தேவைக்கேற்ப அதன் கூரையின் மையப்பகுதியில் இருந்து கனமான பொருட்கள் தொங்க விடப்படும். மேலும், வீடுகளின் அளவுகள், கூரை மரங்களின் அமைப்பு ஆகியவற்றில் சூழலுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும்.

வட அமெரிக்க பழங்குடியினரின் ‘டீப்பீ’

செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்படும் வட அமெரிக்காவின் பூர்வ குடிமக்களின் குடியிருப்புகளாக அறியப்பட்ட ‘டீப்பீ’ (TeePee) என்ற சொல்லுக்கு குடிசை என்று அவர்களது மொழியில் அர்த்தம். கூம்பு வடிவமாகவும், உச்சியில் புகை போக்கி போன்ற அமைப்பிலும் இவை கட்டமைக்கப்படுகின்றன.

சமவெளிகளில் வாழும் அவர்கள் இவ்வகை வீடுகளை எளிதாக சுருட்டி தேவையான இடங்களுக்கு எடுத்து செல்ல ஏற்ற வகையில், நீண்ட கழிகள் மற்றும் விலங்குகளின் தோல் ஆகியவற்றால் உருவாக்குகிறார்கள். குளிர் காலத்தில் வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள கூடியதாகவும், கோடை காலத்தில் குளிர்ச்சியை அளிக்கும்படியும் கொண்ட உள்கட்டமைப்பு வசதிகள் இவ்வகை வீடுகளுக்குள் இருப்பது அறியப்பட்டுள்ளது. உள்ளே படுக்கையாக புற்களால் ஆன ஒரு திண்ணை போன்ற அமைப்பு இருக்கும். சமையலறை தக்க பாத்திரங்களுடன் உள் கட்டமைப்பாக இருக்கும். வீட்டை காலி செய்ய வேண்டுமென்றால் இவர்கள் வீட்டையே கழற்றி எடுத்துக்கொண்டு இன்னொரு இடத்துக்கு போவதே இவர்களது சமூக பழக்கம்.

நீலகிரியின் தோடர் ‘மந்து’

நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் பழங்குடியினரின் அரை வட்ட வடிவ வீடு ‘மந்து’ என்று அவர்களது மொழியில் சொல்லப்படுகிறது. இவ்வகை குடிசை வீடுகளுக்குள் நுழைய மிகச்சிறிய வாசல் வழியே தவழ்ந்து செல்லவேண்டும். இந்த அமைப்பு அவர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்கிறது. தவழ்ந்து செல்லும் அளவிற்கு வீட்டின் வாசல்களை கொண்ட மூங்கில் குடில்கள் குளிரை தடுப்பதற்கான ஏற்பாடாகவும் செயல்படுகிறது.

சங்க காலத்திலேயே வாழ்ந்தவர்கள் என்ற பெருமை பெற்ற பழங்குடி இனத்தவர்களான இந்த மக்களின் இருப்பிடமான ‘மந்து’ கட்டமைக்க பிரம்பு மூங்கில் மற்றும் சிலவகை புற்கள் ஆகியவையே முக்கியமான கட்டுமானப்பொருட்கள் ஆகும். மேல் பகுதியிலிருந்து ஆரம்பித்து தரைப்பகுதி வரையில் மூங்கில்களை கட்டமைத்து அவை பிரிந்துவிடாமல் இருக்க சிறு பிரம்புகளை இணைத்து கட்டப்படும்.

மொத்த கட்டமைப்பையும் வடிவமைத்த பிறகு புற்களை அழகாக அடுக்கி அவற்றை மெல்லிய பிரம்பினால் ஒழுங்கு மாறாமல் இறுக்கமாக பிணைத்து கட்டப்படும். இந்த வீட்டுக்கு ஜன்னல்கள் அமைக்கப்படுவதில்லை என்பதோடு கூரையின் உச்சியிலிருந்து உள்ளே வரக்கூடிய சூரிய ஒளியே அதற்கான வெளிச்சத்துக்கு ஆதாரம் ஆகும்.

எஸ்கிமோ மக்களின் ‘இக்லூ’

பனியால் இறுக்கமாக அமைக்கப்பட்ட எஸ்கிமோ மக்களின் பனி வீடு ‘இக்லூ’ என்று குறிப்பிடப்படுகிறது. இதற்குள் நுழைந்தால் குளிரின் பாதிப்பு இல்லாமல் கதகதப்பான சூழல் இருக்கும். அதாவது, ஆர்க்டிக், கிரீன்லாந்தின் துலெ உள்ளிட்ட பகுதிகளின் வெளிப்புற வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி சென்டிகிரேடு என்ற நிலையில் இவ்வீட்டின் உட்புறம் கதகதப்பாகத்தான் இருக்கும்.

வட துருவத்தில் வசிக்கும் இனூயிட் எனும் பழங்குடி எஸ்கிமோ மக்கள் அவர்களது மொழியில் இந்த வீடுகளை ‘இக்லூ‘ என்கிறார்கள். உறைந்த நிலையில் உள்ள பனிக்கட்டிகளை வெட்டியெடுத்து அவற்றின் மூலம் அரை வட்ட வடிவம் கொண்ட குடியிருப்பாக அமைத்துக்கொள்வதே இதன் கட்டுமான முறையாகும்.

பொதுவாக, இவற்றில் சிறியது, நடுத்தர அளவு, பெரியது என்ற மூன்று வகையான பனி வீடுகள் உள்ளன. சிறிய பனிக்கட்டி வீடுகள் தற்காலிக தங்குமிடமாக, அதாவது ஓரிரு இரவுகள் மட்டும் தங்குவதற்கு பயன்படும். நடுத்தர அளவு கொண்ட இக்ளூ வீடுகள் குடும்பமாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் ஒரே ஒரு அறை கொண்டிருக்கும். அடுத்தடுத்து பல வீடுகள் இப்படி அமைந்து அவை குடியிருப்பாக அல்லது கிராமமாக இருக்கும்.

மூன்றாவதான பெரிய பனிக்குடில் என்பது இரண்டு பகுதிகளை கொண்டதாக இருக்கும். ஒன்று தற்காலிகமாக தங்குவதற்கும் மற்றொன்று நிரந்தரமாக தங்குவதற்கும் பயன்படும். அவை ஐந்து அறைகள் கொண்டதாகவும், அதிகபட்சம் இருபது பேர்கள் தங்க ஏற்றதாகவும் இருக்கும். இக்லூ வீடுகளான இவ்வகை பனிக்குடில்களை சுரங்கப்பாதைகளின் மூலம் இணைத்து பல குடும்பங்கள் ஒன்றாக வசிப்பது உண்டு என்றும் அறியப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் ‘ஸ்டில்ட்கள்’

பல உலக நாடுகளில் ஆங்காங்கே உள்ள இவ்வகை கட்டமைப்புகள் ‘ஸ்டில்ட்’ வீடு ( Stilt House - கால்கள் கொண்ட வீடு) என்று குறிப்பிடப்படுகின்றன. சுமத்திரா, போர்னியோ தீவுகள் மற்றும் அன்றைய மலாயா ஆகிய தெகிழக்கு ஆசிய நாடுகளில் மக்கள் குடியிருந்த பாரம்பரிய வீடுகள் இவ்வகையில் அமைக்கப்பட்டன. கட்டமைப்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது இதன் அடிப்படை அம்சமாகும்.

நிலம் அல்லது நீர் மட்டத்துக்கு மேல் உயர்த்தி கட்டப்பட்ட இவ்வகை வீடுகளின் கால் அமைப்புகள் (அதாவது தூண்கள்) வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கவும், தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிகள் வீட்டுக்குள் வராமல் தடுக்கவும் உதவுகின்றன. நிழல் விழக்கூடிய வீட்டின் கீழ்ப்புறம் பொருள்களை சேமித்து வைக்கும் இடமாக பயன்படுத்தப்படும். பனி உறைந்த பகுதிகளில் அமைக்கப்படும் இவ்வகை வீடுகள் கால்கள் மீது கட்டப்படுகிறது. வீட்டின் கீழ்ப்புறத்தில் இருந்து உள்ள பனி வெப்பத்தால் உருகினால், வீடு கீழே தாழ்ந்து விடாமல் அதன் கால்கள் பாதுகாப்பாக செயல்படுகின்றன.

மரச் சட்டங்கள் மற்றும் பலகைகள் கொண்டு கட்டப்படும் இவ்வகை வீடுகள் விஸ்தாரமாக இருக்கும். ஆரம்ப காலங்களில் மரங்கள் கால்களாக பயன்படுத்தப்பட்டன. பின்னர் அவை கான்கிரீட் தூண்கள் கொண்டு அமைக்கப்பட்டன. தரையிலிருந்து சுமார் 5 அல்லது 6 அடி உயரத்தில் அமையும் வீட்டு கட்டுமானத்தில் உலோகப்பொருட்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. மூன்றிலிருந்து நான்கு அறைகள் கொண்ட இந்த வீட்டின் வரவேற்பறை பெரிதாக இருப்பதுடன், கிட்டத்தட்ட ஆறு ஜன்னல்கள் கூட அமைக்கப்பட்டிருக்கலாம்.

Next Story