ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு


ரியல்  எஸ்டேட்   துறைக்கு புதிய   சலுகைகள்   அறிவிப்பு
x
தினத்தந்தி 1 March 2019 10:30 PM GMT (Updated: 1 March 2019 10:08 AM GMT)

பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் பெரிதும் எதிர் நோக்கி வந்த வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் பெரிதும் எதிர் நோக்கி வந்த வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 33–வது கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை மீதான வரிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்ட வேண்டும் என்ற அடிப்படையில் ரியல் எஸ்டேட் துறையில் ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வீடுகள் மீதான ஜி.எஸ்.டி வரி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், மலிவு விலை வீடுகள் மீதான ஜி.எஸ்.டி வரி 8 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடுத்தர மக்கள் பெரும் அளவில் பயன்பெறுவார்கள் என்ற கருத்தை கட்டுமான துறையினர் உள்ளிட்ட பலதரப்பினரும் தெரிவித்துள்ளனர். வீடு வாங்கும் போது ஏற்கனவே கட்டப்பட்டு உடனே குடியேறக்கூடிய வீடுகள் என்றால் ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரு நகரங்களில், 645 சதுர அடிக்கு குறைவான வீடுகள் அல்லது 45 லட்ச ரூபாய்க்குள் விற்கப்படும் வீடுகள் மலிவு விலை வீடுகளாக கணக்கிடப்படும். மற்ற நகரங்களில் 968 சதுர அடி கொண்ட வீடுகள் அல்லது 45 லட்ச ரூபாய் வரை விற்கப்படும் வீடுகள் மலிவு விலை வீடுகளாக கணக்கிடப்படும். 

முன்னதாக, ஜி.எஸ்.டி–க்கான பரிந்துரை குழு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வீடுகள் மீதான வரி விகிதத்தை 5 சதவீதமாகவும், மலிவு விலை வீடுகள் மீதான வரியை 3 சதவீதமாகவும் குறைக்க பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story