சென்னையில் முப்பரிமாண அச்சு கட்டுமான தொழில்நுட்ப ஆய்வகம்


சென்னையில்  முப்பரிமாண அச்சு  கட்டுமான   தொழில்நுட்ப   ஆய்வகம்
x
தினத்தந்தி 2 March 2019 4:30 AM IST (Updated: 1 March 2019 3:46 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமானத்துறையில் சமீப காலங்களில் பேசப்படும் தொழில்நுட்பம் முப்பரிமாண (3D Printing) அச்சு கட்டுமான முறையாகும்.

ட்டுமானத்துறையில் சமீப காலங்களில் பேசப்படும் தொழில்நுட்பம் முப்பரிமாண (3D Printing) அச்சு கட்டுமான முறையாகும். இந்த தொழில் நுட்பத்தில் கட்டிடங்களை உருவாக்கும் ஆய்வகத்தை சென்னை ஐ.ஐ.டி உருவாக்கி இருக்கிறது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து, அவற்றை வணிக ரீதியான செயல்பாட்டுக்கு சென்னை ஐ.ஐ.டி கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் கட்டுமான தொழில் நுட்பத்தில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, முதன் முறையாக இந்திய அளவில் முப்பரிமாண அச்சு கட்டுமான தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

சுவர்கள் வடிவமைப்பு

இதற்காக ஐ.ஐ.டி வளாகத்தில் நாட்டிலேயே முதல் முப்பரிமாண அச்சு கட்டுமான ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வகம் அச்சு முறையில், சுவர்களை உருவாக்கி அவற்றை வீடு கட்ட அனுப்புகிறது. பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக சிவில் என்ஜினியரிங் பேராசிரியர் கோஷி வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இணைந்த முயற்சி 

சென்னை ஐ.ஐ.டி மற்றும் வஷ்டா உற்பத்தி துறை நிறுவனமும் இணைந்து, 2016–ம் ஆண்டு முதல் இதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தன. தற்போது ஆராய்ச்சி முடிவடைந்து ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தின் முதல் கட்டமாக 320 சதுர அடி பரப்பில் ஒரு வீட்டை முதல் மாடியுடன் சேர்த்து, மூன்று நாட்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.

கட்டுமான தொழில் நுட்ப சாதனையை நிரூபிக்கும் வகையில் இந்தக் குழு முதல் முப்பரிமாண அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த உள்நாட்டு தொழில் நுட்பத்தைக் கொண்டு 350 சதுர அடி வீட்டை ஒரு வார காலத்தில் கட்டி முடிக்க முடியும். வழக்கமாக வீடு கட்டுவதற்கான பட்ஜெட் இந்த முறையில் குறைவாகத்தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை ஐ.ஐ.டி முன்னாள் மாணவர்கள் ஆதித்யா, பரிவர்த்தன் ரெட்டி, வித்யாசங்கர், சந்தோஷ்குமார் ஆகியோர் ஐ.ஐ.டி சிவில் பொறியியல் துறையுடன் இணைந்து வஸ்டா (Vasta Manufacturing Solutions) என்ற அமைப்பை துவங்கியுள்ளனர். தற்போதைய சந்தையில் இந்த முறையிலான வீட்டை அறிமுகப்படுத்தும் நோக்கில் ‘ஐ.ஐ.டி மெட்ராஸ் பிரிண்டபிலிட்டி லேப்‘ என்ற முப்பரிமாண அச்சு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. 

தொழில் நுட்ப சிறப்பம்சங்கள்

இந்த தொழில்நுட்ப முறையில் எதிர்பார்க்கப்படும் விரைவு கட்டுமான முறை பற்றி அவர்கள் குறிப்பிடும்போது, வழக்கமாக ஒரு கான்கிரீட் அடுக்கு வலுப்பெறுவதற்கு 28 முதல் 30 நாட்கள் வரை ஆகலாம். ஆனால், இந்த புதுமையான தொழில் நுட்பம் மூலம் கான்கிரீட் 3 முதல் 5 நாட்களில் வலுவடைவதாக அறியப்பட்டுள்ளது. மேலும், கணினி மேற்பார்வை கொண்டு கட்டுமானத்தின் பாதுகாப்பு தொடர்பான தர நிலைகள் முறையாக கடைப்பிடிக்கப்படும். அதன் காரணமாக துல்லியமான இறுதி முடிவுகள் பெறப்படும் என்று மாணவர்கள் குறிப்பிட்டனர்.

கட்டுமான வழிமுறை

இந்த தொழில் நுட்பத்தில் மென்பொருள், மூலப்பொருட்கள், பிரிண்டர், டெலிவரி சிஸ்டம் என நான்கு அம்சங்கள் உள்ளன. முப்பரிமாண மாடலிங் முறையில் கணினியில் விருப்பமான வீட்டை வடிவமைத்த பின்னர், அதை பிரிண்டருக்கு அனுப்ப வேண்டும். அப்போது டெலிவரி சிஸ்டம் ஒரு பிரிண்டர் மூலம் வீடு அல்லது வீட்டின் ஒரு பகுதியையோ உருவாக்கும். நவீன கட்டமைப்பில் காணப்படும் சிக்கலான வடிவங்களுக்கு ஏற்றவாறு இந்த தொழில்நுட்பம் செயல்படுகிறது. இதன் மூலம் நேரம் மற்றும் பணம் ஆகியவற்றில் சிக்கனத்தை கடைப்பிடிப்பது சாத்தியம். 

மேலும், கட்டுமான பணிகளுக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாக வேண்டியதில்லை. தேவையான கட்டுமானப் பொருட்களையும் கணிசமான அளவு சேமிக்கலாம். ஏனெனில் தற்போதைய வழிமுறைகள் மூலம் கட்டமைக்க முடியாத சிக்கலான வடிவங்களை அமைப்பதில்  இந்த தொழில்நுட்பம் பயன்படும். ஒரு வீட்டை கட்ட முழு வீச்சில் செயல்படும் பிரிண்டரை உருவாக்கும் முயற்சியில் தற்போது பத்து மீட்டர் அளவு கொண்ட முப்பரிமாண பிரிண்டரின் மாதிரி வடிவத்தை உருவாக்கியுள்ளது. இந்த முறையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பொருட்கள் அல்லது ஜியோபாலிமர் பயன்படுத்தி வீடுகள் அமைப்பது சாத்தியம் என்றும் மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story