கட்டிட பணிகளுக்கு தேவையான குட்டி விமான தொழில்நுட்பம்


கட்டிட பணிகளுக்கு தேவையான குட்டி விமான தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 9 March 2019 3:34 PM IST (Updated: 9 March 2019 3:34 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான துறையில் அடுத்து வரக்கூடிய சில ஆண்டுகளில் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை (UAV - Unmanned Aerial Vehicle) இயக்குவதன் மூலம் பணிகளை மேற்கொள்ள கிட்டத்தட்ட 2.50 லட்சம் பேர் தேவைப்படலாம் என்று ஒரு தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. அது பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம்.

கட்டுமான பணிகளில் மூன்று நிலை

குடியிருப்புகள், உள்கட்டமைப்பு வசதிகளான நெடுஞ்சாலை, மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் மூன்று நிலைகளில் எளிதாக கண்காணிப்பு செய்ய ட்ரோன்கள் என்ற ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுகின்றன. அதாவது, முன் கட்டுமான திட்ட பணிகள் (Pre-Construction Works) , பிரதான கட்டுமான பணிகள் (Construction Works) மற்றும் பணிகளுக்கு பிந்தைய கண்காணிப்பு (Post-construction Works) என்ற மூன்றுவித நிலைகளிலும் ட்ரோன்களின் பயன்பாடு அவசியமானதாக இருக்கும் என்பது அறியப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியில் வளர்ச்சி

உலக அளவில் கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில் வர்த்தக ரீதியில் ட்ரோன்களின் தேவை அதிகமாக ஆகலாம் என்பது கட்டுமான துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதன் அடிப்படையில் எதிர் வரும் ஆண்டுகளில் ட்ரோன்களை இயக்குவோருக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 2.50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். தற்போதைய நிலையில் கட்டுமான வடிவமைப்பை திட்டமிடுவது, பணிகளை பார்வையிடுவது, பாதுகாப்பு அம்சங்களை ஆராய்வது, முப்பரிமாண வரை படங்களை தயாரிப்பது போன்ற பணிகளில் டிரோன்கள் பயன்பாடு முக்கியமான இடத்தில் உள்ளது.

கட்டமைப்பில் சிக்கன செலவு

ட்ரோன்கள் உதவி கொண்டு, கட்டுமான நிறுவனங்கள் செலவுகளில் சிக்கனத்தை மேற்கொள்ள முடியும். மேலும், கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அமர்ந்த இடத்திலிருந்தே கண்காணிக்கவும் இயலும். அதனால், கட்டுமான திட்ட செலவுகளில் குறிப்பிட்ட அளவு குறைகிறது. இந்த அடிப்படையில், ட்ரோன்களின் பயன்பாடு சமீப காலங்களில் கிட்டத்தட்ட 200 மடங்கு என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இந்திய அளவில் அடுத்து வரக்கூடிய ஐந்து ஆண்டுகளில் ட்ரோன் சந்தையானது கிட்டத்தட்ட ரூ.6,220 கோடி என்ற அளவாக உயரக்கூடும். அதன் காரணமாக, மொத்த பொருளாதார நிலையில் ட்ரோன் தொழில் நுட்பத்தின் பங்கு குறிப்பிடத்தக்க விதத்தில் அமைய நல்ல வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story