வீடுகளுக்குள் குளிர்ச்சி ஏற்படுத்தும் எளிய வழிமுறை
கட்டமைப்புகள் எவ்விதமாக இருந்தாலும் சுற்றுப்புறத்தில் உள்ள வெப்ப நிலை அவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கட்டுமானங்களுக்கான பல்வேறு பராமரிப்புகளில் வெப்பத்தடுப்பு பற்றியும் வல்லுனர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர்.
இந்த கோடை காலம் சென்ற ஆண்டுகளை விடவும் கூடுதல் வெப்ப நிலை கொண்டதாக இருக்கும் என்று சூழலியல் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும். மேற்கூரைகள் வழியாக சூரிய வெப்பம் வீடுகளுக்குள் நுழையும் அளவை கட்டுப்படுத்தும் புதிய வழிமுறை பற்றிய செய்திகளை இங்கே காணலாம்.
குளுமை கூரை அமைப்பு
2017-ம் ஆண்டு அகமதாபாத் நகரில் ‘கூல் ரூப் முறை’ என்ற குளுமை கூரைகள் அமைக்கும் முயற்சி பரிசோதனை முறையில் செய்யப்பட்டது. அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த முறை பரவலாக மாறி வருகிறது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஹைதராபாத் நகரில் உள்ள ‘அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஸ்டாப் காலேஜ் ஆப் இந்தியா’ நிறுவன ஆற்றல் சேமிப்பு துறை பேராசிரியர் ராஜ்கிரண் மற்றும் ஹைதராபாத் ஐ.ஐ.டி பேராசிரியர் விஷால் ஆகிய இருவரும் தேவரகொண்டா குடிசைப் பகுதியில் சுமார் 50 வீடுகளில் ‘கூல் ரூப்’ முறையை பரிசோதனை செய்தனர்.
வெப்பம் தடுக்கப்படும்
‘கூல் ரூப் முறை’ என்பது சுண்ணாம்பு அல்லது ‘அக்ரிலிக் பாலிமர்’ அல்லது ‘பிளாஸ்டிக்’ தொழில்நுட்பம் போன்றவற்றின் மூலம் ‘கோட்டிங்’ செய்யப்பட்ட கூரைகள் ஆகும். மேலும், ‘பாலிவினைல் குளோரைடு’ அல்லது ‘ஹை டென்சிட்டி பாலி எத்திலின்’ போன்ற பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘மெம்பரேன் ஷீட்’ கூரைகளாக அல்லது ‘சைனா’ மொசைக் டைல்ஸ் கற்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட கூரைகளாகவும் இருக்கலாம். அவை, வெளிப்புற வெப்பத்தை வீட்டுக்குள் பரவ விடாமல் செயல்படுகின்றன.
வெவ்வேறு பயன்கள்
மேற்கண்ட கூரை அமைப்புகளில் படுக்கை விரிப்பு போன்ற ‘மெம்பரேன் ஷீட்’ கூரை அமைப்பே குறைவான பட்ஜெட் கொண்டதாகும். வெயில் காலங்களில் இதை வீட்டின் கூரையின் மீது விரித்து வைத்துவிடுவதன் மூலம் வீட்டுக்குள் வெப்பம் பரவுவதில்லை. சாதாரண குடிசைகளில் கூட பயன்படுத்த ஏற்றதாக உள்ள இவற்றை படுக்கை விரிப்பாகவும், போர்வையாகவும் பயன்படுத்த இயலும்.
சோதனை முடிவுகள்
பரிசோதனையில் 5 வீடுகளில் ‘சென்சார்கள்’ பொருத்தி, வீடுகளுக்குள் நிலவும் வெப்பம் கணக்கிடப்பட்டது. மேற்கண்ட முறையை பயன்படுத்தாத வீடுகளை விடவும் கூரைகளில் விரிப்பை பயன்படுத்திய வீடுகளுக்குள் வெப்பம் குறைவாகவே இருப்பது தெரியவந்தது. மேற்கண்ட பரிசோதனை முயற்சியின் முடிவுகளை அரசு அதிகாரிகளிடம் அவர்களால் விளக்கப்பட்ட நிலையில், குளுமைக் கூரைகள் அமைக்கும் திட்டம் மாநிலம் முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வர ஆவண செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாக ஆய்வுக்குழு குறிப்பிட்டுள்ளது.
எளிய பட்ஜெட்
நகர்ப்புற இந்தியாவில் சுமார் 60 சதவிகித கட்டமைப்புகள் பல்வேறு உலோகங்கள், ஆஸ்பெஸ்டாஸ், கான்கிரீட் போன்றவற்றைப் பயன்படுத்தி மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக கட்டமைப்புகளுக்குள் வெப்பம் நுழைவதை தடுக்க இயலாது. ஏர்கூலர், ஏ.சி அல்லது மின்விசிறி போன்றவற்றை பயன்படுத்தி அறைகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க வேண்டிய நிலையில் குறைந்த பட்ஜெட்டில் வீட்டுக்குள் குளிர்ச்சியை ஏற்படுத்த ‘கூல் ரூப்’ முறை பயன்படுகிறது என்றும் ராஜ்கிரண் குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story