நடுத்தர மக்களை கவரும் புற நகர் குடியிருப்பு திட்டங்கள்


நடுத்தர மக்களை கவரும் புற நகர் குடியிருப்பு திட்டங்கள்
x
தினத்தந்தி 16 March 2019 3:14 PM IST (Updated: 16 March 2019 3:14 PM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச்சலுகைகளை அளித்துள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு அவை நல்ல வாய்ப்புகளாக அமைந்துள்ளன என்ற கருத்தை பலரும் தெரிவித்துள்ளனர்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடு வாங்குவதற்கு பல்வேறு கட்டுமான திட்டங்கள் நாள்தோறும் அறிமுகமாகி வருகின்றன. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் வீடு வாங்குவது நடுத்தர வர்க்கத்தினரின் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கும். வீடு அல்லது மனை அமைந்துள்ள பகுதி நன்றாக வளர்ச்சியடைந்த பகுதியாக இருக்க வேண்டும் அல்லது எதிர்காலத்தில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் கொண்ட பகுதியாக இருக்க வேண்டும் என்பதும் அனைவரது பொதுவான விருப்பமாக உள்ளது. அதன் அடிப்படையில் பலரது கவனத்தை கவர்ந்த முக்கியமான சென்னை புறநகர்ப் பகுதிகள் பற்றிய பொதுவான தகவல்களை இங்கே காணலாம்.

தென் சென்னை பகுதிகள்

சென்னை ரியல் எஸ்டேட் நிலவரத்தை பொறுத்தவரை ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட தென் சென்னை பகுதிகள் வளர்ச்சி பெற்றதாக குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, ஓ.எம்.ஆர் சாலையில் உருவாக்கப்பட்ட வீட்டு வசதி திட்டங்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையினருக்கானவை என்று கருதப்படுகிறது. மேலும், தற்போது நடுத்தர குடும்பங்களின் சொந்த வீட்டுக் கனவை பூர்த்தி செய்யும் வகையில் பல ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்கள் இந்த பகுதிகளில் குடியிருப்புத் திட்டங்களை உருவாக்கி வருகின்றன.

பல்லாவரம் ரேடியல் சாலை பகுதிகளில் புதிய குடியிருப்புத் திட்டங்கள் சமீப காலத்தில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி சாலை பகுதியில் கூடுவாஞ்சேரிக்கு அருகில் உள்ள ஆதனூர், மாடம்பாக்கம் பகுதிகளிலும் நடுத்தர குடியிருப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. சாலைப் பகுதியான ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளிலும் இப்போது குடியிருப்புத் திட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

மேற்கு சென்னை பகுதி

மேற்கு சென்னை பகுதியில் தொழிற்சாலைகள் அதிகமாக அமைந்துள்ளதால் அத்தியாவசியமான அடிப்படை வசதிகளை மையமாக வைத்து குடியிருப்பு திட்டங்கள் பெருகி வருகின்றன. சென்னை மத்திய பகுதியில் பணியாற்றும் நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில், இந்தப் பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் இப்பகுதியில் வீடு வாங்குவது அதிகமாகி இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஓ.எம்.ஆர் சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வில்லா வகை வீடுகள் மற்றும் டவுன்ஷிப் திட்டங்கள் போல ஸ்ரீபெரும்புதூரை சுற்றி உள்ள பகுதிகளிலும் பெரிய அளவில் கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெரிய டவுன்ஷிப் திட்டங்கள் ஒரகடம், படப்பை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதிகளில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாகி வருகின்றன. இன்னும் பல திட்டங்கள் அந்த பகுதிகளில் புதிதாக தொடங்க இருப்பதாகவும் சமீபத்திய ரியல் எஸ்டேட் கள ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.

சென்னை நகருக்குள் பணி புரிபவர்களுக்கு ஏற்றதாக இப்பகுதி உள்ளது என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குறைந்த விலை வீடுகள் மேற்கு சென்னை பகுதியில் அதிகமாக உருவாக்கப்படுவதையும் ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். பல்வேறு வசதிகள் கொண்டதாக பூந்தமல்லியின் சுற்றுப்பகுதிகள் வளர்ந்துள்ளன. கடந்த ஆண்டு மேற்கு சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 70 சதவீத கட்டுமான திட்டங்களில், பெருமளவு பூந்தமல்லியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அதை சுற்றியுள்ள குமணன்சாவடி, கரையான்சாவடி, வேலப்பன்சாவடி போன்ற பகுதிகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.

வளர்ச்சியை நோக்கிய பாதை

சென்னையை பொறுத்த வரையில் குறைந்த விலை வீடுகளின் தேவை இனிமேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ள நிலையில், புறநகர் பகுதிகள்தான் பலரது இலக்காக மாறி இருக்கின்றன. தென் சென்னைக்கு அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெற்ற பகுதியாக மேற்கு சென்னை மாறியுள்ளது. அரசு அளிக்கும் சலுகைகளை அடிப்படையாக வைத்து இரண்டாம் வீடு வாங்குபவர்கள் அல்லது முதலீடு நோக்கில் வீடு, மனை வாங்குபவர்கள் புறநகர் பகுதிகளைத்தான் கவனத்தில் கொள்கின்றனர். மொத்தத்தில் இனி வரும் காலம் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கான அனைத்து சாத்தியங்களையும் கொண்டிருக்கும் என்பதை கட்டுனர்கள் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் கள ஆய்வு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

Next Story