கட்டுமான பொருட்களில் முக்கிய இடம் பெற்றுள்ள ‘பிளை ஆஷ்’ கற்கள்


கட்டுமான  பொருட்களில்  முக்கிய  இடம்  பெற்றுள்ள  ‘பிளை ஆஷ்’  கற்கள்
x
தினத்தந்தி 23 March 2019 4:00 AM IST (Updated: 22 March 2019 6:57 PM IST)
t-max-icont-min-icon

செங்கல் தயாரிப்பு என்பது சூழலியல் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என்ற நிலையில் கட்டுனர்கள் பலரும் அதற்கு மாற்றாக உள்ளவற்றை தங்கள் கட்டுமானங்களில் பயன்படுத்தி வருவதாக அறியப்பட்டுள்ளது.

செங்கல் தயாரிப்பு என்பது சூழலியல் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என்ற நிலையில் கட்டுனர்கள் பலரும் அதற்கு மாற்றாக உள்ளவற்றை தங்கள் கட்டுமானங்களில் பயன்படுத்தி வருவதாக அறியப்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள செங்கல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும். களி மண்ணை செவ்வக வடிவில், சூளையில் அல்லது வெயிலில் சுட்டு, உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட அனைத்து விதமான கட்டுமானங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. இன்றைய சூழலில் விலை அதிகரித்துள்ள கட்டுமான பொருட்களில் செங்கல் பிரதானமாக இருக்கிறது.

தவிர்க்க இயலாத மாற்று

கட்டுமான துறையில் செங்கலுக்கு மாற்றாக கான்கிரீட் பிளாக்குகள் மற்றும் ‘ஹாலோ பிளாக்’ கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு அடுத்த நிலையில் வந்ததுதான் ‘பிளை ஆஷ் பிரிக்ஸ்’ வகைகள். புதிய தொழில்நுட்பம் மூலம் நவீன முறையில் தயாரிக்கப்படுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றதாக இருப்பது ஆகிய காரணங்களால் கட்டுமானத்துறையினரின் கவனத்தை தற்போது ‘பிளை ஆஷ் பிரிக்ஸ்’ வகைகள் அதிகமாக கவர்ந்து வருகின்றன. செங்கலின் தேவை தவிர்க்க முடியாதது என்ற நிலையில், செங்கலுக்கு மாற்றான பிளை ஆஷ் பிரிக்ஸ் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் ‘சிமெண்டு செங்கல்’, ‘பிளை ஆஷ் செங்கல்’ என்ற ‘பிளை ஆஷ் பிரிக்ஸ்’ தயாரிப்பை தொழிலாக கொண்டு செயல்படலாம்.  

முக்கிய மூலப்பொருள்

‘பிளை ஆஷ் பிரிக்ஸ்’ அல்லது ‘பிளாக்குகள்’ தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள் அனல் மின் நிலையத்திலிருந்து பெறப்படும் நிலக்கரி சாம்பல் ஆகும். அதனுடன், சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் ஆகியவை கலந்து இவை தயாரிக்கப்படுகின்றன. செங்கலைவிட வலிமை, நீடித்த உழைப்பு மற்றும் எளிதில் உடையாத தன்மை ஆகிய அம்சங்களை கொண்டு கட்டுமான பணிகளில் முக்கியமான இடத்தை பிளை ஆஷ் பெற்றுள்ளது.

அரசு உதவிகள்

தற்போது, மண்ணிலிருந்து செங்கல் தயாரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்துள்ள நிலையில் ‘பிளை ஆஷ் பிரிக்ஸ்’ தயாரிப்பு என்பது நல்ல தொழில் முயற்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக, அதன் தயாரிப்பை தொடங்குவதற்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மூலமாகவும், பிரதமரின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாகவும் மானியத்துடன் கடன் வசதி அளிக்கப்படுவது கவனிக்கத்தக்கது.

நாட்டின் மொத்த மின்சார தேவையில் கிட்டத்தட்ட 70 சதவிகித அளவுக்கு அனல் மின் நிலையங்களே பூர்த்தி செய்து வருகின்றன. அதன் அடிப்படையில் அனல்மின் நிலையங்களிலிருந்து ஆண்டுக்கு 90 மில்லியன் டன் சாம்பல் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையங்களிலிருந்து நிலக்கரிச் சாம்பல் கிடைக்கிறது.

‘பிளை ஆஷ் பிரிக்ஸ்’ தயாரிப்பில் மூலப்பொருளான நிலக்கரிச் சாம்பல் கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்தது. ஆனால், தற்போது அனல் மின் நிலைய உலையில் இருந்து கிடைக்கும் மொத்த சாம்பல் அளவில் 20 சதவிகிதத்தை ‘பிளை ஆஷ் பிரிக்ஸ்’ தயாரிப்பாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு இருப்பதால், மூலப்பொருள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்பதை தொழில் முனைவோர் பலரும் குறிப்பிட்டுள்ளனர். 

தயாரிப்பு முறை

நிலக்கரி சாம்பல் 70 சதவிகிதம், மணல் 15 சதவிகிதம், சுண்ணாம்புக்கல் 10 சதவிகிதம் மற்றும் ஜிப்சம் 5 சதவிகிதம் ஆகியவற்றுடன் சரியான விகிதத்தில் தண்ணீர் சேர்த்து, ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் ‘பிளை ஆஷ் பிளாக்ஸ்’ உருவாக்கப்படுகின்றன. இயந்திரத்திலிருந்து வெளியில் வந்த கற்களை உலர வைத்து, தண்ணீர் ஊற்றி கல்லை கடினப்படுத்தும் பணிகள் முடிந்ததும், அவை கட்டுமான பணிகளுக்கு தயாராகிவிடும். வழக்கமான செங்கலுக்கு மாற்றாக, நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் ‘பிளை ஆஷ் பிரிக்ஸ்’ என்ற ‘சிமெண்டு செங்கல்’ வரும் காலங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் என்பது கட்டுமான துறையினரின் கருத்தாக உள்ளது.

Next Story