உங்கள் முகவரி

முதியோர்களுக்கு உதவும் நவீன வீட்டு உபயோக பொருட்கள் + "||" + Modern home appliances

முதியோர்களுக்கு உதவும் நவீன வீட்டு உபயோக பொருட்கள்

முதியோர்களுக்கு உதவும் நவீன வீட்டு உபயோக பொருட்கள்
வயதானவர்கள் அவர்களுக்கு வேண்டியவற்றை அவர்களே செய்து கொள்ளும் வகையில் நவீன உபகரணங்கள் அறிமுகமாகி இருக்கின்றன.
வீடுகள் மற்றும் பல அடுக்கு மாடிகளில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றவர்கள் துணையை எதிர்பார்க்காமல், அவர்களுக்கு வேண்டியவற்றை அவர்களே செய்து கொள்ளும் வகையில் தக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதற்கேற்ப பல்வேறு நவீன உபகரணங்கள் தற்போது அறிமுகமாகி இருக்கின்றன. அத்தகைய கருவிகளில் பெரும்பாலானவை மேலை நாடுகளில் மட்டுமே உபயோகத்தில் இருந்து வருகின்றன. நமது பகுதிகளில் அவை அறிமுகமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். இங்கே நாம் பார்க்க உள்ள உபகரணங்கள் பற்றி அறிந்து கொள்ளும் வல்லுனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவற்றின் அடிப்படையில் மாற்று உபகரணங்களை உருவாக்குவது பற்றியும் கவனத்தில் கொள்ளலாம்.

ஹிப் ஸேப் (Hip Safe)

குறிப்பிட்ட வயதுக்கு மேல் உடலில் உள்ள எலும்புகள் பலவீனம் அடைகின்றன என்ற நிலையில், முதியோர்களது இடுப்பு பகுதி அடிக்கடி பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம். அதன் அடிப்படையில் வயதானவர்களின் இடுப்பு பகுதியை சுற்றி இவ்வகை வசதி கொண்ட பெல்ட் அணிவிக்கப்படுகிறது. எதிர்பாராமல் தவறி விழும் நிலையில், இடுப்பில் அணிந்துள்ள இந்த பெல்ட், ஒரு ‘ஏர் பேக்’ (Air Bag) போல செயல்பட்டு பாதுகாக்கிறது. அதன் மூலம் இடுப்பு பகுதி எலும்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.

நகர்த்தும் வகையிலான கைப்பிடிகள் (Mobile Vaccum Handles)

முதியோர் பலர் குளியலறையில் உள்ள ஈரப்பதம் காரணமாக நடப்பதற்கு தடுமாறுவார்கள். குறிப்பாக, குளிக்கும் சமயங்களில் சுவரில் ஒரு பிடிப்பு இருப்பது அவர்களுக்கு பல வகையிலும் பாதுகாப்பானதாக இருக்கும். இந்த நகர்த்தும் கைப்பிடிகளை தேவைப்படும் சமயங்களில் சுவரில் இடம் மாற்றி வைத்துக்கொள்ள இயலும். அதாவது, ‘வாக்குவம் கப்’ (Vacuum Cup) அமைப்பாக சுவரில் உறுதியான பிடிப்பு கொண்ட இவ்வகை கைப்பிடிகள் உதவியுடன் எளிதாக குளியலறை தொட்டிக்குள் இறங்கி, ஏற இயலும்.

ரோடோ பிளெக்ஸ் பெட் (Rotoflex Bed)

வயதானவர்கள் மற்றவர்களது உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல், படுக்கையில் அவர்களாகவே படுக்கவும், எழவும், அமரவும் ஏற்ற வகையில் இந்த படுக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நர்சிங் படுக்கையில் (Nursing bed) அமர்வதற்கும், அதில் படுப்பது, எழுந்து அமர்வது, பின்னர் கீழே இறங்குவது, திரும்பி படுப்பது ஆகியவற்றை சுலபமாக செய்யவும் இந்த உபகரணம் உதவியாக இருக்கும்.

சோலோ டாய்லெட் லிப்ட் (Solo Toilet Lift)

வயது காரணமாக உடலில் ஏற்பட்ட தளர்ச்சி காரணமாக முதியோர்கள் சிரமப்படும் முதல் இடம் கழிவறையாக உள்ளது. அதன் அடிப்படையில், தானியங்கி கழிவறை லிப்ட் அவர்களுக்கு நல்ல உதவியாக அமைகிறது. இதன் மூலம் நிதானமாக அமர்வது, எழுவது ஆகிய செயல்களை மேற்கொள்ளலாம்.

அசிஸ்டெப் உபகரணம் (AssiStep Devices)

அடுக்குமாடி வீடுகளில் தனியாக வசிக்கும் பெரியவர்கள் தடுமாறாமல், எளிதாக மாடிப்படிகளில் ஏறவும், இறங்கவும் இந்த உபகரணம் பயன்படுகிறது. Stair Walker என்றும் குறிப்பிடப்படும் இது ஸ்கான்டினேவியன் மாடலாகும். பல்வேறு மேலை நாடுகளில் பரவலான உபயோகத்தில் இருந்து வருகிறது.