உறுதியான கட்டமைப்புகளுக்கு தண்ணீரின் தரம் அவசியம்


உறுதியான கட்டமைப்புகளுக்கு தண்ணீரின் தரம் அவசியம்
x
தினத்தந்தி 29 March 2019 11:15 PM GMT (Updated: 29 March 2019 12:26 PM GMT)

கட்டுமான பணிகளில் அடிப்படையான பொருள்களில் ஒன்று தண்ணீர். ஆனால், பெரும்பாலானோர் அதன் தரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து கவலைப்படாமல் பணிகளை மேற்கொள்வதாக தெரிய வந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையாக உள்ள இந்த காலகட்டத்தில் கிடைக்கும் நீரை கட்டுமானத்திற்கு பயன்படுத்துவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் கட்டுமான பாதிப்புகளை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. வீடு கட்டும்போது அஸ்திவாரம், சிமெண்டு, செங்கல், புளோர், பெயிண்டு என அனைத்து பொருட்களிலும் செலுத்தப்படும் கவனம் தண்ணீருக்கும் அவசியம் என்று கட்டுமான பொறியியல் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கான்கிரீட் வலிமை

மணல், ஜல்லி, சிமெண்டு ஆகியவற்றை தண்ணீருடன் கலந்து தயாரிக்கப்படும். கான்கிரீட் கலவையில் சேர்க்கப்படும் தண்ணீரின் அளவு, தரம் ஆகியவற்றை பொறுத்தே கான்கிரீட்டின் வலிமை நிலை நிற்கிறது. நீரின் அளவு அதிகமானால் கான்கிரீட் வலிமை குறைந்துவிடும். நீரின் அளவு சரியாக இருக்கும்படி பயன்படுத்தினால் மட்டுமே கான்கிரீட் சரியான உறுதியுடன் அமையும்.

கட்டுமான பணிகளில் உலர் நீர்

கட்டுமான பணிகளில் உவர் நீர் பயன்படுத்தலாமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. கான்கிரீட் கட்டிடங்களை உவர் நீர், உவர் மண், கடல் நீர் ஆகியவற்றைக்கொண்டு கட்டினால், அந்த கட்டிடம் மிக விரைவில் பலவீனம் அடைந்து விடும். உவர்ப்புச் சுவை உள்ள நீரையோ, மணலையோ கட்டிடம் கட்ட பயன்படுத்தினால், கட்டிடத்தின் ஆயுட்காலம் நீடித்து அமையாது. அதற்கு காரணம், கான்கிரீட்டில் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் ஆகும். பொதுவாக, இரும்பு போன்ற உலோகங்கள்மீது உவர் நீர் பட்டுவிட்டால் அவற்றில் விரைவாக துருப்பிடித்து விடும். அந்த நிலையில் கம்பிகள் விரிவடைந்து, அதை சுற்றியுள்ள கான்கிரீட்டில் விரிசலாக மாறுகிறது. அதன் விளைவாக கான்கிரீட் வலிமை இழந்து உடைவதால், கட்டிடத்தின் ஆயுட்காலம் குறைந்து விடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

தக்க பரிசோதனை அவசியம்

இந்த சிக்கலை தவிர்க்க கட்டுமான பணிகளில் பயன்படும் நீரை முதலில் பரிசோதிப்பது அவசியமானது. உப்பு, அமிலம் உள்ளிட்ட இதர தனிமங்களின் அளவு பற்றி ஆய்வகத்தில் சோதித்து அதற்கான அறிக்கையின் அடிப்படையில் நீரை பயன்படுத்துவது நல்லது. கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களின் தரம், நீரின் தரம் மற்றும் எவ்வளவு நீர் உபயோகிக்கவேண்டும் என்பது பற்றி ஐ.எஸ் தரநிலை கோட்பாடுகள் குறிப்பிட்டுள்ளன. கட்டுமான பணிகளில் பயன்படும் நீர் அதன்படி இல்லாவிட்டால், அந்த நீரை தக்க ரசாயன முறைகளின்படி சரி செய்தோ அல்லது வேறு நீரையோ கட்டுமான பணிகளில் பயன்படுத்துவதே பாதுகாப்பான முறை என்று கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story