கலையம்சம் கொண்ட திரைச்சீலைகள்


கலையம்சம் கொண்ட திரைச்சீலைகள்
x
தினத்தந்தி 29 March 2019 11:30 PM GMT (Updated: 29 March 2019 12:30 PM GMT)

வீட்டு சுவரின் நிறம், அறையில் உள்ள பர்னிச்சர் ஆகியவற்றை கணக்கில் ஜன்னல்களுக்கான திரைகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்கட்டமைப்பு வல்லுனர்களின் கருத்தாகும்.

இன்றைய நகர நாகரிகத்தில் வீடுகளுக்கான உள் அலங்காரத்தில் ‘ஸ்கிரீன்’ எனப்படும் திரைகளுக்கு தனிப்பட்ட முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பலருக்கும் அவற்றை எப்படி கண்கவரும் விதத்தில் அமைப்பது என்பது பற்றி குழப்பம் இருக்கலாம். இந்த நிலையில், வீட்டு சுவரின் நிறம், அதன் வடிவமைப்பு, குறிப்பிட்ட அறையில் உள்ள பர்னிச்சர் வகைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டுதான் கதவு நிலைகள் அல்லது ஜன்னல்களுக்கான திரைகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்கட்டமைப்பு வல்லுனர்களின் கருத்தாகும். அது பற்றி அவர்கள் குறிப்பிட்ட அடிப்படையான தகவல்களை இங்கே காணலாம்.

ஸ்கிரீன்கள் மூன்று விதம்

உள்கட்டமைப்பு வல்லுனர்கள் கருத்துப்படி ஸ்கிரீன் அமைப்பில் மூன்று விதங்கள் இருக்கின்றன. அவற்றில், முதலாவது, சிங்கிள் லைன் எனப்படும் பிரதான ஸ்கிரீன் மட்டுமே மட்டுமே இருக்கும். இரண்டாவது, பிரதான துணியின் மேல்புறத்தில் அலங்காரத் திரை வைத்துத் தைப்பது. மூன்றாவது, மெல்லிய துணியை (செகண்ட் லேயர்) பிரதான துணி மற்றும் அலங்காரத் திரை மீது வைத்து தைக்கப்படுவது. பொதுவாக, பருத்தி பாலியெஸ்டர் மிக்ஸ், பாலியெஸ்டர் மற்றும் வெல்வெட் கலந்த பாலி சில்க் போன்ற துணிகள்தான் ஸ்கிரீன்களாக பெரிதும் பயன்பாட்டில் உள்ளன.

இண்டீரியர் டிசைனர் உதவி

பெருநகரங்களில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்கு இண்டீரியர் டிசைனரை அழைத்து ஸ்கிரீன் குறித்த கருத்துகளை அறிகிறார்கள். மேலும், இணைய தளங்கள் மூலம் தக்க வண்ணங்கள் அல்லது டிசைன்களை தேர்வு செய்கிறார்கள். அமெரிக்கன் பிளட், பாக்ஸ் பிளட், கப்டு கர்ட்டன், ஐலெட் பிளட், பிரின்ஜ் லேயர், கேதர்டு பிளட், காப்லெட் பிளட், ஹனிகோம்ப் பிளட், லூப் கர்ட்டன், பென்சில் பிளட், ரிப்பிள் போல்ட் பிளட், ஷவர் கர்ட்டன், விண்டோ நேபா கர்ட்டன் போன்ற பல்வேறு வடிவமைப்புகளில் ஸ்கிரீன்கள் உருவாக்கப்படுகின்றன. வெளியில் இருந்து பார்த்தால், அறைக்குள் இருப்பவை தெரியாமலும், புற வெளிச்சம், வெப்பம் ஆகியவை அறைகளுக்குள் பரவாதவாறும் ஸ்கிரீன்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும், போதுமான காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதும் மேற்கண்ட வடிவமைப்புகளுக்கு அடிப்படையாகும்.

* ஸ்கிரீன்கள் தேர்வில் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் அதற்கான பட்ஜெட் என்ன என்பதுதான். பின்னர், எவ்வளவு காலத்துக்கு அந்த திரை பயன்படுத்தப்படும் என்பது பற்றியும் தீர்மானம் செய்துகொள்ள வேண்டும்.

* திரைகள் வடிவமைப்பு, அதன் நிறம் ஆகியவை பற்றி கவனம் செலுத்துவதுடன், அழகான பழங்கால ஓவியங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள் அவற்றை தேர்ந்தெடுக்கலாம். தற்கால மாடர்ன் ஓவியங்கள் கொண்ட வடிவமைப்புகளை விரும்புபவர்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

* ஜன்னல் கம்பிகள் விதவிதமான டிசைன்கள் கொண்டதாக இருப்பின், அதற்கு பல வண்ண பூக்கள் கொண்ட திரைகள் பொருத்தமாக இருக்கும். மாறாக, எளிமையான வடிவமைப்பு கொண்ட ஜன்னல்களுக்கு ஒற்றை நிறம் கொண்ட ‘பிளைன்’ ஸ்கிரீன்கள் பொருத்தமாக இருக்கும்.

* வாங்குவதாக முடிவு செய்த வண்ண திரையின் சிறிய துண்டு பகுதியை கடைகளிலிருந்து பெற்று, வீட்டு சுவர்கள் மீது ஒட்டிப்பார்த்து பொருத்தமாக இருப்பதை கண்டறியலாம்.

* ஸ்கிரீன் துணி என்பது ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்க வேண்டுமா, மென்மையான பட்டு துணி போல் வேண்டுமா அல்லது வழக்கமான காட்டன் துணியே போதுமா என்ற விஷயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

* உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அடிக்கடி வருவார்கள் என்ற நிலையில் சற்றே ஆடம்பர தோற்றம் கொண்ட திரைகளை ஹால் பகுதிகளில் அமைக்கலாம். அறைகளில் உள்ள ஜன்னல்கள் வழியே வெளியில் இருப்பவர்கள் பார்க்க வேண்டாம் என்று விரும்பும்போது துணிகளுக்கு பதிலாக உள்ள மெட்டீரியல்களை பயன்படுத்தலாம்.

* எல்லா அறைகளுக்கும் பொதுவான ஒரே நிறத்தில் ஸ்கிரீன்களை தேர்வு செய்வதாக இருந்தால் உடனடியாக தேர்வு செய்து விடக்கூடாது. சுவர்களோடு அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதை கவனித்த பின்னரே அவற்றை மாட்ட வேண்டும்.

Next Story