முதலீட்டு அடிப்படையில் ரியல் எஸ்டேட் வர்த்தகம்


முதலீட்டு அடிப்படையில் ரியல் எஸ்டேட் வர்த்தகம்
x
தினத்தந்தி 6 April 2019 7:27 AM GMT (Updated: 6 April 2019 7:27 AM GMT)

உலகம் முழுவதும் நிலம் சார்ந்த மனை வர்த்தகம் சிறந்த வியாபாரக் களமாக மட்டும் இல்லாமல், முதலீட்டுக் களமாகவும் இருந்து வருகிறது.

குறுகிய காலத்துக்குள் பல மடங்கு விலை உயர்வை தரக்கூடிய சாத்தியம் உள்ள துறையாக இருப்பதால், இந்த துறையில் பெரும்பாலும் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் இல்லை. விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டு விலகுவது மற்ற காரணங்களை பொறுத்து ஏற்படுகிறது.

முதலீட்டு வாய்ப்புகள்

நிலம் சார்ந்த முதலீடு என்பது வீட்டுமனையோடு நின்றுவிடாமல், வெவ்வேறு முதலீடுகளையும் உள்ளடக்கிய தன்மை கொண்டது. சொந்தப் பயன்பாடு அல்லது எதிர்கால நலன் கருதியோ வீட்டு மனைகள் வாங்கப்படுவது வழக்கம். நிலத்தில் செய்யப்படும் முதலீடுகள், வர்த்தக முதலீடு, சுய பயன்பாட்டு முதலீடு மற்றும் எதிர்காலத்துக்கான முதலீடு என முன்று வகையாக உள்ளன. இவை தவிரவும், ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் (REIT) என்ற அமைப்பு வெளியிடும் மனை வணிக முதலீட்டுப் பத்திரங்கள் மூலம் நிலம், வீடுகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் மனை வர்த்தகத்தில் மறைமுகமாகவும், பாதுகாப்பாகவும் முதலீடு செய்ய இயலும்.

உலக நாடுகளில் உள்ள முறை

அந்த முறையில் முதலீட்டாளர் நேரடியாக நிலத்தில் முதலீடு செய்வதில்லை. அவரது முதலீடு பல்வேறு வகை நிலங்களில், மனைகளில், கட்டிடங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இந்த வகை முதலீட்டு வர்த்தகம் உலக நாடுகளில் முதலில் அமெரிக்காவில் அறிமுகமானது. தற்போது, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் வழக்கத்தில் இருந்து வருகிறது. நமது நாட்டிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.இ.ஐ.டி (REIT) நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

வளர்ச்சி பெற வாய்ப்பு

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளில் ஆர்.இ.ஐ.டி நிறுவனங்களின் பத்திரங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதனால், அவற்றை இதர பங்குகள்போல எளிதில் வாங்கவும், விற்கவும் முடியும். இந்தியாவில் இயங்கும் சில நிறுவன அமைப்புகள் பட்டியலில் உள்ளன. 2014-ம் ஆண்டு இவ்வகை முதலீடுகளுக்கான நெறிமுறைகளை செபி (SEBI ) அமைப்பு கொண்டு வந்தது.

தனியார் பங்கு முதலீடுகள்

கடந்த மார்ச் மாதத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில், ஒட்டு மொத்த அளவில் ரூ.49 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தனியார் பங்கு முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது. இதில் வணிக வளாகத் திட்டங்களில் (Office Spaces) மட்டும் ரூ.28 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தனியார் பங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த முதலீட்டில் இது 57 சதவீதமாகும்.

தென் மாநில ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ரூ.23 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்த முதலீட்டில் இது 47 சதவீதமாகும். இதன் அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குள் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு சுமார் ரூ.7 லட்சம் கோடியை எட்டும் என்று ஒரு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story