ஆழ்குழாய் கிணறு அமைப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், வீடுகளின் கட்டுமான பணிகளுக்கு முன்னர் ‘போர்வெல்’ அமைப்பது வழக்கமான ஒன்று
போர்வெல் ஆழம் மற்றும் கிடைக்கும் தண்ணீர் அளவு பற்றி முன்னதாகவே தீர்மானம் செய்வது கடினமான விஷயம் ஆகும். அதனால், போர்வெல் பட்ஜெட் பற்றி முன்னதாகவே கணக்கிடுவதில் சிக்கல்கள் இருப்பதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். போர்வெல் அமைப்பதற்கு முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் பற்றி கட்டுனர்கள் மற்றும் பொறியாளர்கள் குறிப்பிடுவதை இங்கே காணலாம்.
தேவையான தண்ணீர் அளவு
ஆழ்குழாய் கிணறு என்ற போர்வெல் அமைக்கும் முன்னர், முதலில் பொறியாளர் மூலம் ஒரு நாளைக்கு தேவைப்படும் மொத்த தண்ணீர் அளவு பற்றி கணக்கிட்டுக்கொள்வது அவசியம். குறிப்பாக, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டிட விரிவாக்கம் மற்றும் கட்டிட பயன்பாடு உள்ளிட்ட பல விஷயங்களை ஆராய்ந்து தண்ணீர் தேவையை கணக்கிட்டுக்கொள்வது நல்லது.
ஏரியா நிலத்தடி நீர்மட்டம்
அருகில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் மூலம் கிடைக்கும் தண்ணீர் பற்றி விசாரிப்பதன் மூலம், அந்த ஏரியாவில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பாக, தண்ணீரின் கடினத்தன்மை மற்றும் அதில் கலந்துள்ள அமில அளவு எவ்வளவு என்ற விபரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அவற்றின் அடிப்படையில் அந்த நீரை ஆ.ஓ முறையில் சுத்திகரிப்பு செய்து, குடிநீராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தகுந்த இடம்
போர்வெல் போடும் மனையில் நீரோட்டம் உள்ள இடத்தை பொறியாளர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரருடன் ஆலோசித்து, நீரோட்ட நிபுணர் முலம் தேர்வு செய்யலாம். வாஸ்து நம்பிக்கை இருப்பவர்கள் அதற்கேற்ற ஆலோசனைகளை முன்னதாகவே பெற்றுக்கொள்வது நல்லது. கட்டிடத்திற்கு பாதிப்பு வராத வகையில் தேர்வு செய்த பகுதியில் 4 அல்லது 6 அங்குல அகலம் கொண்ட போர்வெல் அமைக்கலாம்.
போர்வெல் அகலம்
பொதுவாக, 4 அங்குல அகலம் கொண்ட போர்வெல் அமைப்பை 300 அடிக்கு கீழ் ஆழம் உள்ளதாக போடுவது சிரமமானது. 6 அங்குல அகலம் கொண்ட போர்வெல்லை கிட்டத்தட்ட 1000 அடி வரை கூட அமைக்கலாம். இடப்பற்றாக்குறை, பழைய வீடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏரியாவில் 150 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலையில் 4 அங்குல அகலம் கொண்ட போர்வெல் அமைப்பே பட்ஜெட்டுக்கு ஏற்றது.
கூடுதல் ஆழம்
தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில் கணக்கிட்டதை விட அதிக ஆழத்தில் போர்வெல் அமைப்பதே சிறந்தது. அதாவது, இருநூறு அடி ஆழம் போடப்பட்ட நிலையில், மேற்கொண்டு தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் கூடுதலாக 50 அல்லது 60 அடி அளவுக்கு ஆழம் கொண்டதாக போர்வெல் அமைத்துக்கொள்ளலாம். அதன் மூலம் நிலத்தடி நீர் குறைவாக உள்ள பகுதிகளில் போர்வெல் குழாய் கிணறு போல பயன்படும். அதாவது, ஆழம் அதிகமுள்ள போர்வெல்லில் தண்ணீர் நிறைந்துள்ள நிலையில் அவற்றை சுலபமாக எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
Related Tags :
Next Story