வீடுகளுக்குள் குளிர்ச்சி தரும் சுலபமான முறைகள்


வீடுகளுக்குள்  குளிர்ச்சி  தரும்  சுலபமான  முறைகள்
x
தினத்தந்தி 13 April 2019 4:00 AM IST (Updated: 12 April 2019 5:21 PM IST)
t-max-icont-min-icon

சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் கோடை காலத்தில் வெப்பக்காற்று எளிதாக பரவுகிறது.

சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் கோடை காலத்தில் வெப்பக்காற்று எளிதாக பரவுகிறது. குறிப்பாக, மதிய நேரங்களில் கொளுத்தும் வெயில் காரணமாக கான்கிரீட் வீடுகள் மற்றும் குடியிருப்புகளின் உட்புற வெப்ப நிலை அதிகமாகிறது. அதை தவிர்க்கும் வகையில் நாட்டின் பல பகுதிகளில் வெவ்வேறு முறைகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் கட்டிட கலைஞர்கள் மற்றும் சூழலியல் வல்லுனர்கள் வீடுகளுக்குள் குளிர்ச்சி நிலவும் வகையில் கடைப்பிடிக்க ஏற்ற எளிய வழிமுறைகளை தெரிவித்துள்ளனர். பலவிதங்களாக உள்ள அவற்றில் 3 முறைகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.    

வெப்பத்தை தடுக்கும் செடி, கொடிகள் 

வீடு அல்லது அடுக்குமாடி மேல்மாடிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி மற்றும் படர்ந்து வளரும் கொடிகள் மற்றும் குரோட்டன்ஸ் செடி வகைகளை பெரிய தொட்டிகளில் வைத்து பராமரிக்கலாம். மேல்மாடி தளத்திலிருந்து மேலெழுந்த நிலையில் வளர்ந்து மாடி முழுவதும் படர்ந்து செல்லும் கொடிகளையும், பெரிய இலைகள் கொண்டு அடர்த்தியாக வளரக்கூடிய செடிகளையும் தொட்டிகளில் நெருக்கமாக வைக்க வேண்டும். அதன் மூலம் மேல்மாடி தரைத்தளத்தை வெப்பத்திலிருந்து பாதுகாக்க இயலும். பசுமையான செடி, கொடிகளின் நிழல் காரணமாக மாடியின் தரைத்தளம் சூடாக மாறுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், செடி, கொடிகள் பசுமையான சூழலை உருவாக்குவதுடன் அழகான வாசமுள்ள மலர்கள் மற்றும் காய்களையும் தருகின்றன.

மேல்தள சுண்ணாம்பு பூச்சு 

வெப்பம் பரவாமல் தடுக்க உதவும் இன்னொரு முறையானது சாதாரண வெள்ளை சுண்ணாம்புடன், பெவிகால் போன்றவற்றை நன்றாக கலந்து மேல்தளத்தில் பரவலாக பூசி விடலாம். வெள்ளை நிற சுண்ணாம்பு காலில் ஒட்டாமல் இருக்க பெவிகால் போன்ற பொருட்கள் பயன்படுகின்றன. இந்த மேற்பூச்சு நன்றாக காய்ந்தவுடன் மேல்தளத்தில் பச்சை நிற வலையை பந்தல் போல அமைத்துவிடலாம். சுண்ணாம்பு பரப்புக்கு மேலாக கட்டப்பட்ட பச்சை வலை வெப்பத்தை தளத்தில் படிய விடுவதில்லை. 

தென்னங்கீற்று பயன்பாடு

மற்றொரு முறையானது கச்சிதமாக வேயப்பட்ட தென்னங்கீற்றுகளை வெள்ளையடிக்கப்பட்ட அல்லது சுருக்கி போடப்பட்ட மேல்மாடியின் தளம் முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட பகுதியிலோ பரப்பி வைக்கப்படுவதாகும். வெப்ப தடுப்பாக பல கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் இந்த முறையானது அதிக செலவில்லாதது என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட மூன்று முறைகள் வெயில் காலத்தில் வீடுகளில் குளிர்ச்சி நிலவ 
உதவுகின்றன. மேலும், இரவு நேரங்களில் மின்விசிறியை இயக்கியவுடன் வெப்பக்காற்று வீட்டின் கூரை அல்லது மேல்தளத்திலிருந்து பரவக்கூடிய 
வாய்ப்பில்லை. 
1 More update

Next Story