கட்டிட தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்கான மென்பொருள்


கட்டிட தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்கான மென்பொருள்
x
தினத்தந்தி 27 April 2019 5:59 AM GMT (Updated: 27 April 2019 5:59 AM GMT)

கட்டுமான திட்டம் மற்றும் நடைமுறை ஆகியவற்றில் உள்ள இடைவெளியை குறைத்து பணிகள் விரைவாக செய்ய இயலும்

இன்றைய கட்டுமானத் துறையில் உலகளாவிய பல்வேறு தொழில்நுட்ப அணுகுமுறைகள் பரவலாக இருந்து வருகின்றன. 3-டி பிரிண்டிங் தொழில்நுட்பம், ட்ரோன்கள் என்ற ஆளில்லா விமானங்கள், சுவர் மேல்பூச்சுக்கான இயந்திரம் என்று மனித உழைப்புக்கு பதிலாக இவ்வகை கருவிகள் பயன்படுத்தப்பட்டு பணிகள் குறுகிய காலத்தில் முடிக்கப்படுகின்றன.

அந்த வகையில், தகவல் தொழில்நுட்பம் மூலம் கட்டுமானத்துறையின் செயல் திறனை மேம்படுத்தவும் தனிப்பட்ட மென்பொருள்கள் (Softwares) கட்டுனர்கள் மற்றும் பொறியாளர்களிடையே பயன்படுத்தப்பட்டு வருவதாக அறியப்பட்டுள்ளது.

பணிகள் ஒருங்கிணைப்பு

கட்டுமானத்துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் சிறிய அளவாக இருந்தலும், பெரியதாக இருந்தாலும் அவற்றின் பல்வேறு பணிகளை திட்டமிட்டு கச்சிதமாக ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும். மேலும், கட்டுமானத் திட்டம், அதன் பணியாளர்கள், பொருட்களின் தரம் உள்ளிட்ட பல விஷயங்கள் கச்சிதமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

பல நேரங்களில் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதும் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறுவதால், கட்டுமான நிறுவனங்களுக்கு நடைமுறை செலவுகள் அதிகரிக்கலாம். அதன் காரணமாக அடுத்த திட்டத்திற்கான பணிகளில் தொய்வு உருவாகும் நிலை ஏற்படும் என்ற தகவல்களை கட்டுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தகவல் தரும் மென்பொருள்

மேற்கண்ட சிக்கல்களை தொழில்நுட்ப ரீதியாக சமாளிக்கும் வகையிலும், கட்டுமானத்துறையின் அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைக்கும் வகையிலும் பயன்படுத்தக்கூடிய மென்பொருளை கட்டுனர்கள் பயன்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. அதன் மூலம், கட்டுமானப் பணியிடத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் என்னென்ன வேலைகள் செய்யப்பட்டன, எவையெல்லாம் செய்யாமல் விடப்பட்டன, செய்யப்படாத பணிகள் காரணமாக கட்டுமான திட்டத்தில் ஏற்படும் காலதாமதம் ஆகிய தகவல்களை பொறியாளர்கள் அல்லது கட்டுனர்களுக்கு அந்த மென்பொருள் தகவல் அளிக்கிறது.

கட்டுமான திட்ட நடவடிக்கைகள்

மேலும், கட்டுமான பணிகளுக்காக இன்னும் வந்து சேர வேண்டிய மூலப்பொருட்கள், நிதி மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட தகவல்கள் கட்டுமானம் நடக்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தப்படும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்டுமானத் திட்டத்தின் தற்போதைய நிலை, பணிகளில் உள்ள சிக்கல், மேலும், எவ்வளவு நாட்களுக்குள் கட்டுமானத் திட்டம் பூர்த்தி ஆகும் என்ற பல்வேறு தகவல்களை மென்பொருள் சம்பந்தப்பட்ட பணி பொறுப்பாளருக்கு தெரிவிக்கும். அதன் மூலம், கட்டுமானத் திட்டம் மற்றும் அதன் நடைமுறை ஆகியவற்றில் உள்ள இடைவெளியை குறைத்து பணிகளை விரைவாக செய்ய இயலும்.

உலக நாடுகளில் பயன்பாடு

பல்வேறு உலக நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வரும் இவ்வகை மென்பொருள்கள் இந்தியாவில் அதிகப்படியான பயன்பாட்டுக்கு வரவில்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அனைத்து துறையிலும் சிறப்பாக உள்ள நிலையில் கட்டுமானத்துறைக்கு இவ்வகை மென்பொருட்கள் பெரும் துணையாக இருந்து வருகின்றன.


Next Story