மனை அமைப்பில் கவனிக்க வேண்டிய மேடு பள்ளங்கள்


மனை அமைப்பில் கவனிக்க வேண்டிய மேடு பள்ளங்கள்
x
தினத்தந்தி 11 May 2019 4:30 AM IST (Updated: 10 May 2019 9:12 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புறங்களில் வாங்கப்படும் வீட்டு மனை அல்லது இடம் ஆகியவை அவற்றின் இயற்கை அமைப்பின்படி சமமாகவோ அல்லது மேடு பள்ளங்களுடனோ இருக்கலாம்.

மேடு பள்ளங்கள் மனித வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்று வாஸ்து குறிப்பிடுகிறது. மனை அல்லது இடம் தெற்கில் அல்லது தென்மேற்கில் உயர்ந்தும், வடக்கில் அல்லது வடகிழக்கில் தாழ்ந்தும் இருந்தால் அது மனையின் உரிமையாளருக்குச் செல்வ வளத்தை அளிக்கக்கூடிய தன்மை பெற்றதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் ஒரு இடம் மேற்கில் அல்லது தென்மேற்கில் உயரமாகவும், கிழக்கு அல்லது வடகிழக்கில் தாழ்வாகவும் இருந்தால் அது நிலத்தின் உரிமையாளருக்கு நல்ல புகழைப் பெற்றுத் தரக்கூடியதாக இருக்கும். ஆனால், மனை மேடுபள்ளங்கள் ஏதுமின்றி சமதளப் பரப்பாக இருந்தால் வாழ்வு அமைதியானதாக இருக்கும் என்று வாஸ்து குறிப்பிட்டாலும், தெற்கு மற்றும் மேற்குகளில் கொஞ்சமாவது உயரம் இருக்கவே வலியுறுத்துகிறது.

தென்மேற்கு உயரம் அவசியம்

அதன்படியாக, நைருதி பாகமான தென்மேற்கு நிச்சயம் மற்ற பாகங்களை விட உயரமாக இருப்பது அவசியமானது. அதே சமயம் ஈசானிய பாகமான வடகிழக்கு நிச்சயம் மற்ற திக்குகளை விட பள்ளமாக இருப்பது மிக முக்கியம். இடத்தின் ஈசானியமே மற்ற எல்லா பாகங்களையும் விட தாழ்வாக இருக்கவேண்டும். அதற்கு அடுத்ததாக வாயு பாகம் சற்று உயரமாக இருக்க வேண்டும். மூன்றாவதாக, அக்னி பாகம் உயரமானதாக இருக்கவேண்டும். கடைசியாக, நைருதி பாகம் உயரமாக அமையவேண்டும்.

மனையின் நைருதி பாகம் பள்ளமாக அமைந்து, அதைச் சரி செய்ய இயலாது என்ற நிலையில் அந்த இடத்தை வாங்குவது வாஸ்து சாஸ்திரத்தின்படி நல்ல பலன்களை அளிப்பதில்லை. மனையின் ஈசான்ய பாகமான வடகிழக்கு மேடாகவோ அல்லது சரி செய்ய இயலாத அளவுக்கு உயரமாக இருந்தாலும் வாஸ்து சாஸ்திரப்படி நன்மை தராது. வாழ்வில் உயர வேண்டும் என்பதே ஒவ்வொருவருடைய விருப்பமாகவே இருந்து வருகிறது. அதனால், கீழ்த் திசைகளான கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய தாழ்வான அமைப்பிலிருந்து, மேல் திசைகளான தெற்கு மற்றும் மேற்கு ஆகிய உயர்ந்த அமைப்புக்கு ஏறிச் செல்வதுபோல மனையின் அமைப்பை சரி செய்து பயன்படுத்தினால் அது நம்மையும் வாழ்வில் உயர வைக்கும் என்பது வாஸ்துவின் அடிப்படையாகும்.

ஜோதிட குறிப்புகள்

ஜோதிட ரீதியாக திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் நைருதி பாகத்தில் கிணறு அல்லது எளிதில் சரி செய்ய இயலாத பள்ளங்கள் உள்ள பூமி அல்லது இடத்தை நிச்சயம் வாங்குவது கூடாது. அதுபோல புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும், தனுசு, மீனம் ஆகிய ராசிகளிலும் பிறந்தவர்கள் அவர்களுக்கென்று இடம் வாங்கும்போது கண்டிப்பாக இடத்தின் ஈசான்யத்தில் வலுவான கட்டிட அமைப்புகளோ, அல்லது எளிதில் சரி செய்ய இயலாத மேடான அமைப்புகளோ இருந்தால் அந்த இடத்தை கண்டிப்பாக வாங்குவது கூடாது.

மேற்சொன்ன நான்கு பாகங்கள் தவிரவும் ஒரு மனையின் மையப்பகுதியான பிரம்ம ஸ்தானத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதில், பள்ளங்களோ, மேடுகளோ இல்லாமலும் அல்லது அப்படி இருந்தால் அதைச் சரி செய்ய இயலும் பட்சத்தில் அதை வாங்குவதை முடிவு செய்யலாம். ஒரு மனையின் நிலத் தத்துவமான நைருதியும், நீர்த் தத்துவமான ஈசான்யமும், நெருப்புத் தத்துவமான ஆக்னேயமும், காற்றுத் தத்துவமான வாயவியமும், ஆகாயத் தத்துவமான பிரம்ம ஸ்தானமும் நல்ல முறையில் உள்ள இடத்தை தேர்வு செய்வதே நல்லது.

வாஸ்து ரீதியான முடிவு

நகர்ப்புற இட நெருக்கடிகளில் இந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பது பெரும்பாலான இடங்களில் நடைமுறைக்கு ஒத்து வருவதில்லை. அத்தகைய மனைகளை வாஸ்து ரீதியாக சரி செய்து கொள்ளும் வாய்ப்புகள் இருப்பின் அவற்றை வாங்கலாம் என்பது வாஸ்து வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

Next Story