கட்டிடக்கலைக்கு சான்றாக அமைந்த பழமையான நகரம்
பல்வேறு கட்டிடங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவை பழங்கால கட்டிடக்கலைக்கு சான்றாக இன்றும் இருந்து வருகின்றன.
உலக நாடுகளின் பல இடங்களில் நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலகட்டத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவை பழங்கால கட்டிடக்கலைக்கு சான்றாக இன்றும் இருந்து வருகின்றன. அந்த வகையில் 1450-ம் ஆண்டில், கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மச்சு-பிச்சு (Machu Picchu) என்ற நகரம் குறிப்பிடத்தக்கதாகும்.
கொலம்பஸ் வருகைக்கு முந்தைய காலத்தில் அமெரிக்காவின் பெரிய பேரரசாக விளங்கிய இன்கா பேரரசு (Inca Empire) காலத்தை குறிப்பிடும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய நகரம் இதுவாகும்.
பெருநாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மலைத்தொடரில் இந்த நகரம் அமைந்துள்ளது. கச்சிதமாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள மச்சு-பிச்சு நகரம் பழங்கால கட்டிடக் கலைக்கு சான்றாக இன்றும் இருந்து வருகிறது.
அதிசய நகரம்
பல நூற்றாண்டுகளாக யாரும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இந்த நகரம் 1911-ம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்து உலக அளவில் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக மாறிவிட்டது. 150க்கும் மேற்பட்ட கட்டிடங்களால் உருவான மச்சு-பிச்சு நகரத்தை 1983-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய பகுதியாக அறிவித்தது. மேலும், 2007-ம் ஆண்டில் புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் மச்சு-பிச்சு குறிப்பிடப்பட்டது.
புதிரான கட்டுமான முறைகள்
பண்டைய கட்டிடக்கலைக்கு சான்றாக அமைந்துள்ள மச்சு-பிச்சு நகரம் கச்சிதமாக செதுக்கப்பட்ட பாறைக்கற்கள் மூலம் கட்டமைக்கப்பட்டு, அவற்றை பளபளப்பாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு அமைந்துள்ள சூரிய கோயில் முக்கியமான ஒன்றாக உள்ளது. 50 டன் எடை கொண்ட பல கற்கள் இந்த நகரத்தின் கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த மலை மீது அவ்வளவு எடை கொண்ட கற்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பது ஆச்சரியமானதாக உள்ளது. மலையின் அடிவாரத்தில் இருந்து பார்த்தால், மலை உச்சியில் இருக்கும் கட்டிடங்கள் பார்வைக்குத் தெரியாதவாறு கட்டப்பட்டுள்ளது. செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படி ஒரு நகரத்தை எந்தவித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில் அமைக்கப்பட்டது இன்றைய கட்டுமான தொழில்நுட்ப வல்லுனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாறைக்குடைவு படிக்கட்டுகள்
100-க்கும் அதிகமான படிக்கட்டு அமைப்புகள் அந்த பகுதிகளில் அமைந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான படிகள் ஒற்றைக் கல்லைக் குடைந்து செய்யப்பட்டவை. குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, இரு கற்களுக்கிடையே ஒரு பேப்பர் கூட நுழைய முடியாத அளவு கனகச்சிதமாகப் அமைக்கப்பட்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் வியப்பாக குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகை
இந்த நகரத்தின் கட்டுமான பணிகளில் இரும்பு உபகரணங்கள் அல்லது பொதி சுமக்கும் விலங்குகள் ஆகியவை பயன்படுத்தப்படவில்லை என்பது தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். மச்சு-பிச்சுவின் கட்டிடக் கலையையும், இயற்கை அழகையும் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர். 2003-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story