அடுக்குமாடி வீடு வாங்க அவசியமான ஆவணங்கள்


அடுக்குமாடி வீடு வாங்க அவசியமான ஆவணங்கள்
x
தினத்தந்தி 1 Jun 2019 4:18 AM GMT (Updated: 1 Jun 2019 4:18 AM GMT)

மலிவு விலை வீடுகள் என்ற நடுத்தர மக்களுக்கான குடியிருப்பு திட்டம்

நடுத்தர மக்களுக்கான குடியிருப்பு திட்டம் மூலம், அனைவருக்கும் வீடு என்ற பொது நிலையை நோக்கி இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தனிப்பட்ட வீடுகளை ஒப்பிடும்போது அடுக்குமாடி குடியிருப்புகள் நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இருப்பதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, மலிவு விலை வீடுகள் வாங்க சுலபமான வங்கி கடன், எளிய மாதாந்திர தவணைகளில் உடனடியாக கிடைப்பது நடுத்தர மக்களுக்கு சாதகமாக உள்ளது.

மேலும், மாதாமாதம் கொடுக்கும் வீட்டு வாடகைத் தொகையை, மாதாந்திரத் தவணையாக செலுத்தினால் சொந்த வீடே வாங்கலாம் என்ற திட்டத்தில் புதிய குடியிருப்பு திட்டங்கள் பலரது கவனத்தை கவர்ந்துள்ளன. இன்றைய நகர்ப்புற சூழலில் வீட்டுமனை அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஆகியவற்றை வாங்குவதற்கு முன்னர் எந்தெந்த ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் பற்றி கவனம் கொள்ள வேண்டும் என்பது பற்றி ரியல் எஸ்டேட் நிபுணர்கள் குறிப்பிடுவதை கீழே காணலாம்.

* சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) அல்லது நகர் ஊரமைப்பு (DTCP) இயக்ககம் ஆகியவற்றுக்கு செலுத்தப்பட்ட கட்டணங்களுக்கான ரசீதுகள்.

* கட்டிடத்திற்கான வரைபடம், கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி ஆகியவை.

* சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட்ட கட்டிட வளர்ச்சி மற்றும் அது தொடர்பான கட்டண ரசீதுகள்.

* நிலம் அல்லது மனையின் ஆவணங்கள், அவற்றின் தாய்ப் பத்திரங்கள் மற்றும் சமீபத்திய காலகட்டம் வரையிலான வில்லங்க சான்றிதழ்.

* மின்சாரம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டண ரசீதுகள்.

* குடிநீர் மற்றும் வடிகால் துறை குழாய் இணைப்புகள் தெருவின் எந்த முனைகளில் இருந்து எத்தனை அடி கீழே பதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான வரைபடம்.

* வீட்டின் ‘ஸ்ட்ரக்சுரல் வரைபடம்’ (Structural Drawing) மற்றும் மின் சாதன அமைப்புகளுக்கான (Electrical Drawing) வரைபடம்.

* கட்டுமான அமைப்பில் கார் பார்க்கிங் இடம், அதன் அளவு, அதன் வரிசை எண் என்ன என்பதை காட்டும் வரைபடம்.

* கட்டிட வலிமையை உறுதி செய்யும் தர நிர்ணய சான்றிதழ் (Stability Certificate) .

* வீடுகளில் உள்ள லிப்ட், மோட்டார், சி.சி.டி.வி கேமரா, சோலார் பவர் ஹீட்டர் ஆகியவற்றுக்கு உரிய ரசீதுகள், வாரண்டி கார்டு, சம்பந்தப்பட்ட உபகரணங்களை ரிப்பேர் பார்க்கும் மெக்கானிக்குகள் மற்றும் சர்வீஸ் சென்டர் தொலைபேசி எண்கள்.


Next Story