குடியிருப்புகளை உடனடியாக கட்டமைக்க ஏற்ற ‘ரெடிமேடு’ வீடுகள்


குடியிருப்புகளை உடனடியாக கட்டமைக்க ஏற்ற ‘ரெடிமேடு’ வீடுகள்
x
தினத்தந்தி 14 Jun 2019 11:00 PM GMT (Updated: 14 Jun 2019 11:08 AM GMT)

மக்கள் தொகைப் பெருக்கம், நகர்ப்புற இட நெருக்கடி, நில மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால், வீடுகளை விரைவாக கட்டமைக்க உதவும் ரெடிமேடு வீடுகள் மேலை நாடுகளில் பரவலான உபயோகத்தில் இருந்து வருகின்றன.

க்கள் தொகைப் பெருக்கம், நகர்ப்புற இட நெருக்கடி, நில மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால், வீடுகளை விரைவாக கட்டமைக்க உதவும் ரெடிமேடு வீடுகள் மேலை நாடுகளில் பரவலான உபயோகத்தில் இருந்து வருகின்றன. ஒரு வீட்டை முற்றிலும் ரெடிமேடாக உருவாக்கும் முறை நியூசிலாந்தை சேர்ந்த கட்டிட பொறியாளர் ஒருவரால் கண்டறியப்பட்டதாகும். வழக்கமான முறையில் சுமார் 1000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டை கட்ட குறைந்த பட்சம் ஆறு மாத காலம் ஆகலாம். மேலும், அதன் கட்டிட வடிவமைப்பைப் பொறுத்து கட்டுமான பணிக்காலம் அதிகரிக்கலாம். ஆனால், இந்த புதிய முறையில் ஒரே நாளில் வீட்டை கட்டமைத்து விடலாம்.

‘பிரிகாஸ்ட் பேனல்கள்’

1986–ம் ஆண்டில் கண்டறியப்பட்ட (Insulated Precast Concrete Panels) தொழில் நுட்ப முறையில் 24 மணி நேரத்தில் நான்கு ‘ரெடிமேடு’ வீடுகளை கட்டமைக்கலாம். கட்டுமான பணிகளுக்கான காலம் மற்றும் அதன் மொத்த செலவு ஆகியவற்றை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் இந்த புதிய தொழில்நுட்பம் பல ஆண்டுகள் தொடர் முயற்சிக்கு பின்னரே வடிவாக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த ரெடிமேடு வீடுகள் கட்டமைப்பு பரவலாக உள்ளது.

குறைந்த பரப்பு வீடுகள்

‘பிரிகாஸ்ட் பேனல்’ வீடுகள் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகமாகி விட்டது. இந்த தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட பரப்பளவு கொண்ட வீட்டிற்கான தரைத்தளம், ஜன்னல்கள், சமையலறை, ஹால் உள்ளிட்ட பல பகுதிகள் தொழிற்கூடத்தில் தயாரிக்கப்படுகின்றன. வீட்டின் அளவுக்கேற்ப அனைத்து பாகங்களும் இணைக்கப்பட்ட வீட்டை கட்டுமான பணியிடத்தில் அமைத்து எடுத்து வந்து அஸ்திவாரத்தின் மீது பொருத்திக்கொள்ளலாம். இல்லாவிட்டால், வீட்டின் பாகங்களை வாகனம் மூலம் கொண்டு வந்து மனையில் வீடாக இணைத்துக் கொள்ளலாம். இந்தத் தொழில்

நுட்பமானது தங்கும் விடுதிகள், சிறிய அறைகள் தொகுப்பு வீடுகள் ஆகியவற்றை கட்டமைக்க பொருத்தமாக இருக்கும். 

 கனசதுர கான்கிரீட் அமைப்பு

இந்திய அளவில் பெங்களூரு நகரத்தில் ‘ரெடிமேடு வீடுகள்’ கொண்ட குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களூரு வளர்ச்சி நிறுவனம் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 12 ஏக்கர் நிலத்தில் 1520 தொகுப்பு வீடுகளை கட்டியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் பாரம்பரிய முறையில் உபயோகப்படுத்தப்படும் சுவர்களுக்குப் பதிலாகக் கன சதுர கான்கிரீட் (
Cubes
) யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு வளர்ச்சி நிறுவனத்தின் வீட்டு வசதித் திட்டத்தில் ஒரு வீட்டை 240 சதுர அடிக்கு 160 சதுரடி என இரு யூனிட்டுகளாகப் பிரித்து அமைக்கப்பட்டு, 1520 வீடுகளும் கட்டுமான நிலத்திற்கு அருகே ஒரு தொழிற்கூடத்தில் உருவாக்கப்பட்டு எடுத்து வந்து மனையில் அமைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நில அதிர்வுகளை தாங்கும்

ரெடிமேடு வீடுகளின் தூண்கள், கான்கிரீட் கம்பிச் சட்டகங்கள் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதனால், இது பாரம்பரிய கட்டுமானம் போல உறுதியானதாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். இந்தத் தூண்கள் அதிக எடை மற்றும் பூகம்பம் அதிர்வுகளைத் தாங்கக்கூடிய வகையில் இருக்கும். வெளிப்புறச் சுவர்கள் 4 அங்குல கனமும், உட்புறச் சுவர்கள் 3 அங்குல கனமும் கொண்டவை. கிட்டத்தட்ட 90 சதவிகித பணிகள் தொழிற்சாலையிலேயே முடிந்து விடும் என்ற நிலையில் குறைவான பட்ஜெட்டிலேயே கட்டுமானப் பணிகளை செய்து முடிக்கலாம்.

நமது பகுதிகளில் விரைவில் அறிமுகம்

விரைவான நகர மயமாக்கல், நகரத்தை நோக்கி இடம்பெயரும் மக்கள் எண்ணிக்கை, நுகர்வு கலாசாரம் போன்ற காரணங்களால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வீடுகளுக்கான தேவையை விரைவாகப் பூர்த்தி செய்ய ரெடிமேடு வீடுகள் நல்ல தீர்வாகவும், மாற்றாகவும் அமையும். தமிழகத்தில் இனி வரும் காலங்களில் ‘பேக்டரி வீடுகள்’ என்று குறிப்பிடப்படும் ‘ரெடிமேடு வீடுகள்’ கட்டுமானத்துறைக்கு அறிமுகம் ஆகலாம். இன்றைய காலகட்டத்தில் வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்கள் பெரும்பாலும் ரெடிமேடாக கிடைக்கின்றன. அந்த வகையில், ரெடிமேடு வீடுகளும் விரைவில் பிரபலம் அடையலாம்.

Next Story