வாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்


வாஸ்து  குறிப்பிடும்  மனையின்  வடிவங்கள்
x
தினத்தந்தி 14 Jun 2019 11:00 PM GMT (Updated: 14 Jun 2019 11:28 AM GMT)

வீட்டு மனையின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் இன்றைய சூழலில் வாங்கப்படும் மனை இடத்தை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.

வீட்டு மனையின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் இன்றைய சூழலில் வாங்கப்படும் மனை இடத்தை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது. ஒரு இடம் அல்லது மனையை வாங்க முடிவு செய்யும்போதே அதன் வடிவம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். காரணம், சீரற்ற நீள அகலங்கள் கொண்ட இடங்களை வாங்கி, வாஸ்து சாஸ்திரப்படி இடத்தைச் சீரமைத்து, கட்டிடத்தைக் கட்டும்போது குறிப்பிட்ட அளவு இடத்தைப் பயன்படுத்த இயலாமல் போக வாய்ப்பு உண்டு. 

அதிக சந்தை மதிப்பு

பயன்படுத்த இயலாத இடங்களையும் எப்படியாவது சரி செய்து உபயோகப்படுத்த வாஸ்து விதிகள் பெரிதும் உதவி செய்கின்றன. ஆனால், அவ்வாறு சீர் செய்யப்பட்ட பகுதிகள் கட்டிடத்தின் மொத்த அமைப்புடன் இணையாமல் தனிப்பட்ட அமைப்பாக இருக்கும் நிலையும் ஏற்படலாம். அதிக சந்தை மதிப்புள்ள இடத்திற்குத்தான் இவ்வகை பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகின்றன. 

சதுர மனை அமைப்பு

வாஸ்து சாஸ்திர விதிகளின்படி ஒரு இடம் சதுரமாக அமைந்திருப்பது முதல் தரமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு பக்கங்களிலும் சரியான அளவுகள் கொண்ட சதுர மனைகளில் வடக்கு அல்லது தெற்குப் பார்த்தவை பெண் தன்மையைக் குறிப்பிடும். அதாவது, அதில் வசிப்பவர்களுக்கு மென்மையான போக்கும், கலை, அல்லது அழகியல் சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்கள் என்று வாஸ்து குறிப்பிடுகிறது. 

சதுர மனைகளில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கியவாறு அமைந்த மனைகள் ஆண் தன்மையைக் குறிப்பிடும். அதாவது, அதில் வசிப்பவர்கள் தமது முடிவுகளில் தீர்க்கமாக செயல்படுபவர்களாகவும், அரசுத்துறை அல்லது தனியார் நிறுவன தலைமை பொறுப்பில் உள்ளவர்களாகவும், சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

செவ்வக மனை அமைப்பு

செவ்வகமான வடிவத்தை கொண்ட மனைகள் இரண்டாம் நிலையில் உள்ளவை என்று வாஸ்து குறிப்பிடுகிறது. இரண்டு மடங்கு நீளம், ஒரு மடங்கு அகலம் கொண்டவை அல்லது இரு மடங்கு அகலம், ஒரு மடங்கு நீளம் கொண்டவை செவ்வக மனைகளாகும். இதிலும் கிழக்கு–மேற்கு நீளம் கொண்டவை மற்றும் தெற்கு–வடக்கு நீளம் கொண்டவை என்று இரண்டு வகை மனைகள் உள்ளன. அதில், கிழக்கு–மேற்கு நீளம் கொண்ட மனைகள் ஆண் மனையாகக் கருதப்படும். அந்த இடமானது ஆண்களது சகல முயற்சிகளையும் வெற்றியை நோக்கிச் செலுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்ததாக உள்ள தெற்கு–வடக்கு நீளம் கொண்ட மனைகள் பெண் மனையாகக் கருதப்படுகிறது. அதாவது பெண்கள் முன்னின்று செய்யும் அனைத்து காரியங்களுக்கும் நல்ல வெற்றி வாய்ப்புகளைத் தரக் கூடியது என்று சொல்லப்படுகிறது. 

வாஸ்து ஆலோசனை

வீட்டு மனைகள் பொதுவாக சதுரம் அல்லது செவ்வகம் தவிர நீள் சதுரம், அகலத்தைப்போல மூன்றுக்கும் மேற்பட்ட மடங்கு நீளம் கொண்ட இடங்கள், வட்டம், அரைவட்டம், நான்கிற்கும் மேற்பட்ட கோணங்கள் உள்ளவை, ஓவல் வடிவங்கள், நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு அளவுகள் கொண்டவை, மேலும்,  வித்தியாசமான வடிவங்கள் கொண்டவற்றை தேர்வு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். தவிர்க்க இயலாத சூழலில் சீரற்ற அளவுகள் கொண்ட மனை அல்லது இடத்தை வாங்கியாக வேண்டும் எனும் பட்சத்தில் வாஸ்து ரீதியாக அவற்றை சீர் படுத்தும் வாய்ப்புகள் மற்றும் சாதகமான அம்சங்கள் மனையில் இருப்பதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மனை அல்லது இடத்தை வாங்கலாம்.

வட்ட வடிவ இடம்

வட்ட வடிவமான இட அமைப்பு வீடுகள் அமைப்பதற்கு ஏற்றதல்ல என்று வாஸ்து  குறிப்பிடுகிறது. காரணம், அதில் இருதிசைச் சக்திகள் இணைந்து செயல்பட வாய்ப்புகள் இல்லை. அதாவது, ஈசானியம், ஆக்கினேயம், வாயவியம், நைருதி ஆகிய மூலைகள் வடிவமைப்பாக அமையாமல், வளைவில் ஒடுங்கி நிற்கும். அதனால் பஞ்சபூத சக்திகள் சம அளவில் பரவி, குடியிருக்கும் வீட்டில் சாதகமான அலை இயக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்காது. ஆனால், விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள், கோவில்கள் மற்றும் பொதுக்கட்டிடங்கள் ஆகியவற்றை வட்ட வடிவத்தில் அமைக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story