வலிமையான அஸ்திவாரத்திற்கு ஏற்ற வழிமுறைகள்
வீடுகளுக்கான தளமட்டம் என்பது கச்சிதமாகவும், உறுதியாகவும் இருக்கவேண்டும். அதனால், தொடக்க நிலையிலேயே தளமட்ட அளவில் நிரப்பப்பட்ட மண்ணை கெட்டியாக இறுகச்செய்வது அவசியம்.
வீடுகளுக்கான தளமட்டம் என்பது கச்சிதமாகவும், உறுதியாகவும் இருக்கவேண்டும். அதனால், தொடக்க நிலையிலேயே தளமட்ட அளவில் நிரப்பப்பட்ட மண்ணை கெட்டியாக இறுகச்செய்வது அவசியம். அதன் காரணமாக அஸ்திவாரம் உறுதி பெறும். சிறிய ‘பட்ஜெட்’ வீடாக இருந்தாலும், பெரிய அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் தளமட்ட அமைப்பில் மிக்க கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கட்டுமான வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடலுக்கு அருகில் அமைந்துள்ள சென்னை போன்ற பெருநகரப் பகுதிகளில் கட்டுமானங்களுக்கான அஸ்திவார பணிகளில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும். காரணம் மண்ணின் அமைப்பு, ஈரப்பதமும், அரிக்கும் தன்மை பெற்றதாகவும் இருப்பதால் பலவித தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, தளமட்டத்தில் நிரப்பப்பட்ட மண்ணை கூடுதல் கவனத்துடன் இறுகச்செய்யவேண்டியது அவசியம். அதன் அடிப்படையில் தளமட்ட கட்டமைப்பு பணிகளின்போது கவனிக்க வேண்டியவை பற்றி பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்ததாவது:
* அஸ்திவார பணிகளின்போது கிடைத்த மண்ணையே தளமட்டத்தை நிரப்ப பயன்படுத்தும் முறையே பல இடங்களில் வழக்கமாக உள்ளது. அந்த மண் போதுமானதாக இல்லாதபட்சத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து மண் கொண்டு வரப்பட்டு தளமட்டம் நிரப்ப பயன்படுத்தப்படுகிறது. அந்த நிலையில் இரண்டு வகை மண்ணையும் ஒன்றாக கலந்த பின்னர், அதில் கரையான் தடுப்பு மருந்தையும் சேர்த்த பிறகே தளமட்ட பணிகளை செய்ய வேண்டும்.
* தளமட்டத்தில் நிரப்பப்படும் மண்ணை அப்படியே பரப்பிவிட்டு இறுகச்செய்யக்கூடாது. ஆங்காங்கே காலியாக இருக்கும் இடங்களிலும் நன்றாக மண் பரவுமாறு நிரப்ப வேண்டும். மண்ணை நன்றாக அழுத்தி இறுகச்செய்வதற்கு ‘எர்த் ரேம்மர்’ போன்ற கருவிகளை பயன்படுத்தலாம். அதன் மூலம் மண்ணை இறுகச்செய்யும் வேலையை சுலபமாக முடிக்கலாம். எவ்வளவு அழுத்தமாக மண் இறுகச்செய்யப்படுகிறதோ அதைப்பொறுத்து தரைத்தளம் உறுதியாகவும், எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்.
* மண் நன்றாக இறுக்கப்படும்போது சம அளவு மட்டத்தை பராமரிக்க தண்ணீர் அதிக அளவில் தேவையாக இருக்கும். தண்ணீரை நன்றாக தெளித்து மேடு பள்ளங்கள் எதுவும் இல்லாமல் கச்சிதமாக மேற்பரப்பை அமைத்த பின்னர், இறுக்கப்படும் வேலையை செய்தால்தான் தளமட்டம் சரியாக அமையும்.
* மண்ணுக்கு பதிலாக இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகளை கொட்டி தரை மட்டத்தை நிரப்பினால், ஒழுங்கற்ற வடிவங்களில் இருக்கும் கட்டுமான கழிவுகளால் வெற்றிடம் உருவாகி விடலாம். பின்னர், சிறிது காலத்தில் தளமட்டத்தின் உட்புற சமநிலை பாதிக்கப்பட்டு ஏற்ற இறக்கங்கள் உருவாகி, தள மட்டத்தில் விரிசல்கள் உருவாகலாம்.
* ‘கிரஷர் மண்’, சரளை மண் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தளமட்ட பணிகளுக்கு பயன்படுத்தலாம். குறிப்பாக, அந்த கலவையை பல்வேறு அடுக்குகளாக அனைத்து இடத்திலும் ஒரே சீராக போட்ட பின்னரே கெட்டிப்படுத்தும் வேலையைச் செய்யவேண்டும்.
* தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ‘ரப்பீஸ்’ எனப்படும் கான்கிரீட் கழிவுகளை பயன்படுத்த வேண்டியதாக இருந்தால், அவற்றின் வடிவம் எப்படி உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். ‘ரப்பீஸ்’ வெவ்வேறு அளவுகளில் இருந்தால் அவற்றை ஒரே சீரான அளவில் இருக்குமாறு உடைத்த பின்னர் பயன்படுத்த வேண்டும்.
Related Tags :
Next Story