சூழலை பாதுகாக்கும் பசுமை கட்டுமானப்பொருள்


சூழலை பாதுகாக்கும் பசுமை கட்டுமானப்பொருள்
x
தினத்தந்தி 13 July 2019 10:36 AM GMT (Updated: 13 July 2019 10:36 AM GMT)

கட்டுமானங்களை சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத மரபு சார்ந்த பொருட்கள் மூலம் உருவாக்குவது பற்றிய விழிப்புணர்வு தற்போது பரவலாக உருவாகி வருகிறது. அந்த வரிசையில் கட்டுமான பணிகளில் மூங்கிலை பயன்படுத்துவது பற்றி உலக நாடுகள் பலவற்றிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரைவாக வளரக்கூடிய மூங்கிலை கட்டுமான பணியின் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தலாம் என்பது சோதனை ரீதியில் கண்டறியப்பட்டுள்ளது.

கார்பன் வெளியீடு

ஒரு டன் இரும்பு கம்பி உற்பத்தியின்போது சுமார் 2 டன் அளவு வெளியாகும் கார்பன், சுற்றுப்புறத்தில் உள்ள காற்று மண்டலத்தில் கலப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், ஒரு டன் மூங்கில் வளரும்போது கிட்டத்தட்ட 2 டன் கார்பன் வாயுவை எடுத்துக்கொண்டு, ஆக்ஸிஜனை வெளிப்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. குறிப்பாக, மூங்கிலால் அமைக்கப்பட்ட வீடுகள் இடி, மின்னல் போன்ற இயற்கை தாக்குதலுக்கு உள்ளாவதில்லை என்பது பலரது கருத்தாக உள்ளது.

மூங்கிலின் வலிமை

பொதுவாக, இரும்பு கம்பிகள் மற்றும் சிமெண்டு கான்கிரீட் கலவை கட்டுமானங்கள் அதிகப்படியான அழுத்தம் காரணமாக விரிவடைகின்றன. ஆனால், இரும்பு கம்பிகளுக்கு மாற்றாக மூங்கிலை பயன்படுத்தி அமைக்கப்படும் கட்டமைப்புகள் அந்த பாதிப்புகளுக்கு உள்ளாவதில்லை என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. காரணம், மூங்கில் அதிகப்படியான நார்த்தன்மை கொண்டதுடன், உறுதி மற்றும் அதிக இழுவை திறம் கொண்டது.

இரும்பு கம்பிகளுக்கு மாற்று

நவீன முறையில் ‘சென்டரிங்’ பணிகள் மூலம் கான்கிரீட் அமைக்கும் பணிகளில், இரும்பு கம்பிகளுக்கு பதிலாக மூங்கிலை பயன்படுத்தி, சிமெண்டு கலவை அல்லது தரமான சுண்ணாம்பு கலவை பயன்படுத்தி உறுதியான கட்டுமானங்களை அமைக்கலாம். குறிப்பாக, கட்டுமான பணிகளில் பயன்படுத்துவதற்கு முன்னர் மூங்கிலை நெருப்பு மூலம் சூடு படுத்தி விட்டு பயன்படுத்தினால் கரையான் பாதிப்பு ஏற்படாது என்பதை பலரும் குறிப்பிடுள்ளனர். வீட்டின் கூரை அமைப்பில் நாட்டு ஓடுகள் அடுக்குவது போன்று மூங்கிலை அடுக்கலாம். பில்லர்கள், தாங்கு தூண், படிக்கட்டுகள், தரை, சுவர் ஆகிய பகுதிகளில் ஏற்ற விதத்தில் மூங்கில் கொண்டு தக்க வடிவமைப்பை உருவாக்கலாம்.

நமது பகுதிகளில் பயன்பாடு

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 80 வகைகளுக்கும் மேற்பட்ட வகைகள் மூங்கிலில் உள்ளன. இந்திய அளவில் அதிகமாக மூங்கிலை பயன்படுத்தும் பகுதிகளாக மேற்கு வங்கம், மணிப்பூர், சிக்கிம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன. உலக நாடுகளில் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகியவற்றில் மூங்கிலை அதிகமாக கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்துகிறார்கள். மூங்கில் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக நமது நாடு இருக்கிறது. மூங்கில் கொண்டு கட்டப்படும் ஒரு வீட்டின் ஆயுள்காலம் சுமார் 30 வருடங்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், பராமரிப்புகளை கச்சிதமாக செய்து வருவதன் மூலம் அதை 40 வருடங்கள் நீடித்து நிற்கும்படி செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

Next Story