நிலத்தடி நீரை கண்டறிய உதவும் நவீன தொழில்நுட்பம்
குடியிருப்புகள் மற்றும் விவசாயம் ஆகியவற்றின் தண்ணீர் தேவைகள் பெரும்பாலும் நிலத்தடி நீர் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
தற்போது தமிழக அளவில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழத்திற்கு சென்றுவிட்டது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளை தூர் வாருவது அல்லது ஆழப்படுத்துவது ஆகிய பணிகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் புதியதாக ‘போர்வெல்’ அமைக்கும் பணிகளும் நடந்து வருவதை காண முடிகிறது. சென்னையை சுற்றிலும் உள்ள பகுதிகளில் அதிகபட்சமாக 150 அல்லது 200 அடிகளுக்குள் நீர் கிடைத்து விடுகிறது. ஆனால், தமிழகத்தின் பல பகுதிகளில் கிட்டத்தட்ட 1000 அடி வரையிலும் ‘போர்வெல்’ அமைத்தும் நிலத்தடி நீர் கிடைக்கவில்லை என்ற நிலையும் உள்ளது.
நீர் மட்டம் கண்டறிவதில் சிக்கல்
பழைய காலம் முதல் இன்று வரை நிலத்தடி நீர் மட்டம் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் முறைகள் அனைத்தும் பூமியின் காந்த அலைகளை மையமாகக் கொண்டுள்ளன. அந்த முறைகளில் நிலத்தடி நீருக்கான காந்த அலைகளை ( El-e-c-t-ro Ma-g-n-e-t-ic Re-s-o-n-a-n-ce) கச்சிதமாக கண்டறிவதில் குறைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக நிலத்தடி நீரூற்று அமைவிடத்தை கண்டறிவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
அதிநவீன முறை
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக அதிநவீன ‘ 3D Seismic Refraction ’ என்ற தொழில்நுட்பம் தற்போது அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் வரை துல்லியமாக நிலத்தடி நீரை கண்டறிய இயலும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்த முறையின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தின் ஆழம், அதன் அடர்த்தி, கொள்ளளவு மற்றும் வெளியேற்றும் திறன் ஆகியவற்றை தெரிந்து கொள்வதுடன், நிலத்தடி நீர் மட்ட ஆழம் மற்றும் இடம் ஆகியவற்றை முப்பரிமாண தோற்றத்தில் பார்க்கவும் முடியும்.
முப்பரிமாண படங்கள்
குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர் எங்கு உள்ளது, எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துகொண்டு, தண்ணீர் இல்லாத இடத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதை தவிர்த்துக்கொள்ளலாம். அதன் காரணமாக, தேவை இல்லாமல் ‘போர்வெல்’ ஆழப்படுத்தும் செலவு ஏற்படாது. இந்த கருவி மூலம் சுமார் 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புள்ள இடத்தை ‘சர்வே’ செய்து ஒவ்வொரு சதுர மீட்டர் இடத்திலும் அமைந்துள்ள நிலத்தடி நீரின் தன்மையை அறிந்து கொள்ள இயலும். இதன் மூலம் அதிகபட்சமாக 1500 அடி ஆழம் வரையில் உள்ள நீரின் தன்மை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
Related Tags :
Next Story