அறைகளின் உள் அலங்காரத்துக்கு எளிய குறிப்புகள்
பெருநகரங்களில் வசிக்கும் நடுத்தர மக்களின் பெரும்பாலான குடியிருப்புகள் ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு பெட்ரூம் என்ற அளவில் எளிமையாக அமைக்கப்பட்டிருக்கும்.
அத்தகைய வீடுகளில் உள் அலங்காரத்தை எளிமையாகவும், அழகாகவும் செய்து கொள்வது சுலபமானது என்று உள் கட்டமைப்பு வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, அதை எளிய பட்ஜெட்டிலும் செய்து கொள்ள இயலும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக பொருட்கள் வேண்டாம்
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள்தான் வீடுகளின் தேவைகளை நிறைவேற்றுகிறது. குறிப்பாக, ‘ஸ்டுடியோ அபார்ட்மெண்டு’ கலாச்சாரம் நமது தென்மாநிலங்களில் பரவி வருகிறது. சிறிய அளவு இடவசதி கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் பர்னிச்சர் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருள்களை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். அறைக்குள் குறைவான பொருட்கள் இருப்பதே அதற்கு தனிப்பட்ட அழகை தரும் என்பது பல உள்கட்டமைப்பு வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
சுத்தம் அவசியம்
சென்னை போன்ற பெருநகரங்களில் சுற்றுப்புற தூசி, எளிதாக காற்றின் மூலம் வீடுகளுக்குள் பரவி விடுகிறது. பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது இதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, வீடுகளின் முன் அறையான வரவேற்பறையை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அங்கே பல்வேறு பொருட்களை போட்டு வைத்திருக்கக்கூடாது என்ற கருத்தும் கவனிக்கத்தக்கது.
வரவேற்பறையின் வண்ணம்
வரவேற்பறையில் மரத்தால் செய்யப்பட்ட பர்னிச்சர் வகைகள் இருந்தால், அங்குள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகள் ஆகியவற்றின் ‘பிரேம்கள்’ மரச்சட்டமாக இருப்பது நல்லது. அங்கு பூசப்பட்டுள்ள சுவர் பெயிண்டிங்கிற்கு ஏற்ப ‘ஸ்கிரீன்’ வண்ணங்கள் அமையலாம். இல்லாவிட்டால், அதற்கு ‘கான்ட்ராஸ்ட்’ ஆக உள்ள வண்ணங்களிலும் ‘ஸ்கிரீன்களை’ அமைத்து அழகை கூட்டலாம். பொதுவாக, ஹால் பகுதிகளில் கண்ணாடி பொருட்கள் வைத்திருப்பது இடத்தை பெரியதாகக் காட்டும். ஆனால், கண்ணாடி பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற நிலையில் குட்டி பசங்கள் உள்ள வீடுகளில் கண்ணாடி பொருட்களை தவிர்ப்பது அல்லது பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
சிறிய சோபா செட்டுகள்
சிறிய அளவு கொண்ட வரவேற்பறைகளில் பெரிய சோபா செட்டுகளை பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது. அதற்கு பதிலாக ‘திவான்’ போன்ற மெத்தை விரிப்புகளை அழகாக அமைத்துக்கொள்ளலாம். மரத்தில் செய்யப்பட்ட ‘சோபா’ செட்டுக்கு ‘காபி டேபிள்’ அல்லது ‘டீப்பாய்’ என்பது முற்றிலும் பீங்கான் அல்லது கண்ணாடியாக இருப்பது பொருத்தமாக இருக்காது. அதேசமயம், டீப்பாயின் கால் பகுதிகள் மரமாகவும், அதன் மேல் பகுதி கண்ணாடியாகவும் இருப்பது ஒரு வகையில் அழகாக இருக்கும்.
இடப்பற்றாக்குறை காரணமாக ‘டைனிங் டேபிள்’ அமைக்க இயலாத நிலையில் கச்சிதமாக ஒரு பலகையை, மடக்கும் விதத்தில் சுவரில் பொருத்திக் கொள்ளலாம். சாப்பிடும்போது அதை நிமிர்த்து வைத்து பயன்படுத்தி விட்டு, பின்னர் சுவரோடு அதை மடக்கி வைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான வண்ணம்
குட்டி பசங்களுக்கான அறை சுவர்களுக்கு ‘பிங்க்’ அல்லது ‘லாவண்டர்’ வண்ணங்கள் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, பெண் குழந்தைகளின் அறைகளுக்கு ‘லைட் பிங்க்’ நிறம் பொருத்தமானது என்றும், ஆண் குழந்தைகளின் அறைகளுக்கு ‘லாவண்டர்’ நிறம் பொருத்தமானது என்றும் பரவலான கருத்து உள்ளது. அதற்கு மனோதத்துவ ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், மென்மையாகவும், வளரும் குழந்தைகளின் சுபாவத்திற்கு ஏற்றதாகவும் ‘பிங்க்’ மற்றும் ‘லாவண்டர்‘ நிறங்கள் அமைந்துள்ளதாக நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story