ஒரே நாளில் கட்டி முடித்த நவீன வீடு


ஒரே நாளில் கட்டி முடித்த நவீன வீடு
x
தினத்தந்தி 13 July 2019 11:05 AM GMT (Updated: 13 July 2019 11:05 AM GMT)

ரஷ்யாவில் உள்ள ‘ஸ்டுபினோ’ என்ற இடத்தில் கடுமையான குளிர் காலத்தில், ‘அபிஸ்கோர்’ என்ற நிறுவனம் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் புதிய கட்டிடங்களை வடிவமைக்கிறது.

வீடு கட்ட ஒரு நாள் போதும் எனவும் அந்த நிறுவனம் நிரூபித்துள்ளது. அதாவது, ஒரு கம்ப்யூட்டர் உபகரணத்தில் கட்டிட வரைபடம் 3டி வடிவத்தில் இருக்கும். அதில் கட்டிடப் பணிகளை செய்வதற்கான பிரத்யேக 3டி பிரிண்டிங் இயந்திரமும் இணைக்கப்பட்டிருக்கும். அந்த இயந்திரம் இயங்கும்போது கட்டிடத்தின் 3டி வரைபடத்துக்கு ஏற்ப கம்பி, சிமெண்டு கலவை ஆகியவற்றைக் கொண்டு, அந்த உபகரணம் வீட்டை தாமாகவே வடிவமைத்துக் கொள்கிறது.

கம்ப்யூட்டர் வரைபடம்

சிமெண்டு கலவை, இரும்புக் கம்பிகள் போன்றவற்றை கையாளும் அபிஸ் கோர் 3டி இயந்திரம், 360 டிகிரி கோணத்தில் முழு வட்டமாக இயங்கும் திறன் கொண்டது. வீடு கட்டும் இடத்தில் வைக்கப்பட்ட அந்த இயந்திரம் மூலம் சிமெண்டு கலவை குழாய் மூலம் செலுத்தப்படுகிறது. அதில் உள்ள பெரிய ‘சிரிஞ்ச்’ போன்ற அமைப்பு வேகமாக சுவர்களை உருவாக்க ஆரம்பிக்கிறது. கட்டுமான அமைப்பானது உபகரணத்தில் உள்ள கம்ப்யூட்டர் வரைபடத்தின்படி வீட்டின் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. அந்த சுவர்களுக்கு இடையில் கம்பிகள் மற்றும் தட்பவெப்ப நிலையிலிருந்து பாதுகாக்கும் ‘இன்சுலேஷன்’ பொருட்களையும் அந்த இயந்திரம் வைத்து வீட்டைக் கட்டமைக்கிறது.

உள் கட்டமைப்பு முறை

இயந்திரம் கட்டிடத்தை அமைக்குபோதே பணியாளர்கள் கதவுகளையும், ஜன்னல்களையும் வரைபடத்தில் இருப்பதற்கேற்ப கச்சிதமாக பொருத்தி விடுகிறார்கள். சுற்றுப்புற சுவர்கள் கட்டி முடிக்கப்படும்போது ஒரு பணியாளர் விரைவாக செயல்பட்டு கட்டிடத்துக்கு தக்க வண்ணங்களை பூசுகிறார். மேலும், வீட்டின் உள் கட்டமைப்புக்கு ஏற்ப தண்ணீர் குழாய்கள், மின்சாரம் போன்ற வசதிகளும் வீட்டில் அமைக்கப்படுகின்றன. தற்போது இந்தத் தொழில் நுட்பம் மூலம் நான்கு அறைகள் வரை கட்டப்படுகின்றன.

சிக்கன பட்ஜெட்

பணியாளர்கள் அதிகமாக இல்லாமல், 3டி முறையில் வீடு கட்டும் இயந்திரம் மூலம் 24 மணி நேரத்தில் வீட்டை உருவாக்கலாம். அவ்வாறு, கிட்டத்தட்ட 38 சதுர மீட்டர் கொண்ட வீட்டின் கட்டுமான பணிகளுக்கு சுமார் ரூ. 7 லட்சத்திற்குள் ஆனதாக தெரிய வந்துள்ளது. அந்த வீட்டிற்குள் அனைத்து நவீன வசதிகளையும் அமைத்துக்கொள்ளலாம் என்றும் வீட்டின் ஆயுள் காலமானது சுமார் 50 ஆண்டுகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கட்டிடத்தை எளிதாக இடிக்க முடியாது என்பதுடன் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தாங்கி நிற்கும் அளவுக்கு உறுதியானது என்றும் அபிஸ்கோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story