ரியல் எஸ்டேட் துறைக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சலுகைகள்


ரியல் எஸ்டேட் துறைக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சலுகைகள்
x
தினத்தந்தி 13 July 2019 11:28 AM GMT (Updated: 13 July 2019 11:28 AM GMT)

இந்திய ரியல் எஸ்டேட் சந்தை என்பது சுமார் ரூ. 7 லட்சம் கோடிக்கும் அதிகமான வர்த்தக மதிப்பு கொண்ட துறையாக உள்ளது. மேலும், இந்திய அளவில் பொறியியல் பட்டதாரிகள் முதல் கடைநிலை சித்தாள்கள் வரை சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, ரெரா போன்ற என மறு சீரமைப்பு நடவடிக்கைகள் ரியல் எஸ்டேட் துறையில் சற்று தளர்வை ஏற்படுத்தினாலும், அரசின் சலுகைகள் காரணமாக சந்தை மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருகிறது.

2014-ஆண்டில் கிட்டத்தட்ட 3.18 லட்சம் கட்டுமானத் திட்டங்கள் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 2017-ம் ஆண்டில் அது வெறும் 1.02 லட்சம் என்ற அளவுக்கு குறைந்திருப்பதாக ‘நைட் பிராங்க் ரிசர்ச்’ என்ற ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறைக்கு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடமிருந்து சுமார் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் கோடி என்ற அளவில் பணப்புழக்கம் இருந்து வருகிறது. அதன் அடிப்படையில், வங்கிகளுக்கு சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம், வங்கிசாரா நிதி நிறுவனங்களைச் சீர்படுத்தும் திட்டங்கள் ஆகியவை இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

வங்கிகளில் கடன் பெற்று முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2.75 லட்சம் வரை சலுகை அளிக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் ரூ.45 லட்சத்திற்குள் முதன்முறையாக வீடு வாங்கும் தனி நபருக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை ரூ. ஒன்றரை லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.45 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள வீடுகளை 15 ஆண்டு கால கடன் தவணையில் வாங்கும்போது கிட்டத்தட்ட ரூ. 7 லட்சம் வரை வரி விலக்குக் கிடைக்கும்.

வங்கியில் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்படும் வரி விலக்கில், கூடுதலாக ரூ. ஒன்றரை லட்சம் சலுகை வழங்கப்படுவதுடன், மலிவு விலை வீடு வாங்குபவர்களுக்கு, கூடுதலாக ரூ. ஒன்றரை லட்சம் வரிச்சலுகையும் அளிக்கப்படும். இந்த சலுகைகள் 2020-ம் ஆண்டு வரை வீடு வாங்குபவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

‘அனைவருக்கும் வீடு-2022’ திட்டத்தின் கீழ் கடந்த வருடங்களில் கிட்டத்தட்ட 1.5 கோடி வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் இரண்டாம் நிலையான 2019-20 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1.95 கோடி வீடுகள், சமையல் எரிவாயு இணைப்பு வசதிகள் கொண்டதாக கட்டமைக்கப்பட உள்ளன.

கட்டுமானத்துறையில் மலிவு விலை வீடுகளுக்கான (ரூ.45 லட்சத்துக்கும் உட்பட்டவை) சந்தையை அதிகரிக்கும் விதத்தில், அந்தந்த மாநில அரசுகள், கட்டுனர்களுடன் இணைந்து JDA (Joint Development Agreement) என்ற நிலையில் இணைந்து செயல்பட இருக்கின்றன. அதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தக முதலீடு, வங்கிக் கடன், வேலை வாய்ப்புகள் போன்ற வளர்ச்சிகள் ஏற்படும். இந்த திட்டத்தில் அரசுடன் இணைந்து செயல்படும் கட்டுனர்கள் பெறும் ஆதாயத்துக்கு எவ்வித வரியும் விதிக்கப்படாது. மேலும், தற்போதுள்ள வாடகை ஒப்பந்த விதிகளில் பல்வேறு புதிய மாற்றங்களும் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

Next Story