அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் குடியிருப்புகள்


அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் குடியிருப்புகள்
x
தினத்தந்தி 10 Aug 2019 10:20 AM GMT (Updated: 10 Aug 2019 10:20 AM GMT)

முப்பரிமாண முறையில் ஒரு இயந்திரம் வீடுகளை கட்டமைப்பது (3D Printing) பற்றிய செய்திகளை பலரும் படித்திருப்போம்.

 பல்வேறு உலக நாடுகளில் தற்போது நடைமுறைக்கு வந்து கொண்டுள்ள அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துபாயில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனம் குடியிருப்புகளை கட்டமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வழக்கமான முறையை விடவும் அதிவிரைவாக வீடுகளை அமைக்க உதவும் 3டி தொழில்நுட்பம் பற்றி துபாயில் உள்ள பிரபல கட்டிடக்கலை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

அதிநவீன தொழில்நுட்பம்

துபாயில் புர்ஜ் கலீபா என்ற உலளாவிய பெரிய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு வானுயர் கட்டிடங்களை அமைத்து, நிர்வகிக்கும் எமார் நிறுவனம் நவீன முறையிலான 3டி வீடுகளை துபாயில் முதல் முறையாக கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இங்கு உள்ள பொதுமக்கள் அனைவரும் சொந்த வீட்டை வாங்க வழி பிறந்துள்ளது. பாலைவன தேசமான துபாயில் கடந்த 2016-வது ஆண்டில் நவீன கட்டிடக்கலையான 3டி முறையில் முதலாவது எதிர்கால திட்ட அலுவலகம் கட்டப்பட்டு ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மூலம் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர், தற்போது, வீடுகளும் கட்டப்பட உள்ளன.

ஆக்ஸிஜனேற்ற முறை

அதிநவீன 3டி முறையின் அடிப்படையானது, ‘ரெசின்’ போன்ற திரவத்தின்மீது வெவ்வேறு விதமான அலை வரிசைகளில் லேசர் ஒளிக்கற்றைகளை பாய்ச்சி, அதை திட வடிவத்துக்கு மாற்றப்படுவதாகும். ஆனால், இந்த முறையில் லேசர் கதிர்வீச்சுக்கு பதிலாக ஆக்ஸிஜனேற்ற முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ‘அட்மிக்ஸர்கள்’ என்ற ரசாயனத்தை சிமெண்டில் கலந்து கலவையாக ஆக்கி, அதில் ஆக்ஸிஜனை படிப்படியாக செலுத்தி திட வடிவத்திற்கு மாற்றப்படுகிறது. முப்பரிமாணத்தில் கட்டமைப்புகளை உருவாக்கும் இந்த முறையில் ஒரிஜினல் கட்டுமான அமைப்புகளுக்கான சிறிய மாதிரி மினியேச்சர் வடிவமைப்புகளையும் உருவாக்கலாம்.

தானியங்கி வடிவமைப்பு

இந்த முறையில், கம்ப்யூட்டரில் உள்ள குறிப்பிட்ட ஒரு கட்டிடத்தின் 3டி வரைபடத்துடன், கட்டிடப் பணிகளை செய்வதற்கான பிரத்யேக 3 டி பிரிண்டிங் இயந்திரமும் இணைக்கப்பட்டிருக்கும். இயந்திரம் இயங்கும்போது கட்டிட வரைபடத்துக்கு ஏற்ப கம்பி, சிமெண்டு கலவை ஆகியவற்றைக் கொண்டு அந்த உபகரணத்தில் உள்ள ‘சிரிஞ்ச்’ போன்ற அமைப்பு முழு வட்டமாக இயங்கி, வீட்டை தாமாகவே வடிவமைத்துக் கொள்கிறது. மேலும், தட்பவெப்ப மாற்றங்களிலிருந்து கட்டிடத்தை பாதுகாக்கும் ‘இன்சுலேசன்’ பொருட்களையும் வைத்து வீடு கட்டமைக்கப்படுகிறது.

குறைவான பட்ஜெட்

கட்டிட வடிவமைப்பு பணிகள் நடக்கும்போதே பணியாளர்கள் வரைபடத்திற்கேற்ப கதவு மற்றும் ஜன்னல்களை பொருத்தி விடுகிறார்கள். சுற்றுப்புற சுவர் கட்டி முடிக்கப்படும்போது ‘பெயிண்டிங்’ பணிகள் செய்யப்படுவதுடன், உள் கட்டமைப்புக்கு ஏற்ப தண்ணீர் குழாய்கள், மின் சாதனங்கள் போன்றவையும் பொருத்தப்படுகின்றன. இந்த தொழில் நுட்பம் மூலம் நான்கு அறைகள் வரை கட்டப்படுகின்றன. கட்டுமானப் பணியாளர்கள் அதிகமாக இல்லாமல், இயந்திரம் மூலம் 24 மணி நேரத்தில் வீட்டை உருவாக்கலாம். கிட்டத்தட்ட 38 சதுர மீட்டர் அதாவது சுமார் 400 சதுர அடி கொண்ட வீட்டின் கட்டுமான பணிகளுக்கு ரூ. 7 லட்சத்திற்குள் மட்டுமே செலவானதாக தெரிய வந்துள்ளது. அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாகவும், சுற்றுச்சூழல் மாற்றங்களை தாங்கியும் நிற்கக்கூடிய 3டி வீட்டின் ஆயுள் சுமார் 50 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

-மர்யம். சா.

Next Story