உங்கள் முகவரி

மேல்தள வெப்பத்தடுப்பு ‘டைல்ஸ்’ பதிக்கும் முறை + "||" + Top-site heat resistant tiles

மேல்தள வெப்பத்தடுப்பு ‘டைல்ஸ்’ பதிக்கும் முறை

மேல்தள வெப்பத்தடுப்பு ‘டைல்ஸ்’ பதிக்கும் முறை
கட்டிடத்தின் மேற்கூரை வழியாக, அறைகளுக்குள் வெப்பம் பரவாமல் இருக்க வெப்பத்தடுப்பு ஓடுகளை மேல்தளத்தில் பதிக்கப்படுவது வழக்கம்.
டைல்ஸ் ரகங்களை பயன் படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

பெட்டிகளை வைக்கும் முறை

பெட்டிகளில் உள்ள டைல்ஸ்கள் செங்குத்தாக இருக்கும் வகையில் அவற்றை அடுக்கி வைக்கவேண்டும். பெட்டிகளில் உள்ள டைல்ஸ்கள் கிடைமட்ட வசமாக ஒன்றன்மீது ஒன்றாக இருக்கும்படி அடுக்கி வைக்கக் கூடாது. டைல்ஸ் ரகங்களை தண்ணீரில் நனைத்து அல்லது ஊறவைத்து பதிப்பது தவறான முறையாகும்.

நீர்க்கசிவு தடுப்பு

வெப்பத்தடுப்பு ஓடுகள் பதிப்பதற்கு முன்னர் மேல்தளத்தின் மீது ஒரு பங்கு சிமெண்டு, ஒன்றரை பங்கு மணல், மூன்று பங்கு கருங்கல் அல்லது செங்கல் ஜல்லி ஆகிய மூன்றும் சேர்க்கப்பட்ட கலவை மூலம், நீர் வடிவதற்கு ஏற்ப வாட்டத்துடன் கூடிய தளம் அமைத்துக் கொள்ள வேண்டும். ‘ரூப் கான்கிரீட்டில்’ விரிசல்கள் இருந்தால், பாதுகாப்புக்கான ‘வாட்டர் புரூப் கோட்டிங்’ செய்து கொள்வது நல்லது.

இடைவெளிக்கான பூச்சு

இரண்டு டைல்ஸ்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி 6 மி.மீ முதல் 8 மி.மீ வரை இருக்கலாம். அந்த இடைவெளியை நிரப்புவதற்காக ஒரு பங்கு சிமெண்டு, இரண்டு பங்கு மணல், ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் 20 மி.லி ‘பாலிமர் வாட்டர் புரூப்’ ரசாயனம் ஆகியவை சேர்ந்த கலவையை கச்சிதமாக பூசி, பட்டித்தகடு மூலம் சமன் செய்து கொள்ளலாம்.

ஈரப்பதம் அவசியம்

டைல்ஸ் பதிப்பதற்கு ஒரு பங்கு சிமெண்டு மற்றும் ஐந்து பங்கு மணல் கொண்ட கலவையை, தக்க ஈரப்பதத்துடன் தளத்தின் மீது அமைக்கவேண்டும். கலவையில் ஈரப்பதம் குறைந்து விடக் கூடாது. இல்லாவிட்டால் நடக்கும்போது விரிசல்கள் ஏற்படலாம். தளம் ஈரப்பதமாக இருக்கும்போது பதிக்கப்படும் டைல்ஸ்களின் மேற்புறத்தில் கனமான பொருட்களை வைப்பதோ அல்லது அதன்மீது நடந்து செல்வதோ கூடாது.

சரியான முறை

இரண்டு வரிசைகளில் டைல்ஸ் பதித்த பின்னர் அவற்றின் மீது அமர்ந்துகொண்டு, அடுத்த வரிசை டைல்ஸ் பதிக்கும் முறையை ஒரு சிலர் கடைப்பிடிப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த முறை முற்றிலும் தவறானது. அதனால், பதிக்கும் டைல்ஸ்க்கு எதிர்ப்புறமாக தளத்தின் மீது அமர்ந்து கொண்டு டைல்ஸ்களை பதிக்கவேண்டும். மேலும், பதித்த பின்னர் 12 மணி நேரம் அவற்றின் மீது யாரும் நடந்து செல்லக்கூடாது.