ரியல் எஸ்டேட் துறையினருடன் அரசு ஆலோசனை கூட்டம்


ரியல் எஸ்டேட் துறையினருடன் அரசு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2019 9:38 AM GMT (Updated: 17 Aug 2019 9:38 AM GMT)

வீடு வாங்குவோர் நலச்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் ஆகியோருடன் கலந்தாய்வுக் கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது.

வீடு வாங்குவோர் நலச்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் ஆகியோருடன் கலந்தாய்வுக் கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அதில் மத்திய நிதியமைச்சர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மற்றும் நிதித் துறை இணையமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாதார விவகாரங்கள், நிதி, வீட்டு வசதி போன்ற துறைகளின் உயர் அதிகாரிகளும் அவற்றில் பங்கேற்றனர். இரண்டு தனி ஆலோசனைக் கூட்டங்களாக நடந்த அவற்றில் கட்டுமானத் துறையின் இரு அமைப்புகளான, ‘கிரெடாய்’ (Confederation of Real Estate Developers’ Association of India & CREDAI) மற்றும் ‘நாரெட்கோ’ (National Real Estate Development Council & NAREDCO) ஆகியவற்றின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ள காரணிகளை நீக்குவதற்கான திட்டங்களை அரசு வகுத்து வருவதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றை சரி செய்வதற்கான முயற்சிகள் மற்றும் தேவையான திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை, பழைய வளர்ச்சிப் பாதையில் மீண்டும் பயணிக்க தக்க வழிவகைகள் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக ரியல் எஸ்டேட் துறையின் ‘கிரெடாய்’ மற்றும் ‘நாரெட்கோ’ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான முடிவுகளை அரசு மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ள காரணிகளை அகற்றி, முன்னேற்றத்தை அடைவதற்கான சகல முயற்சிகளும் எடுக்கப்படுவதுடன், இந்தியாவில் தொழில் செய்வதற்கான சூழல் எளிமையாக்கப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, எளிதில் கடன் கிடைக்க வழி செய்வது, பணப்புழக்கத்தை சீராக்குவது, கட்டணச் சுமைகளைக் குறைப்பது, வரி நடைமுறைகளை எளிதாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். தற்போது, ஜி.எஸ்.டி விகிதங்கள் குறைவாக இருப்பதால் அதை குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முடங்கிக் கிடக்கும் கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்த, ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு நெருக்கடி நிதியமாக ஏற்படுத்தி உதவ வேண்டும் என்று கூட்டத்தில் கட்டுமானத் துறையினர் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Next Story