குடியிருப்புகளுக்கு அவசியமான காப்பீடு


குடியிருப்புகளுக்கு அவசியமான காப்பீடு
x
தினத்தந்தி 24 Aug 2019 2:44 PM IST (Updated: 24 Aug 2019 2:44 PM IST)
t-max-icont-min-icon

சொந்த வீடு கட்டுபவர்கள் தங்களது பொருளாதார நிலைக்கேற்ப சொந்த பணம் அல்லது வங்கி, நிதி நிறுவன உதவியோடு வீடுகள் கட்டுகின்றனர். அத்தகைய வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு காப்பீடு செய்து கொள்வது அவசியம் என்று ரியல் எஸ்டேட் நிதியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை சீற்றங்களுக்கான காப்பீடு

வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு கச்சிதமாக தேர்வு செய்யப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதன் மூலம் நெருப்பு, நில அதிர்ச்சி, கொள்ளை மற்றும் இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இயலும். பொதுவாக, வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு காப்பீடு அவசியம் என்பது பலரது கவனத்துக்கு வராத விஷயமாகவே உள்ளது. வீடுகளுக்கான காப்பீடு பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம்.

* வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் வீட்டின் வெளிப்புறம் ஆகிய இரு பகுதிகளும் காப்பீட்டுத் திட்டத்தில் அடங்கும்.

* இந்தக் காப்பீடு தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கும் சேர்த்துக் கிடைப்பதால், திருட்டு போன்றவற்றில் இருந்து தக்க இழப்பீட்டைப் பெற இயலும்.

* மற்ற கட்டமைப்புகளை விடவும், வீடுகளுக்கான காப்பீட்டை சற்று குறைவான பட்ஜெட்டில் செய்து கொள்ளலாம்.

* ஏதேனும் காரணங்களால் வீட்டின் கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதைப் புதுப்பித்துக்கொள்ள இயலும்.

* பூகம்பம், பயங்கரவாதிகள் தாக்குதல் போன்ற அசாதாரண நிகழ்வுகளுக்கு பிரீமியம் தொகை சற்று கூடுதலாக கணக்கிடப்படும்.

மேற்கண்ட விதிமுறைகளுக்கு ஏற்ப வீடுகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவை எந்த விதமான பாதிப்புகளுக்கு உட்படலாம் என்பதை முடிவு செய்த பின்னரே தக்க காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்யவேண்டும். அதாவது, வீட்டைச் சுற்றிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது என்றால், காப்பீடு அதற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.

நெருப்பு பாதிப்புக்கான காப்பீடு

தீ விபத்து காரணமாக வீட்டில் உள்ள பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டி.வி, நகை, கணினி, பிரிண்டர் உள்ளிட்ட இயந்திரங்கள், பர்னிச்சர் பொருள்கள், கட்டிடத்தில் உள்ள விலை உயர்ந்த பொருள்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கும் நிலையில் அதற்கான காப்பீட்டைச் செய்து கொள்ளலாம். வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு நீண்ட கால திட்டத்தில் காப்பீடு செய்யப்படுகிறது. இதர வகைக் கட்டிடங்களுக்கு காப்பீட்டுக் காலம் ஒரு ஆண்டு என்று கணக்கிடப்படுவதால், அதை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.

சரியான சொத்து மதிப்பு

வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கான காப்பீடு செய்யும்போது சொத்து மதிப்பு விவரங்களை அன்றைய சந்தை மதிப்புப்படி குறிப்பிடுவது முக்கியமானது. அதில் முறையான தகவல்கள் இல்லையென்றால் இழப்பீடு பெறும் சூழலில் பல சிக்கல்கள் ஏற்பட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Next Story