தெரிந்து கொள்வோம் - நில வரி கணக்கீட்டில் பசலி ஆண்டு


தெரிந்து கொள்வோம் - நில வரி கணக்கீட்டில் பசலி ஆண்டு
x
தினத்தந்தி 31 Aug 2019 1:25 PM GMT (Updated: 31 Aug 2019 1:25 PM GMT)

சொத்துக்களுக்கான வரி விதிப்பின்போது பசலி ஆண்டு என்று குறிப்பிடப்படுவதை பலரும் கவனித்திருப்போம். பசலி ஆண்டு என்பது, வருவாய்த் துறையால் பின்பற்றப்படும் ஆண்டு கணக்காகும்.

ஜுலை மாதம் முதல் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கடைசி நாள் முடிய உள்ள வருவாய்த் துறையின் காலம் பசலி ஆண்டு ஆகும். விளைநிலம் குறித்த அரசு கணக்குகளில் பயன்படுத்தப்படும் நில வருவாய் ஆண்டாக ‘பசலி’ உள்ளது.

வருவாய்த்துறையின் முக்கியமான பணிகள் கிராம அளவிலிருந்து துவங்குகின்றன. 24 வகையான கிராம கணக்குகள் ஒவ்வொரு பசலி ஆண்டிற்கும் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் சில கிராமக் கணக்குகளை வருவாய்த்துறை நிர்வாக சீர்திருத்தக்குழு பரிந்துரை அடிப்படையில் பராமரிப்பிலிருந்து நீக்கம் செய்யவும், தொடர்ந்து பராமரிக்க வேண்டிய கிராமக் கணக்குகள் பற்றியும் அரசாணை அளிக்கப்பட்டுள்ளது.

அக்பர் காலத்தில் நில வரிப்பணத்தை பிரித்து, கணக்கிடுவதற்கு வசதியாக பசலி ஆண்டு முறை வழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. அது, வட இந்தியாவில் மட்டுமே இருந்த நிலையில், காலப்போக்கில் தென்னிந்தியாவிலும் பரவி விட்டது. அந்த காலகட்டத்தில் ஆடி மாதம் முதல் தேதி பசலி ஆண்டு கணக்கிடப்பட்டது. அவர்களுக்கு பின்னர் வந்த ஆங்கிலேயர் அரசாங்கக் காலத்தில் பசலி ஆண்டு என்பது ஜூலை முதல் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் முடிய என்று வரையறுக்கப்பட்டது. அந்த முறைதான் இன்றைய காலகட்டம் வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

பத்தாம் பசலி என்பது பத்து வருடங்களை குறிப்பிடும் பசலி கணக்கு ஆகும். இந்த முறை உருவான கி.பி 600-ம் ஆண்டை பத்தாம் பசலி என்று குறிப்பிடுவார்கள். அதன் அடிப்படையில் பழைய சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதுடன், புதியனவற்றை ஏற்றுக் கொள்ளாத மனநிலை கொண்டவர்களை பத்தாம் பசலி என்று வேடிக்கையாக குறிப்பிடுவது வழக்கத்தில் உள்ளது.

Next Story