இணையதளம் மூலம் குடியிருப்புகளுக்கு கட்டிட அனுமதி
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்ற வாரம் நடைபெற்றது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்ற வாரம் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம்-ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், அரசு முதன்மை செயலாளர், குடிநீர் வழங்கல் வாரிய திட்ட இயக்குனர், சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குனர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
கடந்த 2017-18-ம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது உள்ளாட்சி பகுதிகளில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவது எளிமைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பொறியாளர்கள் மூலம் தயாரிக்கப்படும் வரைபடங்கள், தானியங்கி மென்பொருள் மூலம் சரிபார்த்துக்கொள்ளும் வெளிப்படையான நடைமுறை அனைத்து நகராட்சிகளிலும் அமைக்கப்படும்.
கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி ஆகியவற்றுக்கு உள்ளாட்சித்துறை எடுத்துக்கொள்ளும் கால அளவினை குறைக்கும் வகையில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்ட 2500 சதுர அடி பரப்பளவுக்கு மேற்படாத இடத்தில், அதே சமயம் 1200 சதுர அடி பரப்பளவுக்குள் அமைக்கப்படும் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு மட்டும் கள ஆய்வு இல்லாமல் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி ஆகியவை எளிய முறையில் வழங்கப்படும்.
அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை முறைப்படுத்தப்படும் திட்டம் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும். அதனால் மனைப்பிரிவுக்கு ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ள ஒரு லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.
இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள், பொறியாளர்களை தவிர மற்ற அரசு அலுவலர்களை சந்திக்க வேண்டியதில்லை. கட்டுமான திட்டத்தை அரசு இணையத்தில் பதிவேற்றம் செய்யும்போது கட்டிடப் பொறியாளர் அளிக்கும் உறுதிமொழி ஆவணத்தையும் இணைப்பாக அளிக்க வேண்டும். கட்டிடம் அமைக்கப்பட்ட பின்னர் உள்ளாட்சி நகரமைப்பு ஆய்வாளரால் ஆய்வு செய்யப்படும். கட்டிடத்தின் உறுதி மற்றும் பாதுகாப்புக்கு அதன் பொறியாளர்தான் பொறுப்பு ஆவார்.
விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். இது அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். பதிவு பெற்ற உரிமையாளரின் உறுதி மொழி ஆவணம், வரைபடம், மனைக்கான உரிமை ஆகியவை நோட்டரி சான்று பெற்றிருக்க வேண்டும். இணையதளம் வாயிலாக டிஜிட்டல் ஒப்புதல், வரைபடம், அனுமதி ஆணை ஆகியவை வழங்கப்படும்
இணையத்தில் ஆவணம் பெற்ற பின்னர் விதிகள் மீறிய செயல், போலி ஆவணம் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் திட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Related Tags :
Next Story