வீட்டு வசதி திட்டங்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்


வீட்டு வசதி திட்டங்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்
x
தினத்தந்தி 21 Sep 2019 9:33 AM GMT (Updated: 21 Sep 2019 9:33 AM GMT)

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் இரண்டாம் நிலையான 2019-20 முதல் 2021-22 வரையுள்ள காலகட்டத்துக்குள் 1 கோடியே 95 லட்சம் வீடுகளைக் கட்ட அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், வீட்டு வசதி துறைக்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கட்டுமானப்பணிகள் தொடங்கி நிறைவு பெறாமல் நின்று போன வீட்டு வசதி திட்டங்களை முடிக்க அந்த தொகை அளிக்கப்படும் என்றும், அந்த நிதியில் ரூ. 10 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும் என்றும், மீதமுள்ள தொகை ரூ. 10 ஆயிரம் கோடி வெளி முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு திட்டங்களுக்கு சலுகை

அதன் மூலம் வீடு வாங்கும் 3.5 லட்சம் பேர் பலன் பெறுவார்கள் என்றும், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், தளர்த்தப்பட்ட விதிகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கவும் அனுமதிக்கப்படும் என்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்த நிதி ஒதுக்கீடு என்பது இதுவரை வாரா கடன் பட்டியலில் இல்லாத மற்றும் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் கீழ் போகாத நிலையில், கிட்டத்தட்ட 60 சதவிகிதம் கட்டுமானப்பணிகள் முடிந்த குடியிருப்பு வீடுகள் திட்டத்துக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்குவதற்கான விதிமுறைகளையும் அரசு தளர்த்தி உள்ளதால், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்கள் எளிதில் வாங்க முடியும்.

கூடுதல் வரிச்சலுகைகள்

இந்த சலுகைகள் காரணமாக சுமார் 8.5 லட்சம் முதல் 14 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதால் வீடு வாங்குபவர்கள் பயனடைவார்கள் என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னர் வீட்டுக்கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு ரூ. 1.5 லட்சம் வரை வரிக்கழிவு பெறலாம் என்று இருந்தது. பின்னர், பட்ஜெட் அறிவிப்பின்போது மலிவு விலை வீடு வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ. 1.5 லட்சம் (மொத்தம் 3 லட்சம் ரூபாய்) வட்டிக்கான வரிக்கழிவாகப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 3 லட்சம் வட்டிக்கான வரிக்கழிவு சலுகையானது வரும் 31 மார்ச் 2020-க்குள் ரூ. 45 லட்சத்துக்குள் உள்ள மலிவு விலை வீடுகளை வாங்குபவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது.

அரசு ஊழியர்களுக்கு சலுகை

நிறைய அரசு ஊழியர்கள் வீடுகளை வாங்க வேண்டும் என்ற நிலையில், அரசு தரக்கூடிய வீட்டுக்கடனுக்கான அட்வான்ஸ் தொகைக்கான வட்டி, மத்திய அரசின் 10 ஆண்டு கால கடன் பத்திரத்தின் (ஜி செக் கடன் பத்திரங்கள்) வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அதிகப்படியான அரசு ஊழியர்கள் வீடு வாங்க முன் வருவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

Next Story