வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைகிறது


வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைகிறது
x
தினத்தந்தி 21 Sept 2019 3:28 PM IST (Updated: 21 Sept 2019 3:28 PM IST)
t-max-icont-min-icon

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ‘ரெப்போ ரேட்’ 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.

ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை இந்த ஆண்டில் மட்டும் 110 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. அதன் பயனைப் பெறும் வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்கள் பெற்ற கடனுக்கான வட்டி விகிதத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்.

இந்த நிலையில் வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை பெறக்கூடிய தனி நபர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் ஆகியவற்றில் பொது அளவு வட்டி விகிதத்தை பின்பற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. ரிசர்வ் வங்கியின் கோரிக்கையை ஏற்று சில வங்கிகள் டெபாசிட் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை ரெப்போ ரேட்டுடன் இணைப்பதாக அறிவித்துள்ளன.

அதன் அடிப்படையில், வரும் அக்டோபர் மாதம் முதல் வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வட்டி விகிதத்துடன் இணைக்கப்படும். அதனால், வீட்டுக்கடன் பெற்றவர்கள் செலுத்தும் வட்டி மற்றும் மாதாந்திர தவணைத் தொகை ஆகியவை குறையும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடனில், முன்கூட்டியே செலுத்துவதற்கு அபராதம் இல்லை என்பதால், கடன்தாரர், வட்டி விகிதம் அதிகமாக இருப்பதாக நினைத்தால், கடனை முன்கூட்டியே செலுத்தி வெளியேறலாம். இதற்காக குறைந்த வட்டி விகிதம் அளிக்கும் வேறு ஒரு வங்கியிலும் கடன் பெறலாம்.

Next Story