கண்கவரும் ‘வாஷ்பேசின்’ வகைகள்


கண்கவரும் ‘வாஷ்பேசின்’ வகைகள்
x
தினத்தந்தி 28 Sept 2019 11:05 AM IST (Updated: 28 Sept 2019 11:05 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் உள்ள ‘டைனிங் ஹால்’ பகுதிகளில் கைகளை கழுவ விதவிதமான வாஷ்பேசின் வகைகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

மேலை நாட்டு கலாசாரமாக உள்ள இந்த ‘வாஷ்பேசின்’ பயன்படுத்த சுலபமாக உள்ளதால் மக்கள் மத்தியில் பரவலான உபயோகத்தில் உள்ளன. ‘ரெக்டாங்குலர்’, ரெக்டாங்குலர் ஓவல்’, ‘ரெக்டாங்குலர் ஸ்கொயர்’, ‘ரவுண்டு’ மற்றும் ‘ஸ்கொயர்’ ஆகிய பல்வேறு வடிவங்களில் கைகழுவ உதவும் வாஷ் பேசின்கள் கிடைக்கின்றன. சுவர்களின் கார்னர் பகுதிகளில் மட்டும் பொருத்தப்படுவது போலல்லாமல், சுவரிலேயே பொருத்திக்கொள்ளும் வகையிலும், சமையலறை பிளாட்பார்மில் அமைத்துக்கொள்ளும் வகையிலும் அவை கிடைக்கின்றன. தற்போதைய சூழலுக்கு ஏற்ப விதவிதமான மாடல்கள் சந்தையில் உள்ளன. அவற்றில் புதுமையாக உள்ள சில வகைகள் பற்றி இங்கே காணலாம்.

‘அண்டர் கவுன்டர்டாப் பேசின்’

கிரானைட், மார்பிள் உள்ளிட்ட இதர வகையிலான பிளாட்பார்ம் மீது பேசின் குறுக்களவுக்கு தக்கவாறு வட்டம் அல்லது சதுர வடிவ அமைப்பில் துளையிட்டு அதில் கச்சிதமான ரப்பர் ‘புஷ்கள்’ மூலம் இவ்வகை பேசின் பொருத்தப்படுகிறது. டேபிள் அல்லது பிளார்பார்ம் ஆகியவற்றின் மேற்புறத்தில் குழிந்த வடிவத்தில் இருப்பதால், தள்ளி இருந்து பார்க்கும்போது ‘வாஷ்பேசின்’ கண்ணுக்குத் தெரியாது. பெரிய அளவு கொண்ட வீடுகளில் இவ்வகை ‘அண்டர் கவுன்டர்டாப் பேசின்கள்’ அமைக்கப்படுவது நாகரிகமாக கருதப்படுகிறது.

‘டேபிள் டாப் பேசின்’

பிளாட்பார்ம் அமைப்புக்கு மேற்புறமாக, பார்வைக்கு தெரிவதுபோல் இவ்வகை ‘வாஷ்பேசின்கள்’ அமைந்திருக்கும். அதாவது, தேவைப்படும் சமயங்களில் அவற்றை அகற்றி அறைகளின் வெவ்வேறு இடங்களில் பொருத்திக்கொண்டு பயன்படுத்தலாம். பாத்ரூம்களிலும் இவற்றை அமைக்க இயலும். இதன் அமைப்பானது வித்தியாசமான அழகை கொண்டதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ‘கவுன்டர் டாப் பேசின்’ வகைகளும் உள்ளன. அவை பாதி உட்புறமாகவும், பாதி வெளிப்புறமாகவும் காட்சி தரும். இந்த அமைப்புக்கான ‘பைப் பிட்டிங்குகள்’ பார்வைக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

‘வால் மவுண்டடு பேசின்’

இவை ‘வால் ஹங்க் பேசின்’ என்றும் சொல்லப்படுகின்றன. இவை தக்க ‘பிராக்கெட்டுகள்’ கொண்டு சுவரில் பொருத்தப்படும் விதமாக தயாரிக்கப்படுகின்றன. கைகளை கழுவ தக்க உயரத்தில் அமைக்கப்படும் இவற்றின் குழாய் அமைப்புகளை மறைப்பதுபோல ‘புல் பெடஸ்டல்’, ‘ஸ்டுடியோ பெடஸ்டல்’ மற்றும் ‘செமி பெடஸ்டல்’ வகை பேசின்களும் சந்தையில் உள்ளன.

‘புல் பெடஸ்டல் பேசின்’

அறைகளின் எந்த பகுதியிலும் எளிதாகப் பொருத்தப்படும் அமைப்பாக உள்ள இவ்வகை பேசின்களில் இரண்டு வகைகள் உள்ளன. தரையை தொடுவது போன்ற அமைப்பு புல் பெடஸ்டல் என்றும், வாஷ்பேசினுக்கு கீழ்ப்புறம் பாதியளவு உயரத்தில் சுவருக்குள் பதிக்கப்பட்டுள்ள அமைப்பு ‘செமி பெடஸ்டல்’ என்று சொல்லப்படுகிறது. இவை, பொதுவாக 16 அங்குலம் முதல் 30 அங்குலம் வரை உயரம் கொண்டவையாக இருக்கும்.

Next Story