தீ பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் உபகரணங்கள்


தீ பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் உபகரணங்கள்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:06 AM GMT (Updated: 12 Oct 2019 10:06 AM GMT)

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமான அமைப்புகளை தீ விபத்துகளின்போது தக்க விதத்தில் முன்னெச்சரிக்கை செய்ய பல்வேறு உபகரணங்கள் பயன்படுகின்றன. அவற்றில், தேசிய கட்டிடக் குறியீடு 2016ன்படி, தீ விபத்துகளிலிருந்து கட்டமைப்புகளை பாதுகாக்கும் Manual Fire Alarm என்பது முக்கியமானதாகும்.

 Manual Call Point மற்றும் Sounder Beacon ஆகியவற்றுடன், Public Address System, Talkback System போன்ற உபகரணங்களும் அதில் சேர்க்கப்பட்டு உள்ளன.

அந்த உபகரணங்கள் தீ விபத்து நேரிடும் சமயங்களில் கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை வழி நடத்தத் தேவையான தகவல்களை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் சொல்லும் வகையில், தகவல்களை பேச்சு வடிவமாக முன்னதாகவே பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். அவை ‘பயர் அலாரம்’ அமைப்புடன் இணைக்கப்பட்டு, செயல்படும். அதனால், பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக வெளியேற பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

அவசர கால பாதுகாப்பு நடவடிக்கை என்ற நிலையில் தேசிய கட்டிடக் குறியீடு2016ம் ஆண்டு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் அத்தகைய உபகரணங்கள் கொண்டுள்ளன. அவற்றை சில தனியார் நிறுவனங்கள் தயாரித்து அளிக்கின்றன. அத்தகைய உபகரணங்களில் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்.

தகவல் தொடர்பு கருவி

தீ விபத்து சமயத்தில் சம்பந்தப்பட்ட பகுதியில் சிக்கியுள்ளவர்களும், மீட்பு பணியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள இந்த கருவி பயன்படுகிறது. அத்துடன் தீயணைப்பு வீரர்களும் அவர்களது உயர் அதிகாரிகளும் பேசிக்கொள்ள உதவும் (Talkback Unit) வகையிலும் இந்தக் கருவி பயன்படுகிறது.

எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள்

இவ்வகை உபகரணங்கள் தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ளவர்களுக்கும், மீட்பு பணியாளர்களுக்கும் அபாய ஒலி கொடுத்து உதவுகிறது. திடீரென்று ஒலி எழுப்பி (Sounder Beacon) அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் சத்தத்தின் அளவை சிறிது, சிறிதாக அதிகப்படுத்தி முழு அளவில் சப்தம் எழுப்பும்படி அமைக்கப்பட்டிருக்கும். மேலும், இக்கருவியில் உள்ள ‘எல்.இ.டி பிளாஷ்’ விளக்கு ஒளிர்ந்து, தீ விபத்தை உணரச்செய்யும்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் அபாய ஒலி கொடுக்க (Beep Sounder Beacon) இந்த கருவி பயன்படுகிறது. இந்தக் கருவியிலிருந்து வெளிப்படும் ஒலியானது சூழலின் அமைதியை பாதிப்பதில்லை. மேலும், மக்கள் கூடியுள்ள இடத்தில் எழுப்பப்படும் ஒலி அதிர்வுகள் அவர்களைப் பாதிக்காத முறையில் ‘பீப்’ சத்தத்தை ஒலித்து எச்சரிக்கை செய்யும். அப்போது அதில் உள்ள எல்.இ.டி விளக்கு அபாயத்தை உணர்த்தும் விதத்தில் ஒளிரும்.

‘கன்ட்ரோல் பேனல்’ அமைப்பு

தீ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முக்கிய பகுதியாக இக்கருவி செயல்படுகிறது. தீ உருவானதை உணரும் நிலையில் அங்குள்ள மக்களை எச்சரிக்கும் விதத்தில் செயல்படும் கருவி (Fire Alarm Control Panel ) இதுவாகும். இதன் மூலம் எப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும், இந்தக் கருவி தாமாகவே எந்த பகுதியில் இருப்பவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டுமோ அந்தப் பகுதியில் உள்ளவர்களை மட்டுமே எச்சரிக்கை செய்யும். மீட்புக் குழுவினர் அங்குள்ள speaker மற்றும் talkback unit உபகரணங்கள் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சூழலுக்கு ஏற்ப செயல்படும். அதனால், தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பவர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் ஆகியோர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது.

Next Story