உங்கள் முகவரி

தண்ணீரில் மிதக்கும் அழகிய தீவு நகரம் + "||" + Beautiful island town floating in the water

தண்ணீரில் மிதக்கும் அழகிய தீவு நகரம்

தண்ணீரில் மிதக்கும் அழகிய தீவு நகரம்
பருவ மழையால் நமது பகுதியில் உள்ள சாலைகள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையை அவ்வப்போது நாம் சந்தித்து வருகிறோம். அதனால், பாதசாரிகள் உட்பட வாகனங்களில் செல்பவர்களும் சங்கடத்துக்கு உள்ளாகிறார்கள்.
மேற்கத்திய நாட்டில் உள்ள ஒரு நகரம் எப்போதுமே தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருப்பதை என்னெவென்று சொல்வது.? அந்த நாடு இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ‘வெனிஸ்’ நகரமாகும். சுமார் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இந்த நகரம் நீரில் மிதந்து கொண்டுள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் உலக நாடுகளுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது.

மணல் திட்டுக்களால் உருவானது

‘ஏட்ரியாட்டிக்’ கடலின் (Adriatic Sea) வடமேற்கு முனையில் உள்ள கடற்கழியின் மத்தியில் வெனிஸ் நகரம் அமைந்துள்ளது. அந்த கடற்கழியானது சுற்றியுள்ள கடல் பகுதியில் வந்து சேரும் நதிகளால் உருவான வண்டல் மண் படிவுகள், கடல் நீரேற்ற அலைகள் மற்றும் நீரோட்டம் ஆகியவற்றால் உருவான மணல் திட்டுகள் ஆகியவற்றால் உருவானதாகும். அவை, கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 15 கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளன.

தீவு நகரம்

வெனிஸ் நகரத்தில் ஆறு மாவட்டங்கள் உள்ளன. அவை அனைத்துமே கிட்டத்தட்ட 400 பாலங்கள் வழியாகவும், 150க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் வழியாகவும் நகரத்தை ஒன்றிணைக்கின்றன. கடலில் மிதந்து கொண்டுள்ள 117 தீவுகளில் வெனிஸ் நகரத் தீவு மையத்தில் அமைந்துள்ளது. உலக அளவில் தண்ணீருக்குள் கட்டப்பட்ட ஒரே தீவு நகரம் வெனிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

நீருக்குள் அஸ்திவாரம்

வெனிஸ் மக்கள் நகரத்தை நீரினுள் நிர்மாணிக்க முடிவு செய்த நிலையில் அஸ்திவார அமைப்பில் பலம் வாய்ந்த மரங்கள் மற்றும் கடல் நீரால் பாதிக்கப்படாத ஒருவகை சுண்ணாம்புக் கலவை ஆகியவற்றை ஏராளமாக பயன்படுத்தியுள்ளார்கள். கூடுதல் உறுதிக்காக விதவிதமான பொருட்களும், கற்களையும் பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில், கம்புகளைச் சேற்றில் ஊன்றி அஸ்திவாரம் போட்டு, மரக்கிளைகள் மற்றும் கோரை ஆகியவற்றைக்கொண்டு கட்டிடங்களைக் அமைத்தார்கள். காலப்போக்கில் ஆயிரக்கணக்கான மரக்கட்டைகளை பயன்படுத்தி அஸ்திவாரம் அமைத்து, அதன் மேல் கற்களை வைத்து கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.

மக்கள் வாழ்க்கை

சமீப காலங்களில் வெனிஸ் நகரம் படிப்படியாக நீருக்குள் மூழ்குகிறது என்று சொல்லப்பட்டாலும், அங்கு உள்ள கட்டிட வல்லுனர்கள் நகரின் அஸ்திவாரம் மிகவும் உறுதியானது என்கிறார்கள். கடலில் கொந்தளிப்பு ஏற்படும் சமயங்களில் நகரின் பல இடங்களில் நீர் உள்ளே நுழைந்து விட்டாலும்கூட அப்பகுதிக மக்கள் நீருடனே பழக்கப்பட்டு வாழ்கிறார்கள். படகுகள்தான் வீதிகளில் செல்ல உதவும் வாகனங்களாக உள்ளன.

தடுப்பு சுவர் கட்டமைப்பு

கிட்டத்தட்ட 18ம் நூற்றாண்டுக்கு முன்னரே வெனிஸ் நகர மக்கள் கடற்கழியை சேற்றுப்படிவுகளால் நிரப்பும் ஆறுகளைத் திசை திருப்பும் பிரம்மாண்ட பணிகளை மேற்கொண்டனர். பின்னர், ஏட்ரியாட்டிக் கடலால் கடற்கழி அழியாதவாறு கடலுக்குள் தடுப்புச் சுவர்களையும் அமைத்தார்கள். சமீப காலங்களில் கால்வாய்க் கரைகளை உயர்த்தவும், ‘ஆக்வா ஆல்டா’ என்ற கடல் நீர் மட்டம் உயரும் சமயங்களில் அடி மண்ணிலிருந்து தண்ணீர் மேலே வராதவாறு தளங்களை அமைக்கவும், நகரக் கழிவுநீர்க் குழாயிலிருந்து கழிவுநீர் திரும்பி வருவதைத் தடுக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சூழலை காக்க விஷேச சட்டம்

கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் சமயங்களில், கடற்கழியின் வாயில்களில் தடுப்புகளை அமைக்கும் விதத்தில், நகர்த்தும் வசதியுள்ள தடுப்புச் சுவர்களை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. துறை முகத்தின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் தினசரி வாழ்க்கை ஆகியவற்றை பாதிக்காத வகையில் வெள்ளப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கவனம் ஆகிய நடவடிக்கைகளுக்கான விசேஷ சட்டமும் அங்கே அமல் செய்யப்பட்டுள்ளது.