குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் மழைநீர்


குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் மழைநீர்
x
தினத்தந்தி 12 Oct 2019 12:19 PM GMT (Updated: 12 Oct 2019 12:19 PM GMT)

இயற்கை நிறைய தண்ணீரை மழை மூலம் நமக்கு அளித்து வருகிறது. அதை கச்சிதமாக பயன்படுத்தும் அளவுக்கு நீர் மேலாண்மை முறைகளும் நம்மிடையே உள்ளன என்று இயற்கை ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்கள் அவரவர் வீடுகளில் மழை நீர் சேகரிப்பதன் மூலம் குறிப்பிட்ட அளவுக்கு வீட்டின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதனால், குடிநீர்ப் பற்றாக்குறை பிரச்சினையைச் சமாளிக்க மழைநீரை சேகரிப்பது அவசியமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இயற்கை ஆர்வலர்கள் பலரும் குறிப்பிட்ட முறையில் மழை நீர் சேகரிப்பு தொட்டியை வீடுகளில் அமைத்து மழை நீரை, வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பாதிக்கப்படாத மழைநீர்

வெளிப்புறக் காற்று மற்றும் வெப்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் சேமிக்கப்பட்டுள்ள மழைநீர் 10 ஆண்டுகள் ஆனாலும், கெட்டுப் போவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில், கட்டிய வீடுகளிலும் அல்லது கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும் வீடுகளிலும் மழைநீர் சேகரிக்கும் தொட்டி அமைப்பது அவசியம் என்றும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். மழை நீரை வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தும் விதத்தில் சேகரிக்க உதவும் தொட்டி அமைப்பு பற்றி அவர்கள் அளித்த தகவல்களை இங்கே காணலாம்.

தொட்டி அமைப்பு

வீடு அல்லது அடுக்கு மாடியின் மேற்கூரை அளவிற்கு ஏற்பவும், அங்கிருந்து தக்க குழாய்கள் மூலம் மழை நீரை சேகரித்துப் பயன்படுத்தும் வகையிலும் பெரிய தொட்டி அமைக்க வேண்டும். தொட்டியில் வடிகட்டிகள் அமைப்பதற்காக 4 சல்லடை தாங்கும் தட்டுகள் பொருத்தப்பட வேண்டும். அவற்றின் இடைவெளி குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஒன்றரை அடி (12 அல்லது 18 அங்குலம்) இருக்கலாம்.

* முதலாவது, அடுக்கில் பிளாஸ்டிக் சல்லடை ஒன்று அமைத்து, அதன் மேல் வடிகட்டும் வகையில் நைலான் சல்லடை வைத்து, அதன்மேல் அரை அடி (6 அங்குலம்) அளவுக்கு கரித்துண்டுகளை இட்டு நிரப்ப வேண்டும்.

* இரண்டாவது, அடுக்கில் மற்றொரு சல்லடை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலை வைத்து மறுபடியும் 6 அங்குலம் அளவுக்கு கூழாங்கற்கள் மற்றும் ஜல்லிக் கற்கள் நிரப்ப வேண்டும்.

* மூன்றாவது, அடுக்கில் உள்ள தட்டில், சல்லடை வைத்து அதன் மேல் வடிகட்டி வலை வைத்து, ஆற்று மணலை 6 அங்குல அளவுக்கு நிரப்ப வேண்டும்.

* நான்காவது அடுக்கில் உள்ள தட்டில் சல்லடை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை மட்டும் வைத்து விட்டால் போதும்.

மேலும், மழை பெய்யும்போது குழாய் மூலம் வரும் நீரின் வேகத்தை தடுக்க குழாயில் சிறிய அளவில் துவாரங்கள் போடவேண்டும். அதனால், தண்ணீர் பரவலாக தொட்டியில் வந்து விழும். அவ்வாறு நீர் சேகரிக்கப்படும் தொட்டிக்குள் வெளிக்காற்று மற்றும் வெப்பம் ஆகியவை செல்லாமல் இருக்கும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு அந்த நீரை வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம் என்று இயற்கை ஆர்வலர்கள் குறிப் பிட்டுள்ளனர்.

Next Story