தெரிந்து கொள்வோம்... – தூக்குக்குண்டு


தெரிந்து கொள்வோம்... – தூக்குக்குண்டு
x
தினத்தந்தி 18 Oct 2019 9:30 PM GMT (Updated: 18 Oct 2019 1:37 PM GMT)

உலகம் முழுக்கப் பரவலாக பல சமூகங்களில் பயன்பாட்டில் இருந்துவந்துள்ள கட்டுமானப் பணிகளுக்கான உபகரணங்களில் தூக்குக் குண்டு ஒன்றாகும்.

லகம் முழுக்கப் பரவலாக பல சமூகங்களில் பயன்பாட்டில் இருந்துவந்துள்ள கட்டுமானப் பணிகளுக்கான உபகரணங்களில் தூக்குக் குண்டு  ஒன்றாகும். கட்டுமானப் பணிகளில் சுவர்களை கச்சிதமான செங்குத்து அமைப்பில் கட்டமைக்க இந்த சிறிய கருவி உற்ற துணையாக பயன்படுகிறது. கூம்பு அல்லது பம்பரம் போன்ற அமைப்பின் கீழ்ப்பகுதியில் கூரான முனை கொண்ட, இரும்பினால் செய்யப்பட்ட கனமான பொருள் இதுவாகும். கெட்டியான நூலால் கட்டப்பட்டு, அந்த நூலின் மறுமுனை செங்குத்து அச்சில் ஒரு குச்சி அல்லது மரக்கட்டையில் நுழைந்து செல்லும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். சுவர்களின் கிடை மட்ட அமைப்பை சரிபார்க்க ரச மட்டம் உதவுவது போல், தூக்கு குண்டு செங்குத்து அச்சில் சுவர்களின் மட்டம் பார்க்க பயன்படுகிறது.

பழைய காலங்களில் தூக்குக் குண்டு கல்லால் உருவாக்கப்பட்டது. தற்போது, இரும்பு, பித்தளை என்று பல விதமான உலோகங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. நில அளவை இயலில் தூக்கு குண்டு புவியீர்ப்பு தாழ் புள்ளியை கச்சிதமாக கண்டறிய உதவுகிறது. மேலும், நில அளவையின்போது செங்குத்து மட்டமாக அமைக்கப்பட வேண்டிய ஆய்வுக் கருவிகள், தியோடலைட்டு உபகரணம் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நில அளவியல் குறியீடுகளை  பதிக்கும் இடத்தை அடையாளம் காணவும் பயன்படுகிறது. தூக்குக் குண்டு பல்வேறு உலக நாடுகளில் பரவலான பயன்பாட்டில் இருந்து வந்தாலும், எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கு உறுதியான சான்றுகள் கிடைக்கவில்லை.

Next Story