செராமிக்’ தரைத்தள கற்களின் வகைகள்
கட்டிடங்களின் ஐந்தாவது சுவர் என்று சொல்லப்படும் தரைத்தளம் அமைப்பில் பல்வேறு ‘டைல்ஸ்’ வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ‘மார்பிள்’, ‘செராமிக்’, ‘டெராஸோ’, ‘மொசைக்’, ‘நேச்சுரல் ஸ்டோன்‘, ‘கிளாஸ்‘ மற்றும் ‘வுட்’ ஆகிய டைல்ஸ் வகைகள் சந்தையில் கிடைக்கின்றன.
பரவலான பயன்பாட்டில் உள்ள ‘விட்ரிடிபைடு டைல்ஸ்’ (Vitrified Tiles) என்ற தரைத்தள பதிகற்களின் வகைகள் பற்றி அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட தகவல்களை இங்கே காணலாம்.
புதிய வடிவம்
‘செராமிக் டைல்ஸ்’ வகையின் புதிய பரிணாமம் ‘விட்ரிடிபைடு டைல்ஸ்’ என்று சொல்லலாம். அதாவது, களிமண், ‘சிலிக்கா’, ‘குவார்ட்ஸ்’ மற்றும் ‘பெல்ட்ஸ்பர்’ ஆகியவற்றை அதிக வெப்ப நிலையில் சூடுபடுத்தி (Vitrification) பளிங்கு போல தயார் செய்யப்படுவதால் இந்தப்பெயர். 10 மி.மி முதல் 12 மி.மி குறுக்களவு கொண்டதாகவும், அறைகளுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய பகுதிகளில் பயன்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்படுகின்றன. தரைத்தளம் மற்றும் சுவர்கள் ஆகிய இரு பகுதிகளுக்கும் ஏற்றது என்றும், கூடுதல் பட்ஜெட் கொண்ட மார்பிள், கிரானைட் போன்றவற்றிற்கு மாற்றாகவும் இது குறிப்பிடப்படுகிறது. ‘விட்ரிடிபைடு டைல்ஸ்’ பல வடிவங்களிலும், வண்ணங்களிலும், வகைகளிலும் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் உள்ள முக்கியமான வகைகள் பற்றி இங்கே காணலாம்.
முழுமையான ‘விட்ரிடிபைடு டைல்ஸ்’
இவ்வகை பதிகற்கள் (Full Body Vitrified Tiles) ஒரே நிறம் கொண்டவையாக இருக்கும். அதற்குள் வெவ்வேறு நிறங்கள் இல்லாத காரணத்தால் இரண்டு சுவர்களில், இடத்தின் அளவிற்கேற்ப ஏற்ப வெட்டி ஒட்டும்போது நிற வித்தியாசங்கள் தெரியாமல் ஒரே சீரான தோற்றம் அளிக்கும். அதனால் வீடுகளில் அதிகமாக புழங்கும் பகுதிகளுக்கு இவை பொருத்தமாக இருக்கும். ‘மேட்’ மற்றும் ‘கிளாஸி‘ ஆகிய ‘பினிஷிங்’ கொண்டவையாக சந்தையில் கிடைக்கின்றன. மேலும், ஒரே நிறம் கொண்டதாக இருப்பதால் கீறல்கள் ஏற்பட்டாலும் அவ்வளவாக தெரிவதில்லை. மேலும், இதன் நிறம் காலப்போக்கில் மங்கி விடுவதில்லை என்பதுடன் பராமரிக்க எளிதாகவும் சொல்லப்படுகிறது.
இரு அடுக்கு ‘விட்ரிடிபைடு டைல்ஸ்’
தற்போது இவ்வகை (Double charge vitrified tiles) இரு அடுக்குகள் கொண்ட டைல்ஸ் வகைகளும் நிறைய பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதன் மேற்பரப்பில் 4 மி.மி குறுக்களவில் ஒரு நிறமும், அதன் கீழ்ப்பகுதியில் 8 மி.மி குறுக்களவில் வேறொரு நிறமும் கொண்டதாக இருக்கும். ‘விட்ரிடிபைடு டைல்ஸ்’ வகைகளில், இது நீடித்து உழைக்கக்கூடியதாக சொல்லப்படுகிறது. சந்தையில் பல வகைகளில் கிடைப்பதுடன், எளிதில் அழுக்கு படியாமலும், நிறம் மங்காமலும் இருக்கும். அதிகப்படியான பராமரிப்புகளும் இதற்கு அவசியமில்லை.
பளபளப்பான ‘விட்ரிடிபைடு டைல்ஸ்’
இவ்வகை ‘டைல்ஸ்’ வகைகள் (Glazed Vitrified Tiles or GVT Tiles or Digital Vitrified Tiles) ஜி.வி.டி டைல்ஸ் அதாவது ‘கிளாஸ்டு விட்ரிடிபைடு டைல்ஸ்’ என்று சொல்லப்படும். மேற்புறம் கண்ணாடி போன்ற பளபளப்பான தோற்றம் அளிப்பதுடன், பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்கள் கொண்டதாகவும் தயாரிக்கப்படுகின்றன. சந்தையில் இதை ‘டிஜிட்டல் விட்ரிடிபைடு டைல்ஸ்’ என்று சொல்லப்படுகிறது. இதிலும், மேட், கிளாஸி, ரஸ்டிக், வுட்டன் உள்ளிட்ட ‘பினிஷிங்’ கொண்டதாகவும் கிடைக்கிறது. ‘புல் பாடி விட்ரிபைடு டைல்ஸ்’ வகையும் இதுவும், ஒரே மாதிரி தோற்றம் தரும் என்று கட்டுனர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
மெருகூட்டப்பட்ட ‘டைல்ஸ்’
இவ்வகை பதிகற்கள் (Polished Glazed Vitrified Tiles or PG-VT Tiles) ஜி.வி.டி டைல்ஸ் வகைகளை ‘பாலிஷ்’ செய்யப்பட்டது போன்று பளபளப்பான தோற்றம் தரும். இதன் பளபளப்புக்காகவே பலரும் விரும்புகிறார்கள். இரு அடுக்கு ‘விட்ரிபைடு டைல்ஸ்’ சற்று கூடுதலான பட்ஜெட் கொண்டதாகவும், கச்சிதமான பராமரிப்புகள் தேவைப்படுவதாகவும் உள்ளது.
மேற்கண்டவை தவிர, ‘விட்ரிடிபைடு டைல்ஸ்’ தயாரிப்பில் ‘சால்ட்’ வகையும் (Soluble Salt Vitrified Tiles) தயாரிக்கப்படுகிறது. ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் பல வண்ணங்கள் கொண்டதாக இவை பளபளப்புடன் தயாரிக்கப்படுகின்றன. இவை, தற்போது அதிகமான உபயோகத்தில் இல்லை. மேலும், இவை, காலப்போக்கில் நிறம் மங்கி விடக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story