குடிநீர் பயன்பாட்டில் சிக்கன நடவடிக்கை


குடிநீர் பயன்பாட்டில் சிக்கன நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Nov 2019 9:45 AM GMT (Updated: 2 Nov 2019 9:45 AM GMT)

சென்னையில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த நிலை செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மாறத்தொடங்கியது. பரவலாகப் பெய்த மழை, வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து, கிருஷ்ணா நதி நீர் திறப்பு போன்ற காரணங்களால் சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு அகன்றுள்ளது.

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என விளம்பரங்கள் செய்யப்பட்ட நிலையில் மழை நீர் சேகரிப்பும் பெருமளவு கைகொடுத்துள்ளது.

மின்சாரப் பயன்பாடு அளவீட்டுக்கு மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிப்பதைப் போல குடிநீர் பயன்பாட்டிற்கும் மீட்டர் பொருத்தும் பணியில் சென்னை பெருநகர மாநகராட்சி ஈடுபட உள்ளது. முதல் கட்டமாக அடையாறு மண்டலத்தில் இந்த பணி தொடங்கப்பட்டு இருகிறது. குடிநீர் தொட்டி மற்றும் பம்பு ஆகியவற்றில் டிஜிட்டல் மீட்டர் பொருத்துவதன் மூலம் குடிநீர் வீணாவதும், குழாய்களில் கசிவதும் தடுக்கப்படும். குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் நீர் வீணாவதை தடுப்பது மட்டுமின்றி மொத்த பயன்பாட்டில் 35 சதவீதத்தை சேகரிக்க முடியும் எனவும் ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.

முதல் கட்டமாக அடையாறு மண்டலத்தில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி படிப்படியாக ஒவ்வொரு மண்டலத்திலும் தொடரும். வீடுகளை பொறுத்தவரை முதல் கட்டமாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பெங்களூரு, புனே போன்ற இந்திய நகரங்கள் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் குடிநீர் நுகர்வுக்கு டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதே முறை சென்னையிலும் அமல்படுத்தப்பட உள்ளது.


Next Story