உங்கள் முகவரி

மத்திய கட்டுமான ஆய்வு நிறுவன கண்டுபிடிப்புகள் + "||" + Central Construction Inspection Company Discoveries

மத்திய கட்டுமான ஆய்வு நிறுவன கண்டுபிடிப்புகள்

மத்திய  கட்டுமான   ஆய்வு   நிறுவன  கண்டுபிடிப்புகள்
உத்தரகாண்ட், ரூர்க்கி நகரில் அமைந்துள்ள மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகத்தின் கட்டுமான ஆய்வு நிறுவனம்.
த்தரகாண்ட், ரூர்க்கி நகரில் அமைந்துள்ள மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகத்தின் கட்டுமான ஆய்வு நிறுவனம் (Council of Scientific & Industrial Research  & Central Building Research Institute) பல்வேறு கட்டுமான துணைப் பொருட்களை ஆய்வில் கண்டறிந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

‘புளோரோ ஜிப்சம்   பிளாஸ்டர்’

கட்டுமான பணிகளில் உட்புறம் மற்றும் வெளிப்புற சுவர் பூச்சுக்களுக்கு ஏற்ற வகையில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் (Fluoro gypsum Plaster) ‘புளோரோ ஜிப்சம் பிளாஸ்டர்’ ஆகும். கண்ணாடி மற்றும் ‘சிலிக்கான்’ சில்லுகள் தயாரிக்கும் ஆலைகளில் ‘ஹைட்ரோபுளோரிக் ஆசிட்’ பயன்படுத்தப்படுகிறது. அதன் தயாரிப்பில் மீதமாகும் கழிவுகளிலிருந்து இவ்வகை ‘ஜிப்சம்’ தயாரிக்கப்படுகிறது. குறைவான தண்ணீர் பயன்பாடு, நெருப்பிலிருந்து பாதுகாப்பு, உறுதி மற்றும் வெளிப்புற இரைச்சல் தடுப்பு ஆகிய அம்சங்களை இந்த ‘ஜிப்சம் பிளாஸ்டர்’ கொண்டுள்ளது. இதன் மூலம், செங்கல் கட்டு, சுவர் மேல்பூச்சு பணிகள், ‘வால் பேனல்கள்’, டைல்ஸ் பதிப்பு போன்ற பணிகளை செய்ய இயலும் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.  

பூஞ்சையை   தடுக்கும்   பெயிண்டு   கலவை

சூழல் பாதுகாப்புக்கேற்ற வகையில் பெயிண்டுகளில் கலக்கக்கூடிய பூஞ்சை தடுப்புக்கான இயற்கை கலவையை சோதனை முறையில் மத்திய கட்டுமான ஆய்வு நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீலகிரி தைலம் (Eucalyptus) மற்றும் மிளகுக்கீரை எண்ணெய் (Peppermint) ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுவதால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் பெயிண்டு அளவில் ஒரு சதவிகிதம் இந்த கலவையை பயன்படுத்தினால் போதுமானது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த கலவையை சுவர்களின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் பூசப்படும் பெயிண்டில் கலந்து பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது.         

செயற்கை   மரப்பலகை

வீடுகளின் தலைவாசல் உள்ளிட்ட பல பகுதிகளில் மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவது வழக்கம். சூழல் பாதுகாப்பு என்ற அடிப்படையில் மரப்பலகைகளை செயற்கையாக இருவாக்கவும் சோதனைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் நெல் உமி (Rice  Husk) மற்றும் ‘பிளாஸ்டிக்’ பொருட்கள் மூலம் செயற்கை மரப்பலகையை மத்திய கட்டுமான ஆய்வு நிறுவனம் சோதனை முயற்சியாக உருவாக்கி இருக்கிறது. தேசிய கட்டிட விதிகளின் (NBC 2005, Section 3, Timber) அடிப்படையில் தயாரிக்கப்பட்டதுடன், இயற்கையான மரம் போன்ற தோற்றமும் கொண்டிருக்கும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் வீட்டுக்கான கதவு நிலைகள் செய்யப்பட்டு அதன் பயன்பாடு பற்றிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த செயற்கை மரமானது தச்சு வேலைகளுக்கு எளிதாகவும், கரையான்களால் அரிக்கப்படாத தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.      

சமையலறைக்கு    ஏற்ற    தீ    தடுப்பு   முறை

வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகளில் தீயணைப்பு முறை எளிதாக அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் அமந்திருக்க வேண்டும். குறிப்பாக, சமையலறையில் இல்லத்தரசிகளின் சுலப பயன்பாட்டுக்கு ஏற்ப 500 மி.லி மற்றும் ஒரு லிட்டர் கொள்கலன்களில் அடைக்கப்பட்ட திரவ வடிவ தீ அணைப்பு செயல்முறையை மத்திய கட்டுமான ஆய்வு நிறுவனம் சோதனை செய்துள்ளது. தீ பரவுவதற்கு ஆக்ஸிஜன் காரணம் என்ற நிலையில், இந்த தீ அணைப்பு திரவம் அதை கட்டுப்படுத்தி, அங்கு நிலவும் வெப்பத்தை பெருமளவு குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்கி தீயை கட்டுப்படுத்துகிறது. 8 முதல் 10 நொடி நேரத்துக்குள் 100 சதுர செ.மீ பரப்பில் உள்ள ‘கிளாஸ் ஏ’ அல்லது ‘பி’ வகை தீயை அணைத்து விடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.