வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் பிரபஞ்ச சக்தி


வாஸ்து   சாஸ்திரம்   குறிப்பிடும்   பிரபஞ்ச   சக்தி
x
தினத்தந்தி 9 Nov 2019 4:00 AM IST (Updated: 8 Nov 2019 6:19 PM IST)
t-max-icont-min-icon

ஆதிகால கலையாக சொல்லப்படும் வாஸ்து சாஸ்திரம் என்பது கல்வி, அனுபவம் மற்றும் நம்பிக்கை ஆகியவை இணைந்த கலையாக இருந்து வந்துள்ளது.

திகால கலையாக சொல்லப்படும் வாஸ்து சாஸ்திரம் என்பது கல்வி, அனுபவம் மற்றும் நம்பிக்கை ஆகியவை இணைந்த கலையாக இருந்து வந்துள்ளது. இந்திய வாஸ்து சாஸ்திரம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை கொண்டதாக நம்பப்படுகிறது. வாஸ்து என்பது திட்டமிட்டு வீடு கட்ட உதவும் விஞ்ஞானம் ஆகும். அதாவது, பேரண்டம் (Macrocosm) என்ற பிரபஞ்சம் மற்றும் சிற்றண்டம் (Microcosm) என்ற வீடு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வாழ்வியல் குறிக்கோளை அடிப்படையாக கொண்டது. 

சக்தி அலைகள்

பிரபஞ்சத்தின் சக்தி அலைகள் பூமியின் வடக்கிருந்து, தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் பயணம் செய்து, வசிக்கும் வீடு அமைக்கப்பட்டுள்ள திசையின் அடிப்படையில் செயல்பட்டு பலன்களை அளிக்கின்றன. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய சக்திகள் மற்றும் மனித உடலில் அடங்கியுள்ள அடிப்படை சக்திகள் ஆகியவை கட்டிட அமைப்புக்கான அடிப்படை தன்மையுடன் ஒத்துப்போகக் கூடிய வகையில், அதிர்வுகளை ஏற்படுத்தி, வீட்டில் வசிப்பவர்களுக்கு நற்பலன் தரும் வகையில் வாஸ்து சாஸ்திர விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.

சூரியனின் ஆற்றல்

காலை சூரியனின் கதிர்களில் புற ஊதா கதிர்களுடன் பகலின் மற்ற நேரத்தை விட, அதிக ஒளியும் குறைவான வெப்பமும் உள்ளதால் கிருமிகளை அழிக்கிறது. சூரியன் மேற்கு திசையை அணுகும்போது வெப்பம் அதிகரிப்பதுடன், அகச்சிவப்பு கதிர்களை அதிகமாக வெளியேற்றுகிறது. அது உடல் நலனுக்கு பாதிப்பை அளிப்பதாகும். அதனை உணர்ந்த வாஸ்து சாஸ்திரம் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் அதிக கதவுகளும், ஜன்னல்களும் அமைக்க வலியுறுத்துகிறது. அதனால், காலை சூரியனின் ஒளிக்கதிர்கள் தடையின்றி வீட்டிற்குள் நுழையும். பெரிய மரம், செடி, கொடிகள், உயர்ந்த சுவர்கள், சூரிய ஒளியைத் தடுக்கும் என்ற நிலையில் வடக்கிலும், கிழக்கிலும் அவை அமைக்கப்படுவதில்லை. 

‘பிராணா’ உயிர் சக்தி 

பூமியின் எட்டு திசைகளும், நான்கு பக்கங்கள் கொண்ட சதுரம் அல்லது செவ்வக வடிவ கட்டிடத்தில் பிரபஞ்சம் மற்றும் பூமியின் காந்த ஆற்றலை சமநிலையில் வைப்பதாகவும் கண்டறியப்பட்டது. எவ்வகை கட்டிடமாக இருந்தாலும் அவற்றில் நிலவும் ‘பிராணா’ என்ற உயிர் சக்தியானது வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு கோண திசைக்கு நகர்கிறது. கட்டிடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்கும் நிலையில் சக்தியின் அடர்த்தியை அது வடகிழக்கு–தென்மேற்கு கோணங்களில் சமநிலையில் இருக்கச் செய்கிறது. வடக்கு–தெற்கு திசைகளை நெருப்புக்கோடு என்ற அக்னி ரேகையும், கிழக்கு–மேற்கு திசைகளை தண்ணீர் கோடும், வடகிழக்கு–தென்மேற்கு ஆகிய கோண திசைகளை காற்றுக்கோடும் இணைப்பதாக வாஸ்து குறிப்பிடுகிறது. 

எட்டு திசை சக்திகள்

வீடுகளின் எட்டு திக்குகளிலும் நிலவும் சக்தி அலைகள் அளிக்கும் நன்மை–தீமை போன்ற பலன்களுக்கு ஏற்ப அவை அஷ்டதிக்கு பாலர்களாக உருவகம் செய்யப்பட்டன. கிழக்கு திக்கின் அதிபதி இந்திரன், தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவர். தெற்கு திசை அதிபதி எமன், உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்பவர். மேற்கு திசை அதிபதி வருணன், விதிகளுக்கு ஏற்ப செயல்பட்டு, பூமியின் சட்ட திட்டங்களுக்கு உதவுகிறார். வடக்கு திசை அதிபதியான குபேரன், செல்வம் மற்றும் புகழ் ஆகியவற்றை தருகிறார். 

வடகிழக்கு திக்கின் தேவதை ஈசானியன், தேவர்களில் இனியவர். ‘காஸ்மிக் சக்தி’ இவரது கட்டுப்பாட்டில் உள்ளது. தென்கிழக்கான அக்னி பாகம் நெருப்பு தேவதை ஆட்சி செய்கிறது. இந்த திக்கு அக்னி மூலமாக பெண்களின் உடல் நலம் காக்கப்படுகிறது. அக்னி சுப காரியங்களுக்கு உரியவர். கன்னி என்ற நைருதி மூலைக்கு அழிக்கும் அரக்கர்களின் தெய்வம் அதிபதி ஆவார். அவர் தலைமை, அதிகாரம், உடல் ஆரோக்கியம், வருமானம் ஆகியவற்றிற்கு அதிபதி ஆவார். வடமேற்கு மூலை அதிபதி வாயு, உடல் நலம், முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிபதி ஆவார். இவற்றுடன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய மகாபூதங்கள் அனைத்தும் தனித்தனி குணங்கள் கொண்டவை. அவை ஒன்றோடொன்று இணைந்து பல விதங்களில் செயல்படுகின்றன.

Next Story