காற்றை சுத்திகரிக்கும் கட்டுமான அமைப்பு


காற்றை சுத்திகரிக்கும் கட்டுமான அமைப்பு
x
தினத்தந்தி 23 Nov 2019 10:35 AM GMT (Updated: 23 Nov 2019 10:35 AM GMT)

காற்று மாசு பற்றிய விழிப்புணர்வு தற்போது உலகெங்கும் பரவலாக ஏற்பட்டு வருகிறது. தனிப்பட்ட கட்டமைப்புகளில் காற்றில் உள்ள மாசுகளை அகற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் பல்வேறு உலக நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அறைகளுக்குள் பயன்படுத்துவதை விட கட்டிடத்தையே காற்று மாசு அகற்றும் அமைப்பாக மாற்றுவது பற்றி ஐரோப்பிய கட்டிட வடிவமைப்பாளர்கள் சிந்தித்து வந்தனர்.

அந்த வகையில் லண்டனை சேர்ந்த ‘ஷெப்பர்டு ராப்சன்’ கட்டிடக்கலை நிறுவனத்துக்கு ஒரு வித்தியாசமான யோசனை தோன்றியது. அதாவது, லண்டன் நகரத்தின் ‘பாரிங்டன்’ மற்றும் ‘மூர்கேட்’ என்ற நெரிசலான இரு ஏரியாக்களுக்கு மத்தியில் உள்ள ‘சிட்டிகேப் ஹவுஸ்’ என்ற ஒரு பழைய கட்டிடத்தின் சுவர்களில் ‘வெர்டிகல் கார்டன்’ முறைப்படி கிட்டத்தட்ட 4 லட்சம் செடி வகைகளை வளர்க்கும் முறையை செயல்படுத்தியது. அதாவது, மொத்த கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ‘ட்ரெஸ்’ என்று சொல்லப்படும் இரும்பு கட்டமைப்புகளில் பசுமையான தாவர வகைகள் அழகாக வளர்க்கப்பட்டுள்ளன. ‘மிக்ஸ்டு யுஸ்’ அதாவது கலப்பு பயன்பாடு கொண்ட 11 மாடிக் கட்டமைப்பாக உள்ள அந்த கட்டிடத்தில் ‘பைவ் ஸ்டார்’ ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

தாவரங்கள் சுற்றுச்சுழலில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு இயல்பான குளிர்ச்சியை நிலவச்செய்வதுடன், ஆக்ஸிஜனையும் வெளிப்படுத்துகின்றன. அதன் அடிப்படையில், குறிப்பிட்ட பகுதியின் காற்றில் உள்ள மாசு அளவு கட்டுப்படுத்தப்படும் என்பது அந்த நிறுவனத்தினரின் எண்ணமாக இருந்தது. சமீபத்திய நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அந்த கட்டிடத்தில் உள்ள தாவர வகைகள் ஒரு வருடத்துக்கு 8 டன் கார்பன்டை ஆக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு, 6 டன் ஆக்ஸிஜனை வெளியிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தாவரங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள மாசுகளை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் வெளிப்புற இரைச்சல்களையும் உள்வாங்கிக்கொள்வதாக கட்டிடத்தின் வடிவமைப்பாளர்களில் ஒருவரான ‘டான்பர்’ என்பவர் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் கட்டிடத்தின் உட்பகுதியில் அமைதியான சூழல் ஏற்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, வெளிப்புற இரைச்சல்கள் அறைகளுக்குள் நுழைவது பெருமளவுக்கு தடுக்கப்படுகிறது. மேலை நாடுகளில் பல்வேறு வித்தியாசமான கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், இதுபோன்ற பசுமையான உயிர்த்தன்மை கொண்ட கட்டிடங்கள் குறைவாகவே உள்ளன.

‘சிட்டிகேப் ஹவுஸ்’ கட்டிடத்தின் மேல்மாடியில் ‘ரூப் டாப் கார்டன்’ அமைப்பு செய்யப்பட்டுள்ளதால், கட்டிடத்தில் இருப்பவர்கள் அங்கு வார இறுதி நாட்களில் ஓய்வெடுப்பதுடன், நகரத்தின் அழகையும் கண்டு களிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு முக்கியமான அம்சம் என்ன வென்றால், மழைநீர் சேகரிப்பு திட்டம் மூலம் அங்குள்ள தாவரங்களுக்கான தண்ணீர் பெறப்படுகிறது. பசுமையான தோற்றம் காரண மாக அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் மனதை அந்த கட்டிடம் கவர்ந்துள்ளது.

Next Story