பாதுகாப்பான ‘வாட்டர் ஹீட்டர்’ பயன்பாடு


பாதுகாப்பான ‘வாட்டர் ஹீட்டர்’ பயன்பாடு
x
தினத்தந்தி 7 Dec 2019 10:20 AM GMT (Updated: 7 Dec 2019 10:20 AM GMT)

குளிர் மற்றும் மழைக்காலங்களில் குளியலறைகளில் பயன்படுத்தும் தண்ணீரை விறகு அடுப்பு, பாய்லர் போன்ற எளிதான முறைகளில் சூடுபடுத்துவது பழக்கத்தில் இருந்து வந்தது.

கியாஸ் அறிமுகமான பின்னர் சுடுநீர் வைப்பது சுலபமாக இருந்தது. பின்னர், அறிமுகமான வாட்டர் ஹீட்டர்கள் சுவிட்சைத் தட்டினால் சுடுநீர் தயார் என்ற நிலையை உருவாக்கின. இவற்றில் மின்சாரமே பிரதானமாக உள்ள நிலையில் அதன் பயன்பாட்டில் கவனம் அவசியமாகிறது. பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் ‘வாட்டர் ஹீட்டர்’ பற்றி அனுபவம் வாய்ந்த எலக்ட்ரீசியன்கள் அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம்.

‘கச்சிதமான வயரிங்’

வீடுகளில் உள்ள அனைத்து மின்சார சாதனங்களுக்கும் சரியான வயரிங் மற்றும் முறையான பராமரிப்புகளை தொடர்ச்சியாக செய்து வருவது முக்கியம். அதன் அடிப்படையில் வீடுகளில் கச்சிதமாக வயரிங் செய்யப்பட்டிருப்பது அவசியம். குறிப்பாக ‘எர்த்’ அமைப்பு சரியாக இருக்க வேண்டும். அத்துடன், வீடுகளுக்கு தேவையான ‘இ.எல்.சி’பி‘ (EL-CB) ‘சர்க்கியூட் பிரேக்கர்’ பொருத்துவது பாதுகாப்பானது. அதன் மூலம், வீடுகளில் எந்த இடத்தில் ‘எர்த் லீக்கேஜ்’ ஆனாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடும். அதன் அடிப்படையில், ஈரப்பதம் அதிகம் உள்ள குளியலறைகளில் பொருத்தப்பட்டுள்ள ‘எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்களில்’ மின் கசிவு காரணமாக ‘ஷாக்’ அடிக்கும் முன்னரே மின் தடை உண்டாக்கப்படும்.

‘சுவிட்ச்’ வகைகள்

கட்டிடங்களுக்கான வயரிங் பணிகளின்போது அவசியம் ‘பேஸ்’, ‘நியூட்ரல்’, ‘எர்த்’ ஆகிய மூன்று வகையில் ‘வயரிங்’ செய்யப்பட்டிருப்பது அவசியம். ‘வாட்டர் ஹீட்டர்’ கச்சிதமாக செயல்பட சரியான ‘வயரிங்’ மற்றும் 20 ஆம்ஸ் திறம் கொண்ட சுவிட்ச் வகைகளை பயன்படுத்துவது நல்லது. சுவிட்ச் எப்போதுமே குளியலறைக்கு வெளியில்தான் இருக்கவேண்டும்.

தண்ணீர் இருப்பு

மேல்நிலை நீர் தொட்டியில் தண்ணீர் இருப்பு பற்றி உறுதி செய்து கொண்ட பின்னரே வாட்டர் ஹீட்டரை பயன்படுத்த வேண்டும். தொட்டியியிலிருந்து தண்ணீர் சப்ளை இல்லாத காரணத்தால், காலியாக இருக்கும் வாட்டர் ஹீட்டர் ஆன் செய்யும் நிலையில், அதன் ‘எலிமென்ட்’ தானாக சூடாகி பழுதடைந்து விடும் நிலையில், ‘ஷாக்’ அடிக்கும் சூழல் உருவாகும். நிலத்தடி நீரில் உப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை வாட்டர் ஹீட்டரை அவசியம் சர்வீஸ் செய்து கொள்ளவேண்டும்.

‘சோலார் வாட்டர் ஹீட்டர்’

மின்சாரம் தேவையில்லை, எலக்ட்ரிக் ஷாக் கிடையாது, கரன்டு பில் வராது என்ற அடிப்படையில் பல இடங்களில் ‘சோலார் வாட்டர் ஹீட்டர்கள்’ தற்போது பரவலாகி வருகின்றன. பராமரிக்க எளிதான இவற்றை மாடியில் எளிதாக அமைத்துக்கொள்ளலாம். இவற்றை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்தால் போதும் என்று அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலத்தடி நீரில் உப்பு அளவு அதிகமாக இருக்கும் நிலையில், உயர்ரக ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ டேங்குகள் கொண்ட ‘வாட்டர் ஹீட்டர்களை’ பயன்படுத்தினால் நீடித்து உழைக்கும். மழைக்காலங்களில் தண்ணீர் சற்று சூடு குறைவாக வரலாம் என்ற நிலையில், மின்சாரத்தில் இயங்கும் ‘எலிமென்ட்’ அமைப்புகளை சோலார் டேங்கில் அமைத்தும் பயன்படுத்தலாம்.

Next Story