கட்டிட அமைப்புகளை பாதிக்கும் இருவித எடைகள்


கட்டிட அமைப்புகளை பாதிக்கும் இருவித எடைகள்
x
தினத்தந்தி 7 Dec 2019 4:22 PM IST (Updated: 7 Dec 2019 4:22 PM IST)
t-max-icont-min-icon

ஒரு மனைப்பிரிவு அல்லது இடத்தில் அமைக்கப்படும் கட்டமைப்பை பாதிக்கும் இரண்டு வித எடைகள் பற்றி கணக்கில் கொண்டு அதனை வடிவமைப்பு செய்யப்படுவது வழக்கம்.

உயரமான கட்டிடங்கள் கட்டப்படும்போது காற்றின் சக்தி (Wind Force) உள்ளிட்ட, அவற்றின் மீது தாக்கம் செலுத்தக்கூடிய பல இயற்கை சக்திகளின் தன்மைகள் மற்றும் எடை ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகின்றன என்று சிவில் பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் கட்டமைப்புகளின் மீது தாக்கம் செலுத்தும் இரு வித எடைகள் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

* கட்டிடங்களை பாதிக்கும் முதலாவது எடை ‘டெட் லோடு’ (Dead Load) ஆகும். அதாவது, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தின் அனைத்து பகுதிகளின்  ஒட்டுமொத்த எடை ‘டெட் லோடு‘ என்று சொல்லப்படும். இந்த எடை அஸ்திவாரத்திற்கு கச்சிதமாக பகிர்ந்து அளிக்கப் படும். இது மாறாத தன்மை கொண்டது.

* இரண்டாவது எடை என்பது ‘லிவ் லோடு’ (Live Load) ஆகும். அதாவது, கட்டிடத்தில் வசிப்பவர்கள், அவ்வப்போது வந்து செல்பவர்கள், வீட்டில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் ஆகியவை ‘லிவ்லோடு‘ கணக்கில் வருகின்றன. இந்த எடை என்பது மாறிக்கொண்டே இருக்கும் தன்மை பெற்றதாகும்.

கட்டுமானப் பணிகளின்போது மேற்கண்ட இருவித எடைகளையும் தோராயமாக கணக்கீடு செய்து, அதற்கேற்ப அஸ்திவாரம் மற்றும் கட்டிட வடிவமைப்பு ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. எந்த ஒரு கட்டிடத்துக்கும், அதன் அடிப்படை அமைப்பு சார்ந்த பாகங்களில் மாற்றங்கள் செய்யப்படாதவரை அதன் சுமை தாங்கும் தன்மையில் மாற்றம் எதுவும் ஏற்படுவதில்லை. அதன் அடிப்படையில், கட்டிட விரிவாக்கப் பணிகளை செய்யும்போது மேற்குறிப்பிட்ட இரு விதமான சுமைகளையும் கணக்கில் கொண்டு செயல்படவேண்டும்.

மேலும், கட்டிடங்களில் வைக்கப்படும் பொருட்களால் ஏற்படும் சுமையான ‘லைவ் லோடு‘ மாறுதலுக்கு உட்பட்டது. அதனால், வரைபட நிலையிலேயே இருவித சுமைகளுக்கான உத்தேச மதிப்பீட்டை தயாரித்துக்கொள்வது அவசியம். அவ்வாறு கணக்கிடப்படும் ‘லிவ் லோடு’ உத்தேச மதிப்பீட்டின்படி, குடியிருப்புகளுக்கான கட்டமைப்புகளில் ஒரு சதுர மீட்டருக்கு கிட்டத்தட்ட 250 கிலோ எடை என்றும், தொழிற்சாலைகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 1000 கிலோ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தூண்கள், பீம்கள், தளம் ஆகியவற்றின் அளவு முடிவு செய்யப்படுகிறது. அதனால்தான் குடியிருப்பு பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட கட்டிடங்களை தொழிற்சாலையாக பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக, இயல்பான சுற்றுச்சூழலில் வீசும் காற்று காரணமாக, ஒரு சதுர மீட்டருக்கு சுமார் 150 கிலோ வரை கட்டிடத்தில் சுமை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

Next Story