மாடிப்படிகள் அமைப்பில் வாஸ்து குறிப்புகள்


மாடிப்படிகள் அமைப்பில் வாஸ்து குறிப்புகள்
x
தினத்தந்தி 4 Jan 2020 8:59 AM GMT (Updated: 2020-01-04T14:29:52+05:30)

தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடிப்படிகள் என்பது தவிர்க்க இயலாதது. குறிப்பாக, அடுக்குமாடிகள் வடிவமைப்பில் அதன் கட்டமைப்புக்கு பொருத்தமான இடத்தில் மாடிப்படிகள் அமைக்கப்படுகின்றன.

வாஸ்து பற்றிய ஆர்வமும், நம்பிக்கையும் பரவலாக உள்ள இன்றைய காலகட்டத்தில் பொறியியல் விதிமுறைகளும், வாஸ்து சாஸ்திர விதிகளும் அனைத்து கட்டமைப்புகளிலும் கச்சிதமாக பொருந்தி வருவதில்லை. அடுக்குமாடி வீடுகளில் குடியேறும் பலருக்கும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மாடிப்படிகள் வாஸ்து விதிகளில் சொல்லப்பட்டுள்ள விதிகளுக்கு மாறாக உள்ளதாக மனதிற்குள் எண்ணுவது உண்டு. அந்த நிலையில் வாஸ்து ரீதியாக கடைப்பிடிக்க வேண்டிய எளிமையான முறைகள் பற்றி வாஸ்து வல்லுனர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இங்கே காணலாம்.

* மாடிப்படிகளில் ஏறும் விதமானது கடிகார சுற்று அமைப்பில் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. அதாவது, ஏறுபவர் வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு திசையிலிருந்து மேற்கு நோக்கியோ செல்வது போல இருக்க வேண்டும். அதற்கு மாறாக உள்ள நிலையில் படிக்கட்டுகள் அமைப்புக்கு கீழ்ப்புறத்தில் இரு புறங்களிலும் மலர்கள் வைக்கப்பட்ட ‘பிளவர் வாஸ்’ வைத்துக்கொள்ளலாம். உலர்ந்த மலர்கள் மாற்றப்பட வேண்டும்.

* வாஸ்து விதிகளுக்கு மாறாக, வீட்டின் ஈசானிய திக்கில் மாடிப்படிகள் அமைந்திருக்கும் பட்சத்தில், முதல் படிக்கட்டின் இரு புறமும் செம்பு பாத்திர ‘பிளவர் வாஸ்’ வைத்து அதில் வாசமுள்ள மலர்களை வைத்துக்கொள்ளலாம்.

* சில குடியிருப்புகளில் வீட்டின் தலைவாசலுக்கு எதிராக மாடிப்படிகள் அமைந்திருக்கக்கூடும். அந்த நிலையில், எண்கோண கண்ணாடி அல்லது சீன ‘பெங் சூயி’ முறையிலான ‘பா குவா’ கண்ணாடியை தலைவாசலுக்கு மேலே பொருத்தி விடலாம். அதன் மூலம், படிகள் எதிரொலிக்கப்பட்டு அதன் பாதிப்புகள் குறைகிறது என்பது நம்பிக்கை.

* வீடுகளுக்கு உட்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள மாடிப்படிகள் எல்லா வீடுகளிலும் தெற்கு அல்லது மேற்கு பகுதிகளில் இருப்பதில்லை. மேலும், அவை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசை சுவர்களை ஒட்டியும் அமைக்கப்பட்டு இருக்கலாம். அந்த நிலையில், படிகளின் எண்ணிக்கையானது, 11, 13, 15, 17, 19, 21 போன்ற ஒற்றைப்படையில் இருக்கும்படி சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி கொள்ளலாம்.

* பூஜையறை, சமையலறை ஆகியவற்றை ஒட்டியவாறு படிக்கட்டுகள் அமைந்திருந்தால் அவற்றுக்கு ‘டார்க் கலர் பெயிண்டிங்’ செய்யப்பட்டிருப்பது கூடாது. அவற்றுக்கு வெளிர் நிறம் கொண்ட ‘பெயிண்டிங்’ செய்வது நல்லது.

* படிக்கட்டுகள் அல்லது அதன் கைப்பிடி சுவர் ஆகியவை இடிந்திருப்பது அல்லது விரிசல்கள் இருப்பது ஆகிய குறைபாடுகளை உடனடியாக கவனித்து சரி செய்வது அவசியம்.

Next Story